குழந்தையிடமிருந்து பிடுங்கப்படும் மொழி உரிமை! - TAMIL BOOKS FREE PDF

tamil books and story reading portal

Post Top Ad

Friday, September 10, 2021

குழந்தையிடமிருந்து பிடுங்கப்படும் மொழி உரிமை!

குழந்தையிடமிருந்து பிடுங்கப்படும் மொழி உரிமை!

விரும்பியோ விரும்பாமலோ தமிழகத்தில் உயர்நிலை, மேல்நிலை வகுப்புகளுக்கான பள்ளிகள் திறக்கப்பட்டுவிட்டன. பெற்றோர்கள் தைரியத்துடனோ தைரியமாகக் காட்டிக்கொண்டோ பிள்ளைகளைப் பள்ளிகளுக்கு அனுப்பத் தொடங்கிவிட்டார்கள். குழந்தைகளைப் பொறுத்தவரையில் நண்பர்களின் முகங்களைக் காண்பதிலேயே அழுத்தங்கள் குறைந்து கற்றல் முனைப்புகளில் ஈடுபடத் தொடங்கிவிட்டார்கள். குறிப்பாகத் தனியார் பள்ளிகளில் சேர்க்கப்பட்டவர்கள் ஆன்லைன் அபத்தங்களோடு ஒப்பிடுகையில் நேரடி வகுப்பறையின் கெடுபிடிகள் மேலானவை என்ற எண்ணத்தை வெளிப்படுத்துகிறார்கள். தொடக்கநிலை வகுப்புகளும் பள்ளிகளும் எப்போது திறக்கப்படும் என்ற எதிர்பார்ப்பும் பரவலாக இருக்கிறது.

பல தனியார் பள்ளிகள், குறிப்பாக “கார்ப்பரேட்” நிறுவனங்களாக உள்ள நிர்வாகங்கள் தாங்கள் வசூலிக்கிற கட்டணத்திற்கு நியாயம் செய்தாக வேண்டுமே என்று முதல் வகுப்புக் குழந்தைகளிடம்கூட ஆன்லைன் பாட வன்மங்களைத் திணிக்கிறார்கள். அதிலும் பயிற்றுமொழி ஆங்கிலம் என்ற பெயரில் நடக்கிற வகுப்புகளை வர்ணிக்க, “அராஜகம்” என்பதற்கு ஈடாகச் சொல்வதற்குத் தனித்தமிழ்ச் சொல் எதுவும் உடனடியாக அகப்பட மாட்டேனென்கிறது. குழந்தைகளுக்கு மிக விருப்பமான கதை சொல்லல் வகுப்புகள்கூட அவர்களை மிரட்டுகின்றன, அவர்களுக்கே உரிய கற்பனையாற்றலைக் காயடிக்கின்றன. ஆங்கிலமே அன்றாடப் புழக்கமாக உள்ள வீடுகளிலிருந்து வருகிற குழந்தைகளும், தமிழே புழங்குகிற வீடுகளிலிருந்து வருகிற குழந்தைகளும், ஆங்கிலத்திலேயே ஆசிரியர்கள் பேசுவதைக் கவனிப்பதும் புரிந்துகொள்வதும் ஒரே மாதிரியாக இருக்காது என்ற குறைந்த அளவுப் புரிதல்கூட இல்லாமல் ஆங்கிலத்திலேயே பாடம் நடத்துகிறார்கள்.

அட, தமிழ்ப் பாடம்கூட ஆங்கில வழியில் நடத்தப்படுகிறது! “சில்ரன் லிஸன், தேர் ஆர் த்ரீ டைப்ஸ் ஆஃப் ‘ல’ இன் டமில் யு நோ? யு மஸ்ட் சே ‘ல’ வித் யுவர் டங்‘ஸ் டிப் டச்சிங் தி ஃபிரன்ட் ஆஃப் யுவர் மௌத்‘ஸ் அப்பர். டு சே ‘ள’ யு மஸ்ட் டச் தி சென்டர் ஆஃப் டாப் ஆஃப் மௌத் வித் தி டிப் ஆஃப் யுவர் டங். வென் யு ஹேவ் டு சே ‘ழ’, யுவர் டங்‘ஸ் டிப் மஸ்ட் பெண்ட் அன் டச் தி டீப் பேக் யுவர் மௌத் டாப்…”!!!

ஆங்கிலத்தில் சரளமாகப் பேசுவது ஏற்கெனவே பழக்கமாக உள்ள குழந்தைகள் மிக எளிதாக நாக்கு நுனியை மேலன்னத்தின் முகப்பிலும், நடுவிலும், பின் ஆழத்திலும் மடித்துத் தொட்டு ல, ள, ழ சொல்லிவிடுவார்கள். ஆங்கிலம் அறியாமல் வகுப்புக்கு வந்துள்ள குழந்தைகள்? டங், மௌத் டாப் என்றால் என்னவென்றே தெரியாமல் வந்திருக்கக்கூடிய குழந்தைகளிடம் இவ்வாறு பேசுவது ஒரு வகையில் அவர்களை அவமதிக்கிற செயல்தான். போனால் போகட்டும் என்று ஒரு சலுகையாக, “குழந்தைகளே ஆங்கிலத்தில் பேசுவது தப்பாக இருக்குமோ என்று கவலைப்பட வேண்டாம், போகப்போக நன்றாகப் பேச வந்துவிடும்,” என்று சொல்லப்படுகிறது – ஆங்கிலத்தில்!

பில்டப் செய்யப்படும் “ஃபியூச்சர்” மாயை

“இந்தக் குழந்தைகளை அவர்களது பெற்றோர் பேசாமல் கவர்மென்ட் ஸ்கூலில் சேர்த்திருக்க வேண்டியதுதானே? எதற்காகப் பிரைவேட் ஸ்கூலில் சேர்க்கணும். இங்கிலீஷ் மீடியத்தில் படிச்சாத்தான் ஃபியூச்சர் நல்லா இருக்கும்கிறதாலதானே சேர்க்கிறாங்க? அங்கே இப்படித்தான் இருக்கும்,” என்றார் ஒரு தனியார்மய ஆதரவாளர். ஆவர் ஆங்கிலமய ஆதரவாளரும்கூட என்று புரிந்துகொள்ளலாம். இங்கிலீஷ் மீடியத்தில் படித்தால்தான் ஃபியூச்சர் நன்றாக இருக்கும் என்பதே ஒரு மாயை. பெற்றோர் மனங்களில் ஒரு பயத்தையும் பதற்றத்தையும் புகுத்தி ஏற்படுத்தப்பட்டுள்ள மாயை. இது கல்வியும் வேலைவாய்ப்புகளும் தொடர்பாக விவாதிக்கப்பட வேண்டிய வேறு பிரச்சினை.

இருக்கலாம், நாட்கள் செல்லச் செல்ல இந்தக் குழந்தைகளுக்கு ஆங்கில உரையாடல் பழகிப்போய்விடலாம். ஆனால், ஒரு சொல்லின் பொருளைத் தாய்மொழியிலேயே புரிந்துகொண்டு கற்பதற்கும், மூளையின் மொழிபெயர்ப்புச் செயல் மூலமாகப் புரிந்துகொண்டு கற்பதற்கும் இடையே மிகப் பெரிய வேறுபாடு இருக்கிறது. அதைப் புரிந்துகொள்ளாமல், பெற்றோரிடமிருந்து கட்டணத்தைக் குறையாமல் வசூலித்துவிட வேண்டும் என்ற வேகத்தில், குழந்தைகள் விரைவில் கற்றுக்கொள்வார்கள் என்ற பசப்பலோடு, அவர்களின் தமிழறிவு முளையிலேயே கருகவைக்கப்படுகிறது.

குழந்தைகளின் இந்த ஆற்றலைச் சாக்கிட்டுதான், பிஞ்சிலேயே பிற மொழித் திணிப்புகளுக்கு வழி செய்யும் கல்விக் கொள்கைகள் வகுக்கப்படுகின்றன. இது தொடர்பான விவாதங்களில் பலமுறை எடுத்துக்காட்டியிருக்கிற ஒரு அனுபவத்தை இங்கேயும் பகிர்வது பொருத்தமாக இருக்கும். நண்பர் வீட்டிற்குச் சென்றிருந்தபோது பக்கத்தில் உட்கார்ந்துகொண்டு கதை கேட்ட குழந்தை, தன் வகுப்பில் முதல் நாள் கற்றுக்கொண்ட ஒரு பாட்டைப் பாடிக் காட்டினாள். “தி மூன் ஷைன்ஸ் இன் தி நைட் ஓவர் தி ஸ்கை” என்பது அந்தப் பாட்டு வரி. அதற்கு என்ன பொருள் என்று கேட்டபோது விழித்தாள். என்ன அர்த்தம் என்று கேட்டபோதும் விழித்தாள். என்ன மீனிங் என்று கேட்டபிறகு, “ஓ மீனிங்கா? தெரியுமே. இந்த மூன் இருக்குல்ல, அது நைட்ல, ஸ்கையில ஷைன் பண்ணுது,” என்றாள். மழலையை ரசிக்க முடிந்தது என்றாலும், அவளுடைய நாவிலிருந்து தமிழ் பறிக்கப்பட்டுவிட்ட கொடுமையை ரசிக்க முடியவில்லை. அதற்கு யார் பொறுப்பு – பிரைவேட் ஸ்கூல் நிர்வாகமா, பெற்றோர்களா, அறிவியல் கண்ணோட்டமோ, கல்விச் சமத்துவ அக்கறையோ இல்லாமல் மாறுபட்ட பாடமுறைகளை அனுமதித்து வந்திருக்கிற ஒன்றிய/மாநில அரசுகளா?

குழந்தைகள் காலப்போக்கில் ஆங்கிலத்தில் பயிற்சி பெற்றுவிடுவார்கள் என்றே வைத்துக்கொள்வோம். அந்தக் காலத்தைத் தமிழ்க் குழந்தைகள் (அதாவது தமிழ் மட்டுமே புழங்குகிற குடும்பங்களைச் சேர்ந்தவர்கள்) அடைகிறபோது, ஆங்கிலக் குழந்தைகள் (அதாவது ஏற்கெனவே ஆங்கிலம் ஊறிப்போய்விட்ட குடும்பங்களைச் சேர்ந்தவர்கள்) அனைத்துப் பாடங்களையும் உள்வாங்கிக்கொள்வதில் முன்னேறியிருப்பார்களே? இதன் காரணமாகவே தமிழ்க் குழந்தைகள் தேர்வுகளில் பின்தங்குவார்களே? ‘நீட்‘ போன்ற நுழைவுத் தேர்வுகளுக்குத் தயாராவதற்கு முன்பாகவே, பள்ளி மட்டத்திலேயே, முதல் வகுப்பிலிருந்தே குழந்தைகளை வடிகட்டுகிற ஏற்பாடா இது? பள்ளிக் கல்வியில் குழந்தைகளின் மொழி உரிமைகள் மதிக்கப்பட வேண்டும் என்று உலக அளவில் ஏற்கப்பட்ட ஓர் உடன்பாடு இருப்பது இது தொடர்பான அதிகாரக் கட்டமைப்புகளில் இருப்பவர்களுக்கோ, கல்வி வணிக வளாக நிர்வாகங்களில் இருப்பவர்களுக்கோ தெரியுமா?

உலக உடன்பாட்டை அறிவார்களா?

“குழந்தையின் கல்வி உரிமையை நாடுகளின் அரசுகள் அங்கீகரிக்க வேண்டும்,” என்கிறது ஐக்கிய நாடுகள் அமைப்பின் குழந்தை உரிமைகள் மாநாட்டு உடன்பாடு. முற்போக்காகவும் சம வாய்ப்பு என்ற அடிப்படையிலும் அந்த உரிமை நிலைநாட்டப்பட வேண்டும் என்று கூறுகிற அந்த உடன்பாடு, அதற்காக, தொடக்கக் கல்வி அனைவருக்கும் கட்டாயமானதாக, இலவசமானதாக இருக்க வேண்டும், பொதுவானதும் தொழிற்பயிற்சியுடன் இணைந்ததுமான வெவ்வேறு வடிவங்களிலான பள்ளிக்கல்வியை ஊக்குவிக்க வேண்டும், ஒவ்வொரு குழந்தைக்கும் அது கிடைக்கச் செய்ய வேண்டும் என்றெல்லாம் கூறுகிறது. வெவ்வேறு வடிவங்களிலான பள்ளிக்கல்வி என்பதைத்தான், வசதிபடைத்த குடும்பங்களைச் சேர்ந்தவர்களுக்கு ஒரு வகையான பள்ளி, வறிய குடும்பங்களின் குழந்தைகளுக்கு வேறு வகையான பள்ளி என்பதாகச் செயல்படுத்துகிறார்கள் போல! எல்லாக் குழந்தைகளுக்கும் சம வாய்ப்பு என்ற உன்னத லட்சியமே இதில் மழுங்கடிக்கப்பட்டுவிடுகிறது. “சமம்” என்ற சொல்லே கசப்பாக இருப்பதால் இவ்வாறு மழுங்கடிக்கப்டுகிறதா?

“தனிமனிதர்களாகவும் குடிமக்களாகவும் குழந்தைகள் வளர்வதற்குக் கல்விதான் அடித்தளம். அது ஜனநாயக சமுதாயங்களுக்கும் பொருளாதார வளர்ச்சிக்குமான அடித்தளமாகவும் அமைகிறது. தங்களுடைய உரிமைகளை மதிக்கிற, தொடர்ச்சியான வருகையையும் கற்பதில் ஆர்வத்தையும் தூண்டுகிற ஒரு பள்ளிச் சூழல் அனைத்துக் குழந்தைகளுக்கும் கிடைத்தாக வேண்டும்,” என்றும் ஐ.நா. உடன்பாடு கூறுகிறது. பயிற்றுமொழி உள்ளிட்ட உரிமைகள் வம்படியாக மறுக்கப்படுவதும், மாயையில் சிக்கவைக்கப்படுவதும், ஜனநாயக சமுதாயத்தைக் கட்டமைப்பதில் இந்த வலையைப் பின்னுவோருக்கு உள்ள அலட்சியத்தையே காட்டுகிறது. “பொருளாதார வளர்ச்சிக்குமான அடித்தளம்” என்பதை கனம் நிர்வாகத்தார்கள் தங்களுடைய பொருளாதார வளர்ச்சிக்கான அடித்தளம் என்று எடுத்துக்கொண்டுவிட்டார்களோ?

உடன்பாட்டின் இந்தப் பிரிவுகளின் லட்சணம் இதுதானென்றால், மனித உரிமைகள், அடிப்படைச் சுதந்திரங்கள், குழந்தைகளின் பண்பாட்டு அடையாளங்கள், மொழி உரிமைகள், பாலின சமத்துவம், அனைத்துப் பிரிவு மக்களிடையே நட்பு, இயற்கையான கல்விச் சூழல் போன்ற இதர பிரிவுகள் எந்த அளவுக்கு மதிக்கப்படுகின்றன என்று சொல்ல வேண்டியதில்லை. அரசுப் பள்ளியோ, தனியார் பள்ளியோ எதுவானாலும் குழந்தை உரிமைகளுக்கான இந்த உடன்பாட்டை முழுமையாகவோ, குறிப்பாகக் கல்வி உரிமை தொடர்பான பத்திகளையாவது படித்து, அவற்றைச் செயல்படுத்த உறுதியளிக்க வேண்டும். நாடு முழுவதும் உள்ள, ஒன்றிய/மாநில பள்ளிக் கல்வி சார்ந்த துறைகளின் அதிகாரிகள் முக்கியமாக இவற்றைப் அறிந்திருப்பதும், பள்ளிகளைச் செயல்படுத்த வைப்பதும் கட்டாயமாக்கப்பட வேண்டும். அப்போதுதான் குழந்தை உரிமைகள் உடன்பாட்டில் கையெழுத்திட்ட நாடு என்பதற்கான தகுதியை உறுதிப்படுத்திக்கொள்ள முடியும்.

“என்ன கற்பிக்கப்படுகிறது என்ற உரிமைகள் மட்டுமல்ல, எவ்வாறு கற்பிக்கப்படுகிறது என்ற உரிமைகளையும் முன்னெடுப்பதே தரமான கல்வி,” என்கிறது உலக உடன்பாடு. உள்நாட்டிலும் உள்ளூரிலும் இதை மக்களிடையே கொண்டு சென்று உணரச் செய்வது கல்வி உரிமை இயக்கங்களின் பாடு.
 

No comments:

Post a Comment

Post Top Ad