ஜனவரி 3 முதல் சிறுவர்களுக்கு தடுப்பூசி.. பிரதமர் மோடியின் முக்கிய அறிவிப்புகள்!
ஜனவரி 3 முதல் சிறுவர்களுக்கு தடுப்பூசி செலுத்தப்படும் என பிரதமர் நரேந்திர மோடி அறிவிப்பு.
பிரதமர் நரேந்திர மோடி இன்று திடீரென நாட்டு மக்களுடன் உரையாடினார். அப்போது அவர், “பல்வேறு உலக நாடுகளில் ஒமைக்ரான் வைரஸ் பாதிப்பு அதிகரித்துக்கொண்டே வருகிறது. மக்கள் யாரும் பதற்றப்படாமல், விழிப்புடன் இருந்து மாஸ்க் அணிந்து கைகளை தொடர்ந்து சுத்தம் செய்துகொள்ளும்படி கேட்டுக்கொள்கிறேன்.
இந்தியாவில் நோயாளிகளை தனிமைப்படுத்த 18 லட்சம் படுக்கைகள், ஆக்சிஜன் வசதி கொண்ட 5 லட்சம் படுக்கைகள், 1.40 லட்சம் ஐசியூ படுக்கைகள், 90,000 குழந்தைகளுக்கான ஐசியூ மற்றும் ஐசியூ அல்லாத படுக்கைகள் உள்ளன.
மேலும் 3000க்கும் மேற்பட்ட ஆக்சிஜன் ஆலைகள் செயல்பட்டு வருகின்றன. நாடு முழுவதும் 4 லட்சம் ஆக்சிஜன் சிலிண்டர்கள் விநியோகிக்கப்பட்டு வருகின்றன. கொரோனாவின் தீவிரம் அறிந்து இந்தியாவில் 141 கோடிக்கு மேற்பட்ட தடுப்பூசி டோஸ்கள் போடப்பட்டுள்ளன.
தடுப்பூசி போட தகுதியானவர்களில் 90 விழுக்காடுக்கு மேற்பட்டோருக்கு ஒரு டோஸ் தடுப்பூசியாவது போடப்பட்டுள்ளது. 15 முதல் 18 வயது வரையிலான சிறுவர்களுக்கு ஜனவரி 3ஆம் தேதி முதல் தடுப்பூசி செலுத்தப்படும்.
\
நோய்களால் அவதிப்படுவோர் மற்றும் 60 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு மருத்துவர்களின் பரிந்துரை அடிப்படையில் ஜனவரி 10ஆம் தேதி முதல் பூஸ்டர் டோஸ் தடுப்பூசி செலுத்தப்படும். பூஸ்டர் தடுப்பூசி போடுவதில் முன்களப் பணியாளர்களுக்கு முன்னுரிமை வழங்கப்படும்.
உலகின் முதல் மரபணு தடுப்பூசி இந்தியாவுக்கும் வரவுள்ளது. மூக்கு வழியாக செலுத்தப்படும் கொரோனா தடுப்பு மருந்துகள் விரைவில் அறிமுகப்படுத்தப்பட உள்ளன” என்று தெரிவித்துள்ளார்.
No comments:
Post a Comment