முடிவுக்கு வந்தது போர்..! விரைவில் தலிபான் ஆட்சி - பதவி ஏற்பு விழாவுக்கு சீனா, பாகிஸ்தானுக்கு அழைப்பு? - TAMIL BOOKS FREE PDF

tamil books and story reading portal

Post Top Ad

Monday, September 6, 2021

முடிவுக்கு வந்தது போர்..! விரைவில் தலிபான் ஆட்சி - பதவி ஏற்பு விழாவுக்கு சீனா, பாகிஸ்தானுக்கு அழைப்பு?

முடிவுக்கு வந்தது போர்..! விரைவில் தலிபான் ஆட்சி - பதவி ஏற்பு விழாவுக்கு சீனா, பாகிஸ்தானுக்கு அழைப்பு?


ஆப்கானிஸ்தானில் ஆட்சி அமைப்பது குறித்து விரைவில் அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும் என தலிபான்கள் அறிவித்துள்ளனர்.

ஆப்கானிஸ்தானில், பஞ்ச்ஷிர் மாகாணத்தை கைப்பற்றி உள்ளதாகத் தெரிவித்துள்ள தலிபான்கள், போர் முடிவுக்கு வந்துள்ளதாகவும், விரைவில் புதிய அரசு தொடர்பான அறிவிப்பு வெளியாகும் என்றும் அறிவித்துள்ளனர்.

​ஆப்கனை கைப்பற்றிய தலிபான்

தெற்கு ஆசிய நாடான ஆப்கானிஸ்தானில், சுமார் 20 ஆண்டுகளுக்குப் பிறகு ஆட்சி அதிகாரத்தை தலிபான் அமைப்பினர் கைப்பற்றி உள்ளனர். இதனால் அங்கு பதற்றமான சூழ்நிலை நிலவுகிறது. இந்நிலையில், புதிய அரசு அமைக்கும் பணியில் தலிபான்கள் படு தீவிரமாக ஈடுபட்டுள்ளனர். ஆட்சி அமைக்கும் விவகாரத்தை கையாள தனிக் குழுவை தலிபான்கள் நியமித்துள்ளதாகத் தெரிகிறது.

யார் தலைமையில் ஆட்சி?
ஆப்கானிஸ்தானில், தலிபான் அமைப்பின் அரசியல் பிரிவுத் தலைவர் முல்லா அப்துல் கனி பரதர் தலைமையில் புதிய அரசு அமைய உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. தலிபான் உயர் தலைவர் ஹைபத்துல்லா அகுந்த்ஸடா தலைமையில் தான் அதிபர் செயல்படுவார் என்றும் கூறப்படுகிறது. இது தொடர்பான அறிவிப்பு விரைவில் வெளியாகும் என கூறப்படுகிறது

​பஞ்ச்ஷிரை கைப்பற்றிய தலிபான்கள்
ஆப்கானிஸ்தானின் பெரும்பாலான பகுதிகளை தலிபான்கள் கைப்பற்றினாலும், பஞ்ச்ஷிர் மாகாணத்தை அவர்களால் கைப்பற்ற முடியாமல் இருந்தது. தலிபான்களுக்கு எதிரான போராளிகள் குழு அவர்களுக்கு சிம்ம சொப்பனமாக விளங்கியது. இரு தரப்புக்கு இடையே நடந்த சண்டையில், 700க்கும் மேற்பட்ட தலிபான்கள் கொல்லப்பட்டதாக தகவல்கள் வெளியாகின.

இந்நிலையில் இன்று, பஞ்ச்ஷிர் மாகாணத்தை கைப்பற்றி விட்டதாக தலிபான்கள் அறிவித்துள்ள நிலையில், ஆட்சி அமைப்பது குறித்து ஓரிரு நாட்களில் அறிவிக்க உள்ளதாகத் தெரிவித்துள்ளனர். இதற்கிடையே பஞ்ச்ஷிர் மாகாணத்தை தலிபான்கள் கைப்பற்றவில்லை என போராளிகள் குழுவினர் தெரிவித்துள்ளனர்

​ஓரிரு நாட்களில் அறிவிப்பு!
ஆப்கானிஸ்தான் முழுவதையும் தங்கள் கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வந்துள்ள தலிபான்கள், விரைவில் ஆட்சி அமைக்க உள்ளனர். இதற்காக ஒரு தனிக் கமிட்டியை அவர்கள் அமைத்துள்ளனர். அந்த கமிட்டியில் புதிய அரசு எப்படி அமைய வேண்டும், அதில் யார் யார் நிர்வாகிகளாக இருக்க வேண்டும் என்பது போன்ற அம்சங்கள் குறித்து பேச்சுவார்த்தை நடந்து வந்தது. தற்போது ஆட்சி அமைக்கும் பணி இறுதி கட்டத்தை எட்டி உள்ளது.

​எங்களுக்குள் மோதலா? - தலிபான்கள் விளக்கம்.
தலிபான் செய்தித் தொடர்பாளர் ஜபிஹுல்லா முஜாஹித் கூறியதாவது:

ஆட்சி அமைப்பதில் தாமதம் ஏதும் ஏற்படவில்லை. கடுமையான மோதல் இருப்பதாக சிலர் கூறுவது தவறானது. கருத்து வேறுபாடுகள் ஏதுமில்லை. பேச்சுவார்த்தை முடிந்து விட்டது. சில தொழில்நுட்ப விஷயங்கள் மட்டுமே மீதமுள்ளன.புதிய ஆப்கானிஸ்தான் அரசு எதிர்காலத்தில் மாற்றங்களை நோக்கி நடைபோடும். இறுதி முடிவுகள் விரைவில் எடுக்கப்படவுள்ளது. தொழில்நுட்பம் சார்ந்த சில சிக்கல்கள் தீர்க்கப்பட்டவுடன் புதிய அரசு குறித்து விரைவில் அறிவிப்போம்.

இவ்வாறு அவர் கூறினார்.

​சீனா, பாகிஸ்தானுக்கு அழைப்பு?
ஆப்கானிஸ்தானில், தலிபான்கள் தலைமையிலான புதிய அரசின் பதவி ஏற்பு விழா தலைநகர் காபூலில் விரைவில் நடைபெற உள்ளது. இந்த பதவி ஏற்பு விழாவில் பங்கேற்க வரும்படி, சீனா, பாகிஸ்தான், ரஷ்யா உள்ளிட்ட நாடுகளுக்கு தலிபான்கள் அழைப்பிதழ் அனுப்பி உள்ளதாகக் கூறப்படுகிறது.

No comments:

Post a Comment

Post Top Ad