பக்தர்கள் வழிபாட்டுக்கு மீண்டும் தடை? - அமைச்சர் சொல்வது இதுதான்!
ஒமைக்ரான் அச்சுறுத்தல் காரணமாக கோயில்களில் பக்தர்கள் வழிபாட்டுக்கு மீண்டும் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட உள்ளதா என்பது குறித்து அமைச்சர் சேகர் பாபு விளக்கம் அளித்தார்.
சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள இந்து சமய அறநிலையத்துறை ஆணையர் அலுவலகத்தில் அமைச்சர் சேகர் பாபு தலைமையில் மண்டல இணை ஆணையர்கள் மற்றும் உதவி ஆணையர்கள் உடனான ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.
இதில் சட்டமன்ற மானிய கோரிக்கையின்போது அறிவிக்கப்பட்ட திட்டங்களை நிறைவேற்றுவது தொடர்பாக அதிகாரிகளுடன் ஆலோசனை மேற்கொள்ளப்பட்டது. முன்னதாக அமைச்சர் சேகர் பாபு செய்தியாளர்களிடம் கூறியது:
திட்டங்களை நிறைவேற்றுவது தொடர்பாக துறை அதிகாரிகளுடன் 7 வது முறையாக இன்று ஆலோசனை கூட்டம் நடத்தப்படவுள்ளது. இதில் கோயில்களில் தரமான குங்கும் விபூதி வழங்குவது, முதல் உதவி மையங்கள் ஏற்படுத்துதல், புதுபிக்க வேண்டிய குளங்கள் மற்றும் கோயிலுக்கு வரும் பக்தர்களுக்கு தேவையான வசதிகள் செய்து தருவது தொடர்பாக ஆலோசிக்கப்பட உள்ளது.
551 கோயில் திருப்பணிகளுக்கு இதுவரை அனுமதி வழங்கப்பட்டுள்ளது. புத்தாண்டில் கோயிகளில் பணியாற்றுபவர்களுக்கு புத்தாடை வழங்குவது குறித்தும் ஆலோசனை செய்து வருகிறோம். ரோப் காரை தொடர்ந்து கோயில்களில் லிப்ட் வசதி ஏற்படுத்துவது குறித்தும் ஆலோசனை மேற்கொள்ள்படும்.
சென்னை, பழனி, திருநெல்வேலி ஆகிய இடங்களில் மூத்தோரை பாதுகாக்க குடியிருப்பு அமைப்பது தொடர்பாகவும் இன்று பேச உள்ளோம்.
திமுக ஆட்சிக்கு வந்ததில் இருந்து கோயில் சிலைகளை பாதுகாப்பது தொடர்பாக பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. கடந்த 7 மாதங்களில் 30 ஆண்டுகளுக்கு மேலாக காணாமல் போன கோயில் சிலைகள் உட்பட 20 இடங்களில் திருடு போன சிலைகளை மீட்டுள்ளோம்.
இடியும் நிலையில் சிதலமடைந்த கோயில்கள் குறித்து தகவல் கிடைத்த உடனே, துறை சார்ந்த பொறியியல் அதிகாரிகளுடன் ஆய்வு செய்து உரிய நடவடிக்கை எடுக்கப்படும்.
ஒமைக்ரான் பரவல் தாக்கம் குறித்து ஆராய்ந்தும், பக்தர்கள் மகிழ்ச்சிக்கு இடையூறு
இல்லாமலும் கோயில்களில் கட்டுப்பாடுகள் விதிப்பது குறித்தும் விரைவில் முடிவெடுக்கப்படும்.
இதுதொடர்பாக 30 மற்றும் 31 தேதிகளில் முதல்வர் தலைமையில் துறை சார்ந்த அதிகாரிகளுடன் ஆலோசனை கூட்டம் மேற்கொள்ளப்படும். அதன் பின்னர் முதல்வர் முடிவுகளை அறிவிப்பார் என்று அமைச்சர் சேகர் பாபு தெரிவித்தார்.
No comments:
Post a Comment