எழுத்தாளர் அம்பைக்கு சாகித்ய அகாடமி விருது அறிவிப்பு: முதல்வர் ஸ்டாலின் பாராட்டு!
\
பெண் எழுத்தாளர் அம்பைக்கு இந்த ஆண்டுக்கான சாகித்ய அகாடமி விருது அறிவிக்கப்பட்டுள்ளது
நாவல், சிறுகதை, அபுனைவு (புனைவில்லாத), புனைவு உள்ளிட்ட பல்வேறு பிரிவுகளின் கீழ் தலைசிறந்த இலக்கிய படைப்புகளுக்கு ஆண்டுதோறும் சாகித்ய அகாடமி விருதுகள் வழங்கப்பட்டு வருகின்றன.
தமிழ், மலையாளம், தெலுங்கு, ஆங்கிலம் உள்ளிட்ட 24 மொழிகளில் படைக்கப்படும் படைப்புகளுக்கு, ரூ.1 லட்சம் பரிசுத் தொகையுடன் பட்டயம் வழங்கப்படுகிறது. இலக்கிய உலகில் உயரிய அங்கீகாரங்களில் ஒன்றாகப் பார்க்கப்படும் இந்த சாகித்ய அகாடமி விருது, கடந்த 1955ஆம் ஆண்டிலிருந்து வழங்கப்பட்டு வருகிறது.
இந்த நிலையில், 2021ஆம் ஆண்டிற்கான சாகித்ய அகாடமி விருது பெறும் எழுத்தாளர்களின் பட்டியலை மத்திய அரசு இன்று வெளியிட்டுள்ளது. இதில் தமிழகத்தைச் சேர்ந்த சிறுகதை எழுத்தாளர் அம்பைக்கு இந்த ஆண்டு சாகித்ய அகாடமி விருது அறிவிக்கப்பட்டுள்ளது.
'சிவப்புக் கழுத்துடன் ஒரு பச்சைப் பறவை' என்ற சிறுகதை தொகுப்புக்காக அம்பைக்கு இந்த விருது வழங்கப்பட உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இது அவரது ஏழாவது சிறுகதைத் தொகுப்பாகும். இந்நூலை காலச்சுவடு பதிப்பகம் வெளியிட்டுள்ளது.
அதேபோல், குழந்தை இலக்கியப் பிரிவில் வழங்கப்படும் பால புரஸ்கர் விருது இந்த ஆண்டு தமிழகத்தை சேர்ந்த கவிஞர் முருகேஷுக்கு வழங்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. 'அம்மாவுக்கு மகள் சொன்ன உலகின் முதல் கதை' என்ற குழந்தை இலக்கிய நூலுக்காக இம்முறை பால புரஸ்கர் விருது முருகேஷுக்கு அறிவிக்கப்பட்டுள்ளது.
சாகித்ய அகாடமி விருது பெற்ற எழுத்தாளர் அம்பைக்கும், பால புரஸ்கர் விருது பெற்ற கவிஞர் முருகேஷுக்கும் முதல்வர் ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்துள்ளார். இதுகுறித்து தனது ட்விட்டர் பக்கத்தில் அவர் வெளியிட்டுள்ள வாழ்த்துச் செய்தியில், “'சிவப்புக் கழுத்துடன் ஒரு பச்சைப் பறவை' என்ற சிறுகதைத் தொகுப்புக்காக சாகித்ய அகாடமி விருது பெற்ற எழுத்தாளர் அம்பைக்கு வாழ்த்துகள்! தமிழில், பல ஆண்டுகளுக்குப் பின் பெண் எழுத்தாளருக்கு விருது அறிவித்திருப்பதை வரவேற்கிறேன். பெண் படைப்பாளிகளுக்கு இது மேலும் ஊக்கமளிக்கட்டும்.
கவிஞர் மு.முருகேஷ், 'அம்மாவுக்கு மகள் சொன்ன உலகின் முதல் கதை' என்ற படைப்பிற்காக பால சாகித்ய புரஸ்கர் விருது பெற்றமைக்கு வாழ்த்துகள்! சிறார்களுக்கான எளிய மற்றும் இனிய படைப்புகள் தமிழில் செழித்திட இந்த விருது ஊக்கம் அளிக்கட்டும்.” என்று முதல்வர் ஸ்டாலின் பதிவிட்டுள்ளார்.
No comments:
Post a Comment