செரிமான சக்தியை அதிகரிக்க நாம் கடைபிடிக்க வேண்டிய விஷயங்கள்... ஊட்டச்சத்து நிபுணர்கள் கூறுவது என்ன... - TAMIL BOOKS FREE PDF

tamil books and story reading portal

Post Top Ad

Monday, September 6, 2021

செரிமான சக்தியை அதிகரிக்க நாம் கடைபிடிக்க வேண்டிய விஷயங்கள்... ஊட்டச்சத்து நிபுணர்கள் கூறுவது என்ன...

செரிமான சக்தியை அதிகரிக்க நாம் கடைபிடிக்க வேண்டிய விஷயங்கள்... ஊட்டச்சத்து நிபுணர்கள் கூறுவது என்ன...


நம் உடலின் ஆதாரப் புள்ளியாக செரிமான அமைப்பு உள்ளது. இந்தப் பிரபஞ்சத்தில் அனைத்து விஷயங்களுக்கு மையமாக இருப்பது ஆற்றல் என அறிவியல் கூறுகிறது. பிரபஞ்சம் மட்டுமின்றி அனைத்து விஷயங்களுக்கும் ஆற்றலே முக்கிய காரணமாக இருக்கிறது. நமது உடலும் ஆற்றலைக் கொண்டே இயங்குகிறது. நமது உடலுக்குத் தேவையான ஆற்றலை நமது செரிமான அமைப்புகளே உற்பத்தி செய்கின்றன. எனவே செரிமான அமைப்புகளை ஆரோக்கியமாக வைத்துக்கொள்வது முக்கியமாகும். அதற்கான சில உதவிக்குறிப்புகளை இப்போது பார்க்கலாம்.
உடலின் ஒட்டுமொத்த இயக்கத்திற்கும் செரிமான அமைப்புக்கும் இடையே நெருங்கிய தொடர்புண்டு. நாம் உண்ணும் உணவில் இருந்தே நமது உடலுக்குத் தேவையான வைட்டமின்கள், சத்துக்கள், தாதுப்பொருட்கள் அனைத்தும் கிடைக்கின்றன, இந்த ஆற்றல்களே உடல் இயக்கத்திற்கு உதவுகின்றன. நமது உடல் உள் உறுப்புகளில் துவங்கி கால், கை என வெளி பாகங்கள் வரை அனைத்தும் ஆற்றலைக் கொண்டே இயங்குகின்றன.
ஆற்றலை நாம் பெறுவதற்கு பசி எடுப்பது ஒரு அறிகுறியாக உள்ளது. நாம் உண்ட உணவை நமது செரிமான அமைப்பானது அரைத்து அதில் உள்ள ஆற்றலை உறிஞ்சுகிறது. உறிஞ்சிய ஆற்றலை உடல் பாகங்களுக்கு வழங்குகிறது. ஆனால் இந்த ஆற்றலை உறிஞ்சுவதற்கு நமது செரிமான அமைப்பு ஆரோக்கியமாக இருக்க வேண்டும். ஒருவேளை நமது செரிமான அமைப்பில் ஏதாவது பிரச்சனை ஏற்படுகிறது எனில் நமக்கு பசி ஏற்படாது. அல்லது உணவு செரிமானம் ஆவதில் பிரச்சனைகள் ஏற்படும்.

​செரிமான அமைப்பு
செரிமான அமைப்பை சரியாக வைத்திருக்காமல் போனால் நாம் சரியாக உணவு உண்ண முடியாமல் போகலாம். மேலும் உடலுக்குத் தேவையான ஊட்டச்சத்துக்கள் இதனால் கிடைக்காமல் போகலாம். செரிமான பிரச்சனைதானே எனக் கண்டுக்கொள்ளாமல் விட்டால் நாளடைவில் அது மோசமான ஊட்டச்சத்துப் பிரச்சனையை ஏற்படுத்தலாம், எனவே செரிமான அமைப்பை சரியாக வைத்துக்கொள்வது நமது உடலின் அனைத்து பாகங்களுக்கும் நன்மை அளிக்கக்கூடிய விஷயமாகும்.

செரிமான அமைப்பை ஆரோக்கியமாக வைத்துக்கொள்ள உதவும் சில உதவிக்குறிப்புகளை நாங்கள் வரிசைப்படுத்தியுள்ளோம். நீங்கள் ஆரோக்கியமான வாழ்க்கையை வாழ விரும்புகிறீர்கள் எனில் உங்களுக்கு இந்த உதவிக்குறிப்புகள் பயனுள்ளதாக இருக்கலாம்.செரிமான அமைப்பு என்பது உடலின் பெரும் பகுதியைக் குறிக்கும் சொல் ஆகும். வாயில் துவங்கி மலத்துவாரம் வரை உள்ள உடலின் பாகங்களின் அமைப்பே செரிமான அமைப்பு என அழைக்கப்படுகிறது. இந்த செரிமான அமைப்பில் ஏற்படும் சிறிய பாதிப்புகள் கூட நமக்கு அசெளகரியத்தை ஏற்படுத்தும், மேலும் உடலுக்குத் தேவையில்லாத ஆரோக்கியமற்ற உணவுகளை எடுத்துக்கொள்ளும்போது அது செரிமான அமைப்பில் பாதிப்பை ஏற்படுத்தலாம்.

செரிமான அமைப்பானது நாம் உண்ணும் உணவில் உள்ள சத்துக்களை உறிஞ்சி அதை உடலின் அனைத்து பாகங்களுக்கும் அனுப்புகிறது.

​செரிமானத்தை மேம்படுத்தும் வழிகள்
வெல்லம் மற்றும் நெய்

நாம் உண்ணும் மூன்று அல்லது நான்கு வேளை உணவுகளில் மதிய உணவிற்கு முக்கிய பங்குண்டு. அதிலும் இந்திய பழக்கவழக்கங்களில் மதிய உணவு முக்கிய பங்கு வகிக்கிறது. மற்ற வேளைகளில் குறைவான அளவில் உணவை எடுத்துக்கொண்டாலும் நாம் மதிய வேளையில்தான் அதிகமான உணவுகளை எடுத்துக்கொள்கிறோம். அதிகமான உணவுகளை எடுத்துக்கொள்வதால் சிலருக்கு செரிமான பிரச்சனைகள் ஏற்படலாம்.

எனவே மதிய உணவிற்கு பிறகு ஒரு தேக்கரண்டி நெய்யில் வெல்லத்தை கலந்து சாப்பிடவும். இந்தக் கலவையானது செரிமான சக்தி அதிகரிக்க உதவுகிறது.
​உலர் திராட்சை, தயிர்
தயிர் செரிமான சக்திக்கு நன்மை பயக்கக்கூடிய பாக்டீரியாக்களை ஊக்குவிக்கிறது. எனவே தயிருடன் உலர்ந்த திராட்சையை சேர்த்து சாப்பிடுவது செரிமான அமைப்பிற்கு நன்மை பயக்கிறது. இவை இரண்டும் ஒன்றாக சேரும்போது ப்ரீபயாடிக்குகளாகச் செயல்படுகின்றன. மேலும் குடலில் நல்ல பாக்டீரியாக்களின் வளர்ச்சியை இவை அதிகரிக்கின்றன. மாலை 3 அல்லது 4 மணி அளவில் தயிர் மற்றும் உலர்ந்த திராட்சை கலவையை சாப்பிடலாம்.

​தினமும் ஒரு வாழைப்பழம் சாப்பிடலாம்
வயிற்றில் ஏதாவது செரிமான கோளாறு உள்ளது என கூறினால் வாழைப்பழம் உண்ணுமாறு பல வீடுகளில் பெற்றோர்கள் சொல்வதை கேட்டிருக்கலாம். ஏனெனில் உண்மையிலேயே வாழைப்பழம் செரிமான பிரச்சனைகளை சரி செய்ய கூடிய ஒரு பழமாகும். மேலும் இது பல்வேறு ஊட்டச்சத்துக்களை கொண்டுள்ளது. எனவே காலையில் அல்லது மாலையில் ஒரு சிற்றுண்டியாக தினமும் வாழைப்பழத்தை எடுத்துக் கொள்ளலாம்.
மதியம் தூங்குவதால் சோம்பல் வந்துவிடும் என பலர் சொல்லக் கேட்டிருக்கலாம். ஆனால் மதிய நேர தூக்கம் என்பது ஒரு நல்ல பழக்கமாகும், ஆனால் அது அளவோடு இருக்க வேண்டும். மதிய நேரங்களில் 15 முதல் 20 நிமிடம் வரை தூங்கலாம். இது உங்களுக்குப் புத்துணர்ச்சியை ஏற்படுத்தும், மேலும் இது செரிமான அமைப்பிற்கு நன்மை பயக்கிறது. இதனால் நாம் உண்ணும் உணவானது எளிதில் செரிமானமாகிறது. எனவே தினமும் மதிய வேளையில் குறிப்பிட்ட நேரம் தூங்குவதை பழக்கமாக்கி கொள்ளலாம்.

​நீரிழப்பு
செரிமான அமைப்பில் மட்டுமின்றி ஒட்டுமொத்த உடல் நன்மைக்கும் நீர் முக்கிய காரணமாக உள்ளது. நமது உடலானது அதிகப்பட்சமாக நீரை கொண்டுள்ளது. எனவே தினமும் நமது உடலுக்கு தேவையான அளவில் நீரை எடுத்துக்கொள்வது அவசியமாகும். தினமும் சரியான அளவு தண்ணீர் குடிப்பவர்களுக்கு செரிமான அமைப்பானது ஆரோக்கியமாக இருக்கிறது.
​மாலையில் காபி
தினமும் காபி குடிப்பது என்பது பலருக்கு அன்றாட பழக்கமாக இருக்கிறது. இன்னும் சிலரால் காபி குடிக்காமல் இருக்கவே முடியாது என்கிற நிலையும் இருக்கிறது. ஆனால் தினசரி காபி அருந்துவதை குறைப்பது நல்லது. ஏனெனில் காபி செரிமான அமைப்பில் பிரச்சனையை ஏற்படுத்தலாம். காபி குடிப்பதை நிறுத்த முடியாது என்றாலும் தினமும் 2 முதல் 3 கப் காபி குடிப்பவர்கள் அதைக் குடிப்பதை குறைக்கலாம். முக்கியமாக மாலை 4 மணிக்கு மேல் க்ரீன் டீ, காபி உள்ள காஃபின் பானங்களைக் குடிப்பதை தவிர்ப்பது நல்லது.

​லெக்ஸாடிவ்ஸ் மருந்துகளைத் தவிர்க்கவும்
பொதுவாக வயிறு சார்ந்த பிரச்சனைகள் அல்லது செரிமான பிரச்சனைகள் ஏற்படும்போது வயிற்று போக்கை ஏற்படுத்தும் மாத்திரைகளை எடுத்துக்கொள்ளுமாறு சிலர் பரிந்துரைப்பதுண்டு. இந்த வயிற்று போக்கை ஏற்படுத்தும் மாத்திரைகளே லெக்ஸாடிவ்ஸ் ஆகும். இந்த மாத்திரைகளை எடுத்துக்கொள்வது உண்மையில் வயிற்றுக்கு தீங்கை ஏற்படுத்தும். மேலும் இதை அதிகமாக எடுத்துக்கொண்டால் அதனால் கடுமையான வயிற்றுப்போக்கு ஏற்பட்டு உடலில் நீரிழப்பு ஏற்படும் அபாயம் உள்ளது.

எனவே அதற்குப் பதிலாக நெய், தேங்காய், வேர்க்கடலை போன்ற உணவுகளை சாப்பிடலாம்.
​உணவு விகிதம்
நாம் எந்த வகையில் உணவுகளை எடுத்துக்கொள்கிறோம் என்பதை கொண்டும் நமது செரிமான அமைப்பின் ஆரோக்கியத்தில் மாற்றம் ஏற்படுகிறது. எனவே, சரியான விகிதத்தில் உணவுகளை எடுத்துக்கொள்ளுங்கள். உணவில் அரிசி மற்றும் ரொட்டி (ப்ரட்) போன்றவை குறைவாகவும் பருப்பு வகைகளை அதிகமாகவும் சேர்த்துக்கொள்வது செரிமான அமைப்பில் பிரச்சனைகளை ஏற்படுத்தலாம். எனவே அனைத்து உணவுகளையும் சரியான விகிதத்தில் உணவுகளை எடுத்துக்கொள்ள மறக்க வேண்டாம்.
நமது உடல் செயல்பாட்டிற்கும் குடலின் இயக்கத்திற்கும் இடையே பல்வேறு தொடர்புகள் உண்டு. அதிகமான அல்லது கடுமையான வேலை செய்பவர்களுக்குத் தொப்பை, உடல் கொழுப்பு போன்ற பிரச்சனைகள் அதிகம் ஏற்படுவதில்லை. ஆனால் அமர்ந்து வேலை செய்பவர்கள் தொப்பை உண்டாவதற்கான வாய்ப்புகள் அதிகமாக உள்ளன, எனவே ஒவ்வொரு மனிதனும் தனது செரிமான அமைப்பை ஆரோக்கியமாக வைத்துக்கொள்ள உடற்பயிற்சி செய்வது அவசியமாகும். எனவே மேலே சொன்ன விஷயங்களைப் பின்பற்றுவதன் மூலம் நமது செரிமான அமைப்பை நம்மால் ஆரோக்கியமாக வைத்துக்கொள்ள முடியும்.

No comments:

Post a Comment

Post Top Ad