மழை நிக்காதாம், தெறிக்க விடுது; 2015ஐ தூக்கி சாப்பிட்ட சென்னை பெருமழை!
நடப்பாண்டு முடிவடைய இன்னும் ஒருநாள் மட்டும் இருக்கும் நிலையில், சென்னையில் பெய்து வரும் மழை புதிய வரலாறு படைத்துள்ளது.
தமிழகத்தில் நடப்பாண்டு வடகிழக்கு பருவமழை காலம் போதும், போதும் என்று கூறும் அளவிற்கு வாரி வழங்கிவிட்டது. டிசம்பர் முதல் வாரத்தில் மழை சற்று ஓய்ந்த நிலையில், கொஞ்சம் மூச்சு விட நேரம் கிடைத்தது. மூன்று வாரங்கள் அமைதி காத்த மழை, இன்று பிற்பகல் முதல் சென்னையில் சும்மா தெறிக்க விடத் தொடங்கியது. மழை பெய்யும் என்று வானிலை ஆய்வு மையம் கூறியது.
ஆனால் குறுகிய நேரத்தில் இந்தளவிற்கு பெருமழை பெய்யும் என்று சொல்லவில்லை. நிச்சயம் வானிலை ஆய்வு மைய அதிகாரிகளே மிரண்டு போயிருக்கக்கூடும். சென்னை மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் திகட்ட திகட்ட மழை கொட்டித் தீர்த்து வருகிறது. மெரினா கடலை ஓரங்கட்டும் அளவிற்குள் நகரின் பல்வேறு பகுதிகளும் வெள்ளக்காடாய் மாறியுள்ளன. இதனால் அலுவலகம் சென்ற மக்கள் வீடுகளுக்கு திரும்ப முடியாமல் தவித்து வருகின்றனர்.
அதையும் மீறி வண்டியை எடுத்தவர்கள் எறும்பு ஊர்வது போல சாலைகளில் மெதுவாக சென்று கொண்டிருக்கின்றனர். ஒவ்வொரு சிக்னல்களிலும் அரை மணி நேரத்திற்கு மேல் ஆகிறதாம். இந்நிலையில் தமிழ்நாடு வெதர்மேன் தனது ட்விட்டரில், இன்று மாலை 5.30 மணி வரை பெய்துள்ள மழையானது 2015ல் பெய்த 2095 மி.மீ மழையை முறியடித்து 2174 மி.மீ என பதிவாகியுள்ளது. மேலும் 2005 மற்றும் 1996க்கு அடுத்தபடியாக பெருமழையை சந்தித்த மூன்றாவது ஆண்டாக 2021 மாறியிருக்கிறது.
குறிப்பாக மயிலாப்பூரில் 200 மி.மீ மழைப்பொழிவை தாண்டிவிட்டதாம். சென்னை கடற்கரையை ஒட்டி அதிகப்படியான மேகங்கள் சூழ்ந்த வண்ணம் இருக்கின்றன. எனவே மழை விடாமல் தொடரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. தியாகராய நகர், ஆழ்வார்ப்பேட்டை, ராயப்பேட்டை, நுங்கம்பாக்கம் மற்றும் அதனைச் சுற்றியுள்ள பகுதிகளுக்கு செல்வதை தவிர்க்க வேண்டும்.
வீட்டிற்கு செல்பவர்கள் பத்திரமாக செல்லவும் எனக் குறிப்பிட்டுள்ளார். சென்னையில் இன்று மாலை 6 மணி நிலவரப்படி, அதிகபட்சமாக மயிலாப்பூரில் 207 மி.மீ (PWC), எம்.ஆர்.சி நகர் - 175 மி.மீ, நுங்கம்பாக்கம் 140 மி.மீ, ஆழ்வார்ப்பேட்டை 133 மி.மீ, நந்தனம் 100 மி.மீ, மீனம்பாக்கம் 98 மி.மீ, வளசரவாக்கம் 94 மி.மீ என மழைப்பொழிவு பதிவாகியுள்ளதாக தெரிவித்துள்ளார்.இதில் கவனிக்க வேண்டிய விஷயம் என்னவென்றால், அடுத்த மூன்று மணி நேரத்திற்கு கனமழை முதல் மிகக் கனமழை பெய்யும் என்று எச்சரிக்கை விடப்பட்டுள்ளது. போச்சுடா என்று பலரும் அலுவலகத்திற்கு உள்ளேயே அமர்ந்துவிட்டனர். அதுமட்டுமின்றி சென்னை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு, திருவள்ளூர் ஆகிய மாவட்டங்களுக்கு ஆரஞ்சு அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது. இந்த நான்கு மாவட்டங்களில் 5 மணி நேரத்திற்கும் மேலாக மழை பெய்து வருவது குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment