நெல் தரிசில் பயறு சாகுபடி: தமிழக அரசு எடுத்த நடவடிக்கை என்ன? - TAMIL BOOKS FREE PDF

tamil books and story reading portal

Post Top Ad

Wednesday, December 29, 2021

நெல் தரிசில் பயறு சாகுபடி: தமிழக அரசு எடுத்த நடவடிக்கை என்ன?

நெல் தரிசில் பயறு சாகுபடி: தமிழக அரசு எடுத்த நடவடிக்கை என்ன?


சம்பா நெல் அறுவடைக்குப் பின் நெல் தரிசில் பயறு சாகுபடியை தீவிரப்படுத்துவதற்கு மாநில அரசு மேற்கொண்டுள்ள நடவடிக்கைகள் குறித்த தகவல் வெளியாகி உள்ளது.
சம்பா நெல் அறுவடைக்குப் பின் நெல் தரிசில் பயறு சாகுபடியை தீவிரப்படுத்துவதற்கு மாநில அரசு மேற்கொண்டுள்ள நடவடிக்கைகள் குறித்த தகவல் வெளியாகி உள்ளது.

இது தொடர்பாக தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டு உள்ளதாவது:
நமது உடல் ஆரோக்கியத்துக்கு முக்கியமாக தேவைப்படும் புரதச் சத்துத் தேவையினை வழங்குவதில் முக்கிய பங்கு வகிக்கும் பயறு வகைகள், வளிமண்டலத்திலுள்ள தழைச்சத்தினை (நைட்ரஜன் சத்து) மண்ணில் நிலைநிறுத்தி, நமது நிலத்தின் வளத்தையும் அதிகரிக்கிறது.

இத்தகைய பயறுவகைப் பயிர்கள் குறைவான நீரில் சாகுபடி செய்வதற்கு ஏற்றவை. இவை பெரும்பாலும் வறண்ட நில பரப்புகளிலேயே அதிகம் விளையக்கூடியவை. அறுபது நாட்களில் விவசாயிகளுக்கு அதிக இலாபம் தரக்கூடிய பயிராக பயறுவகைகள் உள்ளன. நெல் போன்ற பயிர்களுக்கு அதிக இரசாயன உரங்கள் (யூரியா, டிஏபி) எடுப்பதால் மண்ணின் வளத்தை பாதிக்கின்றது. ஆனால், ஆண்டுக்கு ஒரு முறை பயறுவகைப் பயிர்களை சாகுபடி செய்தால், மண்ணின் வளம் மேம்படுகிறது.

மனிதனின் புரதத்தேவைக்கு உற்பத்தி, மண்வளம் உயர்வு, குறைந்த நாளில் குறைந்த நீரில் அதிக வருவாய் போன்ற பயறுவகைப் பயிர்களின் முக்கியத்துவத்தை உணர்ந்து, நடப்பாண்டில் வேளாண் நிதி நிலை அறிக்கையில் நெல்தரிசில் பயறு வகைகள் சாகுபடியினை மீண்டும் ஊக்குவிக்க முயற்சிகள் மேற்கொள்ளப்படும் என அறிவிக்கப்பட்டது.

அதன் தொடர்ச்சியாக, சம்பா நெல் அறுவடைக்குப்பிறகு, பயறுவகைப் பயிர்கள் சாகுபடிப் பரப்பினை அதிகரிக்கும் நோக்கத்தில் எதிர்வரும் 2022 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் முதல் பயறுவகைப் பயிர்களின் சாகுபடியினை தீவிரப்படுத்தும் திட்டத்தினை துவங்குவதற்கு அரசு சிறப்புக்கவனம் எடுத்துள்ளது, சம்பா நெல் அறுவடைக்குப்பிறகு, நெல்வயலில் இருக்கும் ஈரப்பதத்தினை பயன்படுத்தியும், பாசன வசதி உள்ள இடங்களில் இறவைப் பயிராகவும் சாகுபடி செய்து தமிழ்நாட்டில் பயறு வகை உற்பத்தியினை உயர்த்துவதற்கு அரசு கீழ்க்கண்ட நடவடிக்கைகளை எடுத்துள்ளது.

சம்பா நெல் சாகுபடி மேற்கொள்ளப்பட்டுள்ள கிராமங்களில் சம்பா நெல் அறுவடைக்குப்பின் நெல் தரிசாக உளுந்து அல்லது பாசிப்பயறு சாகுபடி செய்வதன் அவசியம் குறித்து விளக்கும் வகையில், கிராம வாரியாக தீவிர முகாம்கள் நடத்துவதற்கு அனைத்து மாவட்ட அலுவலர்களுக்கும் அறிவுரை வழங்கப்பட்டுள்ளது. கிராம வாரியாக விவசாயிகளை அடையாளம் கண்டு, சம்பா நெல் அறுவடைக்குப்பின் பயறு வகைப் பயிர்களை சாகுபடி செய்வதன் அவசியம் குறித்து விரிவாக எடுத்துரைக்குமாறு துறை அலுவலர்களுக்கு அறிவுரை வழங்கப்பட்டுள்ளது.

நெல் தரிசாக உளுந்து மற்றும் பாசிப்பயறு வகைகளை சாகுபடி செய்வதற்கு தேவையான உயர் மகசூல் இரக விதைகளை போதுமான அளவில் வேளாண் விரிவாக்க மையங்களில் முன்கூட்டியே இருப்பு வைக்குமாறு, துறை அலுவலர்களுக்கு அறிவுரை வழங்கப்பட்டு உள்ளது. பொதுவாக சம்பா நெல் அறுவடைக்குப்பிறகு, விவசாயிகள் வயல்களில் கால்நடைகளை மேயவிடுவதுண்டு.

நடப்பாண்டில், நெல் தரிசாக பயறு வகைப் பயிர்களை சாகுபடி செய்ய திட்டமிட்டுள்ள கிராமங்களில்
சிறப்புக்கூட்டம் நடத்தி, அனைத்து விவசாயிகளையும் ஒருங்கிணைத்து, கால்நடைகளை மேயவிடாமல் பயறுவகைப் பயிர்களை பாதுகாக்க வேண்டியதன் அவசியம் குறித்தும் அதற்காக விவசாயிகள் மேற்கொள்ள
வேண்டிய உத்திகள் குறித்தும் துறை அலுவலர்கள் விளக்க உள்ளார்கள்.

சம்பா நெல் அறுவடைக்குப்பின், பயறுவகைப் பயிர்கள் சாகுபடியினை ஊக்குவிக்கும் வகையில், சான்றுவிதை உற்பத்தி மற்றும் விநியோகம், உற்பத்தியை உயர்த்தும் இடுபொருட்களான உயிர்உரங்கள், பயறு நுண்ணூட்டக் கலவை, ஜிப்சம், பயிர்பாதுகாப்பு மருந்துகள், சுழற்கலப்பை, விசைத்தெளிப்பான் போன்ற வேளாண் கருவிகள், வயலுக்கு நீர் கொண்டு செல்லும் குழாய்கள், தார்பாய்கள் போன்ற பல்வேறு இடுபொருட்கள் அரசு வேளாண் விரிவாக்க மையங்கள் மூலம் மானிய விலையில் விவசாயிகளுக்கு வழங்கப்படும்.
நெல்தரிசாக பயறு வகைகள் அதிகம் சாகுபடி மேற்கொள்ளப்படும் கிராமங்களில் இதற்கென சிறப்பு செயல்விளக்கங்கள் விவசாயிகளின் வயல்களிலேயே நடத்தப்படும். இத்தகைய செயல்விளக்கங்களில், தரமான விதை, விதை நேர்த்தி, பயிர் எண்ணிக்கை பராமரிப்பது, உயிர் உரங்கள் மற்றும் நுண்ணூட்டக்கலவையினை பயன்படுத்துவது, பூக்கும் தருணத்தில் உரக்கரைசல் கொண்டு பயறு செடிகளின் மேல் கைத்தெளிப்பான் கொண்டு தெளித்தல் போன்ற தொழில்நுட்பங்கள் குறித்து விவசாயிகளுக்கு துறை அலுவலர்கள் விளக்கமாக எடுத்துரைப்பார்கள்.

அறுவடை செய்த உளுந்து மற்றும் பாசிப்பயறை நன்கு சுத்தப்படுத்தி, தரம்பிரித்து, பருப்பாக உடைத்து கொள்கலன்களில் அடைத்து விற்பனை செய்தால், பயறு விவசாயிகளுக்கு அதிக வருமானம் கிடைக்கும்

என்பதால், விவசாயிகள் குழுக்கள் மூலம் ஏற்கெனவே நிறுவப்பட்டுள்ள 138 பயறு உடைக்கும் இயந்திரங்களுடன், நடப்பாண்டில், முதலமைச்சரின் மானாவாரி நில மேம்பாட்டு இயக்கத்தின் கீழ், 50
சதவிகித மானியத்துடன் குழுவுக்கு அதிகபட்சமாக ரூ.5 இலட்சம் வீதம 89 இடங்களில் மதிப்புக்கூட்டு மையங்கள் துவங்க விவசாயிகள் குழுக்களுக்கு நிதி உதவி வழங்கப்படும்.

பயறு வகை சாகுபடியினை தீவிரப்படுத்தும் அரசின் இத்தகைய நடவடிக்கைகளை விவசாயிகளிடையே விளக்கும் வகையில், வேளாண்மை மற்றும் சகோதரத் துறைகளை ஒருங்கிணைத்து மாவட்ட அளவில் பயறு சாகுபடி பற்றி கருத்தரங்குக் கூட்டம் நடத்த மாவட்ட அலுவலர்களுக்கு உரிய அறிவுரை வழங்கப்பட்டுள்ளது. எனவே, மாநில அரசின் இத்தகைய திட்டப்பலன்களை நன்கு பயன்படுத்தி, தமிழ்நாட்டில் நடப்பாண்டில் பயறுவகை பயிர்களை அதிகமான பரப்பளவில் சாகுபடி செய்து பயன் அடையுமாறு விவசாயிகள் அனைவரும் கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.
இவ்வாறு அதில் குறிப்பிடப்பட்டு உள்ளது.

No comments:

Post a Comment

Post Top Ad