போராட்டம் நிறுத்தம்.. கூட்டணிக்கு பிரச்சினையில்லை.. திருமா வைத்த முற்றுப்புள்ளி! - TAMIL BOOKS FREE PDF

tamil books and story reading portal

Post Top Ad

Wednesday, September 29, 2021

போராட்டம் நிறுத்தம்.. கூட்டணிக்கு பிரச்சினையில்லை.. திருமா வைத்த முற்றுப்புள்ளி!

போராட்டம் நிறுத்தம்.. கூட்டணிக்கு பிரச்சினையில்லை.. திருமா வைத்த முற்றுப்புள்ளி!

சேலம் மாவட்டம் காடயம்பட்டி ஒன்றியம் மோரூர் கிராமத்தில் பொது இடத்தில் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் கொடியை வைப்பதற்கு காவல்துறையினர் அனுமதி மறுப்பதாக அக்கட்சியின் தலைவர் தொல். திருமாவளவன் குற்றம்சாட்டியிருந்தார்.

மற்ற கட்சிகளின் கொடி இருக்கும் இடத்தில் விசிக கொடியை வைக்க அனுமதி மறுக்கப்படுவதாக விசிக குற்றம்சாட்டியுள்ளது. இதையடுத்து, காவல்துறையினரை கண்டிக்கும் வகையில் விசிக தலைவர் திருமாவளவன், கட்சியின் மூத்த தலைவர்கள், நிர்வாகிகள், தொண்டர்கள் என நேற்று சென்னையில் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

இந்நிலையில், ஆர்ப்பாட்டங்களை இரண்டு நாட்களுக்கு தள்ளிவைப்பதாக திருமாவளவன் தெரிவித்துள்ளார். இதுகுறித்து ட்விட்டரில் அவர் வெளியிட்டுள்ள வீடியோவில், “நேற்று சென்னையில் நமது ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இந்த சூழலில் தமிழக முதல்வர் ஸ்டாலின் தரப்பு நம்மை தொடர்புகொண்டு, இரண்டு நாள் சுற்றுப் பயணத்துக்கு பின் முதல்வர் சென்னை திரும்பவிருக்கிறார் எனவும், சென்னைக்கு வந்தபின் என்னை சந்தித்து பேச விரும்புவதாகவும், இதற்கிடையே போராட்டங்களை நிறுத்திவைக்கும்படியும் கேட்டுக்கொண்டனர்.

முதல்வரின் தரப்பு வேண்டுகோளை ஏற்று நாளை சேலத்தில் நடக்கவிருக்கும் ஆர்ப்பாட்டமும், நாளை மறுநாள் மதுரையில் நடைபெறும் என அறிவிக்கப்பட்ட ஆர்ப்பாட்டமும் தள்ளிவைக்கப்படுகிறது. நம் மீது பொய் வழக்குகளை போட்டு நெருக்கடி கொடுக்கும் காவல்துறையினர் குறித்து முதல்வரின் கவனத்துக்கு கொண்டுசெல்லவிருக்கிறோம்.

முதல்வரிடம் பேசியபிறகு இதுகுறித்த நிலைப்பாட்டையும், முடிவையும் எடுக்கலாம். கூட்டணி உறவுக்கு நெருக்கடியோ, சிக்கலையோ ஏற்படுத்துவது நமது நோக்கமில்லை. காவல்துறையிலும் கறுப்பு ஆடுகள் இருக்கின்றனர். அவர்களை கண்டிப்பதும், நமது ஜனநாயக உரிமைகளை பாதுகாப்பதும் நமக்கான உரிமை” என்று தெரிவித்துள்ளார்.



திமுக கூட்டணியில் விசிக அங்கம் வகித்து வரும் நிலையில், காவல்துறையினரை கண்டித்து விசிக ஆர்ப்பாட்டம் நடத்தி வருவது அனைவரின் கவனத்தையும் ஈர்த்தது. இதனால் கூட்டணியில் ஏதும் சிக்கல் வருமா எனவும் விவாதம் எழுந்தது. இந்நிலையில், கூட்டணியில் எந்தப் பிரச்சினையும் இல்லை என விவாதங்களுக்கு திருமாவளவன் முற்றுப்புள்ளி வைத்துள்ளார்.

No comments:

Post a Comment

Post Top Ad