இரண்டு நாள்களுக்கு மழை: எங்கெல்லாம் தெரியுமா?
நாளை, நாளை மறுநாள் மழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
வடகிழக்கு பருவமழை காரணமாக தமிழ்நாடு முழுவதும் நவம்பர் மாதம் கனமழை கொட்டித் தீர்த்தது. இந்த மாத தொடக்கத்திலும் ஒரு சில இடங்களில் சில நாள்கள் மழை பெய்தாலும் பெரும்பாலும் வறண்ட வானிலையே நிலவி வருகிறது.
இந்நிலையில் அடுத்த சில தினங்களுக்கான வானிலை முன் அறிவிப்பை சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ளது.
தமிழ்நாடு, புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளில் இன்று வறண்ட வானிலையே நிலவும் என்றும் நாளை, நாளை மறுநாள் மழைக்கு வாய்ப்புள்ளதாகவும் அந்த அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. கடந்த 24 மணி நேரத்திலும் தமிழ்நாட்டில் வறண்ட வானிலையே நிலவியதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இன்று வெளியாகியுள்ள சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவிப்பில், “டிசம்பர் 27ஆம் தேதி தமிழ்நாடு மற்றும் புதுவை, காரைக்கால் பகுதிகளில் பெரும்பாலும் வறண்ட வானிலையே நிலவும்
நாளை மற்றும் நாளை மறுநாள் (டிசம்பர் 28, 29 ) கடலோர மாவட்டங்கள் மற்றும் புதுவை, காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் இலேசான/மிதமான மழை பெய்யக்கூடும். ஏனைய மாவட்டங்களில் பெரும்பாலும் வறண்ட வானிலையே நிலவும்.
30.12.2021, 31.12.2021: தமிழ்நாடு மற்றும் புதுவை, காரைக்கால் பகுதிகளில் ஒரு சில இடங்களில் இலேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.
மூடுபனி எச்சரிக்கை :
இன்றும் நாளையும் (டிசம்பர் 27, 28 ) தமிழ்நாடு மற்றும் புதுவை, காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் லேசான பனிமூட்டம் காணப்படும்.
சென்னையை பொறுத்தவரை அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் தெளிவாகவும், புறநகர் பகுதிகளில் லேசான பனிமூட்டமும் காணப்படும். அதிகபட்ச வெப்பநிலை 30 மற்றும் குறைந்தபட்ச வெப்பநிலை 21 டிகிரி செல்சியஸை ஒட்டி இருக்கும்.
கடந்த 24 மணி நேரத்தில் தமிழ்நாடு மற்றும் புதுவை, காரைக்கால் பகுதிகளில் வறண்ட வானிலையே நிலவியது. மீனவர்களுக்கான எச்சரிக்கை ஏதுமில்லை” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
No comments:
Post a Comment