கவிஞர் புலமைப்பித்தன் காலமானார்; அரசியல் கட்சி தலைவர்கள் இரங்கல்! - TAMIL BOOKS FREE PDF

tamil books and story reading portal

Post Top Ad

Wednesday, September 8, 2021

கவிஞர் புலமைப்பித்தன் காலமானார்; அரசியல் கட்சி தலைவர்கள் இரங்கல்!

கவிஞர் புலமைப்பித்தன் காலமானார்; அரசியல் கட்சி தலைவர்கள் இரங்கல்!

தமிழகத்தில் பிரபல திரைப்பட பாடலாசிரியராக அறியப்பட்டவர் புலமைப்பித்தன். எம்.ஜி.ஆர் நடித்த பல்வேறு திரைப்படங்களுக்கு பாடல்கள் எழுதியுள்ளார். சிறந்த பாடலாசிரியருக்கான தமிழக அரசின் விருதை நான்கு முறை பெற்றுள்ளார். எம்.ஜி.ஆர் உடன் மிகவும் நெருக்கமாக இருந்து வந்ததால்
அதிமுக உருவான போது, அதன் நிறுவனத் தலைவர்களில் ஒருவராக புலமைப்பித்தன் அங்கம் வகித்தார். விடுதலை புலிகள் இயக்கத்தின் தலைவர்கள் புலமைப்பித்தனின் வீட்டில் தங்கி பல்வேறு பணிகளை செய்ததாக வரலாற்று குறிப்புகள் தெரிவிக்கின்றன.

அணிகள் இணைந்ததில் முக்கிய பங்கு

தமிழக சட்ட மேலவையின் முன்னாள் துணைத் தலைவராக, அதிமுகவின் முன்னாள் அவைத் தலைவராகவும் இருந்துள்ளார். எம்.ஜி.ஆர் மறைவிற்கு பின்னர் ஜெயலலிதா அணி, ஜானகி அணி இணைய முக்கியப் பங்கு வகித்தவர். ஜெயலலிதா மறைந்த பின்னர் சசிகலா தலைமைப் பொறுப்பிற்கு வந்ததை வரவேற்றவர். மேலும் அதிமுகவில் பொதுக்குழுவின் ஒப்புதலுக்கு இணங்க பொதுச் செயலாளராக சசிகலா தேர்ந்தெடுக்கப்பட்டார்.

சசிகலாவிற்கு ஆதரவான நிலைப்பாடு

அவர் தான் இன்னும் அதிமுகவிற்கு பொதுச் செயலாளர். அவரை நீக்க இவர்கள் யார்? ஜெயலலிதா உடன் எல்லா சூழ்நிலைகளிலும் சசிகலா உடனிருந்து பணியாற்றியவர். சசிகலா தலைமை பொறுப்பிற்கு வந்ததை அனைவரும் அங்கீகரித்து அவரது காலில் விழுந்தவர்கள் தான். இப்போது இவர்கள் கட்சியை அழித்து வருகின்றனர். அதிமுக ஆட்சியை இழந்துள்ள சூழலில் கட்சியை வலுப்படுத்த சசிகலாவால் மட்டுமே முடியும். இந்த காலகட்டத்தில் கட்சிக்கு எல்லோரும் முக்கியம் என்பதை இவர்கள் உணர்ந்து செயல்பட வேண்டும் என்று புலமைப்பித்தன் கடந்த சில மாதங்களுக்கு முன்பு கூறியிருந்தார்.

கவிஞருக்கு தலைவர்கள் இரங்கல்

வயது முதிர்வு காரணமான கடந்த வாரம் செவ்வாய்க்கிழமை அன்று புலமைப்பித்தனுக்கு உடல்நலக்குறைவு ஏற்பட்டது. இதையடுத்து சென்னை அடையாறில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். அங்கு அவரது உடல் உறுப்புகளின் செயல்பாடுகள் குறைந்ததால் வென்டிலேட்டர் மூலம் சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. இதையடுத்து மருத்துவர்களின் தீவிர மருத்துவக் கண்காணிப்பில் வைக்கப்பட்டிருந்தார்

இந்நிலையில் சிகிச்சை பலனின்றி இன்று (செப்டம்பர் 8) காலை புலமைப்பித்தன் காலமானார். அவருக்கு வயது 85. இந்த சூழலில் சென்னை நீலாங்கரையில் உள்ள அவரது இல்லத்தில் அஞ்சலிக்காக புலமைப்பித்தனின் உடல் வைக்கப்படவுள்ளது. இதையடுத்து இறுதிச் சடங்குகள் நடைபெறும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. புலமைப்பித்தனின் மறைவிற்கு பல்வேறு அரசியல் கட்சி தலைவர்கள் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

No comments:

Post a Comment

Post Top Ad