பொங்கல் பண்டிகை: ஜனவரியில் 3 நாட்கள் ‘நம்ம ஊரு திருவிழா’
பொங்கல் பண்டிகையையொட்டி ஜனவரி மாதம் மூன்று நாட்களுக்கு நம்ம ஊரு திருவிழா நடத்தப்படும் என்று தமிழக அரசு அறிவிப்பு வெளியிட்டுள்ளது
தமிழக முதல்வர் தலைமையில் கடந்த ஜூலை மாதம் நடத்தப்பட்ட கலை பண்பாட்டுத்துறை தொடர்பான ஆய்வு கூட்டத்தில் கிராமியக் கலைஞர்களைக் கொண்டு சென்னையில் பிரம்மாண்டமான கலைவிழா நடத்திட நடவடிக்கை மேற்கொள்ள அறிவுறுத்தப்பட்டது.
அதனைத்தொடர்ந்து, கடந்த செப்டம்பர் மாதம் நடைபெற்ற சட்டமன்றக் கூட்டத்தில் 2021-2022 ஆம் ஆண்டு துறை ரீதியான மானியக் கோரிக்கையின் போது, “தமிழர் திருநாளான பொங்கல் பண்டிகையினையொட்டி, தமிழகத்தினைச் சார்ந்த பாரம்பரியக் கலைகளின் சிறப்பினை வெளிப்படுத்தும் வகையில், திரளான கலைஞர்கள் பங்கு பெறும் பிரம்மாண்ட கலைவிழா, பல்வேறு துறைகளின் ஒத்துழைப்புடன் ஆண்டுதோறும் சென்னையில் மூன்று நாட்கள் நடத்தப்படும். இதற்கென தொடரும் செலவினமாக கலை பண்பாட்டுத்துறையின் ஆண்டு வரவு செலவு ஒதுக்கீட்டிலிருந்து ரூ.91 இலட்சம் நிதி ஒதுக்கீடு செய்யப்படும்” என்று தொழில்துறை, தமிழ் ஆட்சி மொழி, தமிழ் பண்பாடு மற்றும் தொல்லியல் துறை அமைச்சர் தங்கம் தென்னரசு அறிவிப்பு வெளியிட்டார்.
இதையடுத்து, அரசாணை(நிலை) எண். 166, சுற்றுலா, பண்பாடு மற்றும் அறநிலையங்கள் துறை, நாள். 18.11.2021 வாயிலாக தமிழர் திருநாளான பொங்கல் பண்டிகையினையொட்டி தமிழகத்தினைச் சார்ந்த பாரம்பரியக் கலைஞர்கள் பங்குபெறும் பிரம்மாண்ட கலைவிழா, ஆண்டு தோறும் சென்னையில் 6 இடங்களில் (இணைய வழி மூலமும்) 3 நாட்கள் நடத்துவதற்கு ரூ.91,00,000/- தொடரும் செலவினமாக அனுமதித்து அரசு ஆணை வெளியிட்டுள்ளது.
இந்த நிலையில், அரசாணையினை செயல்படுத்தும் வகையில் "நம்ம ஊரு திருவிழா" எனும் தலைப்பில் தமிழகத்தின் பாரம்பரியமான கிராமியக் கலைகளை வெளிப்படுத்தும் 500-க்கும் மேற்பட்ட கலைஞர்களைக் கொண்டு, சென்னையில் 7 இடங்களில் 14.01.2022, 15.01.2022, 16.01.2022 ஆகிய மூன்று நாட்கள் கலை விழா நடைபெறவுள்ளது. அதுமட்டுமல்லாமல் 7 வெளி மாநில கிராமியக் கலைக்குழுவினர் இவ்விழாவில் பங்குகொள்ள நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.
"நம்ம ஊரு திருவிழாவை" சீரும், சிறப்புமாக நடத்வது தொடர்பாக மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கைகள் குறித்து தலைமைச் செயலகத்தில் அமைச்சர் தங்கம் தென்னரசு தலைமையில் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.
கலை நிகழ்ச்சிகளோடு இல்லம் தேடி கல்வி விழிப்புணர்வு நிகழ்ச்சி!
இந்த கூட்டத்தில், சென்னையில் நடத்தப்படுவதைப் போன்றே இவ்விழாவினை மதுரை, திருச்சிராப்பள்ளி மற்றும் கோயம்புத்தூர் ஆகிய இடங்களிலும் கலைஞர்கள் பயன்பெறும் வகையில் நடத்திட தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ள அலுவலர்களை அமைச்சர் கேட்டுக் கொண்டார். மேலும், அரசு உயர் அலுவலர்களாலும், கலைஞர்களாலும் தெரிவிக்கப்பட்ட கருத்துகளின் அடிப்படையில் தொடர் நடவடிக்கை விரைந்து எடுத்திடவும் அமைச்சர் அப்போது அறிவுறுத்தினார்.
No comments:
Post a Comment