காங்கிரஸுக்கு மாற்று: பிரசாந்த் கிஷோரின் ‘திடீர்’ தேடுதல்!
மக்களவைத் தேர்தலில் பாஜகவை எதிர்கொள்வதற்கான ஒரு முகத்தை இப்போதே அடையாளம் காண வேண்டும் என்ற பேச்சு அடிபடுகிறது
‘ஐக்கிய முற்போக்குக் கூட்டணியெல்லாம் இல்லை’ என்று மமதா பானர்ஜி சொன்னாலும் சொன்னார். பாஜகவை எதிர்க்க அனைத்துக் கட்சிகளும் ஒன்று திரள வேண்டுமென்ற வாதம் வலுப்பெற்றிருக்கிறது. அடுத்த கட்டமாக, அந்தப் பேச்சை இழுத்துச் செல்ல முயன்றிருக்கிறது தேர்தல் வியூக நிபுணர் பிரசாந்த் கிஷோரின் சமீபத்திய பேட்டி. அதில், காங்கிரஸ் கட்சியால் இனி எழுச்சியுறவே முடியாது என்பதைச் சுற்றியே அவரது பேச்சு அமைந்தது. அதாவது, இன்னும் இரண்டரை ஆண்டுகள் கழித்து நடைபெறும் மக்களவைத் தேர்தலில் பாஜகவை எதிர்கொள்வதற்கான ஒரு முகத்தை இப்போதே அடையாளம் காண வேண்டும் என்பதுதான் அதன் சாராம்சம்.
பிகேவின் தேசியச் செல்வாக்கு!
‘பிகே’ என்று அரசியல் கட்சிகளால் செல்லமாக அழைக்கப்படும் பிரசாந்த் கிஷோர், கட்சிகளின் தேர்தல் வெற்றிகளைத் தேடித் தரும் வியூகங்களை, செயல்திட்டங்களைச் செயல்படுத்தும் ‘ஐபேக்’ நிறுவனத்தை நடத்திவருபவர். இந்தியாவில் உயர் கல்வியைப் பெற்ற பிறகு, உலக சுகாதார நிறுவனத்தின் பணிக்காக அயல்நாடுகள் சென்றவர், 2007 வாக்கில் இந்தியா வந்து ராகுல் காந்தியைச் சந்தித்தார். அப்போது, சிறு தேர்தல் பணிக்காக பிகேவைப் பயன்படுத்திக்கொண்டது காங்கிரஸ் கட்சி.
அதன் பிறகு, 2010இல் குஜராத் முதல்வராக இருந்த நரேந்திர மோடியின் நிழலாக மாறினார். அடுத்த இரண்டு
ஆண்டுகளிலேயே, தேசிய அரசியலில் பாஜகவின் முகமாக மோடி அறியப்பட்டதற்குக் காரணம் இவரே. 2014இல் ‘மோடி அலை’ என்ற ஒரு சொல்லை ஊடகங்கள் தேசிய அளவில் பயன்படுத்தக் காரணமும் இவரே.
மத்தியில் பாஜக ஆட்சி அமைந்ததை அடுத்து மகாராஷ்டிரம் உள்ளிட்ட சில மாநிலங்களில் பாஜக கூட்டணி பெற உழைத்த பிகே, தற்போது பிகார், மேற்கு வங்கம், ஆந்திரா, தெலங்கானா என்று பல மாநிலங்களில் ஆட்சி மாற்றத்தை ஏற்படுத்தும் வகையில் சில கட்சிகளின் வெற்றிக்காக உழைத்தவர். இவ்வளவு ஏன், 2021 தமிழக சட்டமன்றத் தேர்தலுக்கு இரண்டு ஆண்டுகளுக்கு முன்பே இவரது உழைப்பைப் பயன்படுத்த முயன்றன அதிமுகவும் திமுகவும். முடிவில் திமுக ஐபேக் உடன் கைகோத்தது; ‘ஸ்டாலின்தான் வர்றாரு, விடியல் தரப் போறாரு’ என்ற பிரச்சாரத்திற்குப் பலனும் கிடைத்தது. மேற்படி வெற்றிகளுக்காக சில நூறு கோடிகளைச் சம்பளமாகப் பெற்றது ஐபேக்.
தற்போது வட இந்தியாவில் காங்கிரசுக்கும் பாஜகவுக்குவுக்கும் எதிரான கட்சிகள் தேடும் நபராக மாறியிருக்கிறார் பிரசாந்த். சமாஜ்வாதி, திருணமூல் காங்கிரஸ், தேசியவாத காங்கிரஸ், தென்னிந்தியாவில் கேரளா தவிர்த்த இதர மாநிலங்களில் ஆட்சி செய்துவரும் கட்சிகள் அவரது நிறுவனத்தோடு இணக்கமாக இருப்பவை. இந்த அம்சமே, தேசிய அளவில் பாஜகவுக்கு எதிரே நிற்கும் கட்சியை அல்லது கூட்டணியைச் சரியாகக் கணிக்கக்கூடியவர் இவர் என்ற நம்பிக்கையை பலப்படுத்துகிறது.
காங்கிரஸ் கட்சி தேய்ந்துவிட்டதா?
கடந்த பத்தாண்டுகளில் தேசிய அளவில் காங்கிரஸ் கட்சி பெரிதாக வெற்றிகளை ஈட்டவில்லை என்பது தொடங்கி, அதன் தலைமையால் பாஜகவுக்கு எதிரான கூட்டணியை வழி நடத்த முடியவில்லை என்பதுவரை பல்வேறு விவாதங்கள் நடந்து முடிந்துவிட்டன. தற்போது காங்கிரஸ் கட்சி அல்லது ஐக்கிய முற்போக்குக் கூட்டணிக்கான மாற்று தேவை என்ற வாதம் முன்வைக்கப்படுகிறது.
கடந்த மாதம் மகாராஷ்டிரத்தில் தேசியவாத காங்கிரஸ், சிவசேனா ஆகிய கட்சித் தலைவர்களைச் சந்தித்துப் பேசினார் திருணமூல் காங்கிரஸ் கட்சியின் தலைவரும் மேற்கு வங்க முதல்வருமான மமதா பானர்ஜி. அப்போது மமதா அளித்த ஊடகப் பேட்டிகளும், சிவசேனாவின் அதிகாரப்பூர்வ இதழான ‘சாம்னா’வில் ‘காங்கிரஸுக்கு மாற்று தேவையில்லை’ எனும் தொனியில் அமைந்த கட்டுரையும் அந்தப் பேச்சுவார்த்தைகளின் சாராம்சத்தைப் பொதுவெளியில் உடைத்துவிட்டன.
கடந்த வாரம் முன்னணி தேசிய இதழ் ஒன்றுக்கு பிரசாந்த் கிஷோர் அளித்த பேட்டியும் அதைச் சுற்றியே அமைந்திருந்தது.
பாஜகவுக்கு எதிராக காங்கிரஸ் போட்டியிட்ட 100 இடங்களில் 4இல் மட்டுமே அக்கட்சி வெற்றி பெற்றிருக்கிறது, 2019 தேர்தலில் காங்கிரஸ் கட்சி பெற்ற வெற்றிகள் அனைத்தும் பாஜக கை ஓங்கியிராத தமிழ்நாடு, கேரளா, பஞ்சாப் மாநிலங்களில் பெற்றவை என்பது உட்படப் பல்வேறு விஷயங்களை பிரசாந்த் சொன்னார். பாஜகவை எதிர்க்க காங்கிரஸால் ஒருபோதும் முடியாது என்பதே அவரது பேச்சின் அடிநாதம்.
கொரோனா காலத்தில் மத்திய அரசு செயல்பாடுகள் குறித்து, டெல்லி எல்லையில் விவசாயிகள் போராட்டம் குறித்து, உ.பி. உள்ளிட்ட சில மாநிலங்களில் பெண்களுக்கு எதிரான வன்முறை பற்றி ராகுல் காந்தியும் காங்கிரஸ் கட்சியும் தங்களது நிலைப்பாட்டைத் தீவிரமாக வெளிப்படுத்திவரும் நிலையில் இப்படியொரு கருத்தை பிகே அழுத்தமாக முன்வைத்திருக்கிறார்.
பாஜக மாபெரும் சக்தியா!
திருணமூல்
காங்கிரஸ், தேசியவாத காங்கிரஸ், ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் என்று காங்கிரஸிலிருந்து பிரிந்து வந்த, அதே மாதிரியான கொள்கைகளின் அடிப்படையிலமைந்த, குறிப்பிட்ட மாநிலங்களில் பெரும் செல்வாக்கைக் கொண்டுள்ள கட்சிகள் தனித்தோ அல்லது கூட்டாகச் சேர்ந்தோ, காங்கிரஸுக்கான மாற்றாக மாற முடியும் என்பது பிரசாந்த் கூறிய பல கருத்துகளில் குறிப்பிடத்தக்க ஒன்று. ஒவ்வொரு மாநிலத்திலும் ஆட்சி செய்யும் அல்லது எதிரணியில் இருக்கும் கட்சிகளை ஒன்று திரட்டி, இப்படியொரு மாற்றத்தை முன்னெடுக்க முடியும் என்பது அவரது கணிப்பு. 1996 முதல் 1998 வரையிலும் இப்படியொரு கூட்டணியே ஆட்சிப் பொறுப்பில் இருந்தது. பாஜக கூட்டணி பதவி விலகிய பின்னர், 2004 முதல் 2014வரை நடந்த ஜ.மு.கூ. ஆட்சியின்போது அதன் தலைமைப் பொறுப்பிலும் முடிவெடுக்கும் இடத்திலும் காங்கிரஸே இருந்தது.
பாஜக மாபெரும் சக்தியாகத் தற்போது திகழ்வதால், அந்த பொறுப்பை காங்கிரஸ் வகிக்க முடியாது என்ற வார்த்தைகளுக்கு அதிக அழுத்தம் தருகிறார் பிரசாந்த். அதே நேரத்தில் காங்கிரஸின் மீது வன்மம் கிடையாது என்கிறார். எதிரணியின் முகமாக யாரையும் நான் முன்னிறுத்தவில்லை என்றும் சொல்கிறார்.
பிரியங்கா காந்தி ஒரு காரணமா?
காங்கிரஸ் கட்சியின் தோல்விக்கான
முக்கியக் காரணமாக, அக்கட்சி கடந்த ஆண்டுகளில் செல்வாக்கை இழப்பதற்கான அடிப்படையாக வாரிசு அரசியலைக் குறிப்பிட்டுள்ளார் பிரசாந்த்.
ராகுல் காந்தியின் தலைமையை மூத்த காங்கிரஸ் தலைவர்கள் ஏற்கவில்லை என்றும் நிலை உண்டானபோது ‘அப்பொறுப்பை தற்காலிகமாக நானே ஏற்கிறேன்’ என்று சொன்னார் அவரது தாய் சோனியா காந்தி. பல மாநிலங்களில் காங்கிரஸ் கட்சியின் பிடி தளர்ந்து, அதன் செல்வாக்கு பரப்பு சுருங்கிய சூழலில், 2019 வாக்கில் உ.பி.யில் அக்கட்சியின் பொதுச்செயலாளராக களமிறக்கப்பட்டார் பிரியங்கா காந்தி வதோரா. லக்கிம்பூர் வன்முறை உட்பட வட இந்தியாவில் பிரச்சினைகள் மேலெழும்போதெல்லாம், காங்கிரஸ் கட்சி அவரையே களமிறக்குகிறது. வரும் 2024 தேர்தலில் பிரியங்காவையே காங்கிரஸ் தன் முகமாக முன்னிறுத்துமோ எனும் விதமாக, அவரது பங்களிப்பு பெருகிவருகிறது.
வாரிசு அரசியலுக்கு எதிரான பிரசாந்த் கிஷோரின் பேச்சு மட்டுமல்ல, காங்கிரஸுக்கு மாற்று எதுவென்ற அவரது தேடலுக்கும் பிரியங்காதான் காரணமாக இருக்கும் என்று தோன்றுகிறது.
உண்மையிலேயே பிரியங்காதான் இதற்குக் காரணமாக இருக்கிறாரோ இல்லையோ, காங்கிரஸ் தன்னுடைய அரசியலை இன்னமும் தீவிரப்படுத்தி வலுப்படுத்தாவிட்டால் பிகே வாக்கு பலித்துவிடும் என்பதில் ஐயமில்லை.
No comments:
Post a Comment