ஆப்கனில் இருந்து தப்பியது ஏன்? முதல்முறையாக மனம் திறந்த அஷ்ரப் கானி! - TAMIL BOOKS FREE PDF

tamil books and story reading portal

Post Top Ad

Friday, December 31, 2021

ஆப்கனில் இருந்து தப்பியது ஏன்? முதல்முறையாக மனம் திறந்த அஷ்ரப் கானி!

ஆப்கனில் இருந்து தப்பியது ஏன்? முதல்முறையாக மனம் திறந்த அஷ்ரப் கானி!



ஆப்கானிஸ்தானில் இருந்து தப்பி சென்றது ஏன் என்பது பற்றி அந்நாட்டின் முன்னாள் அதிபர் அஷ்ரப் கானி விளக்கம் அளித்துள்ளார்
ஆப்கானிஸ்தான் முழுவதையும் தலிபான்கள் தங்களது கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்து விட்டனர். அதிபர் மாளிகையை கைப்பற்றி தலிபான்கள் உள்ளே அமர்ந்ததையடுத்து, அதிபராக இருந்த அஷ்ரப் கானி பதவியை ராஜினாமா செய்துவிட்டு நாட்டை விட்டு வெளியேறி விட்டார். ஆப்கன் பூமியில் ரத்தக்களறி நடக்கக் கூடாது என்பதற்காகவே ராஜினாமா செய்து விட்டு, நாட்டை விட்டு வெளியேறியதாக அவர் தெரிவித்திருந்தார்.

இதையடுத்து, 20 ஆண்டுகளாக நடந்து வந்த உள்நாட்டு போர் முடிவுக்கு வந்துள்ளதாக அறிவித்த தலிபான்கள், ஆப்கானிஸ்தானில் புதிய அரசை அமைத்துள்ளனர். முன்னதாக, நாட்டை விட்டு தப்பி சென்ற அஷ்ரப் கானி, ஆப்கனை விட்டு செல்லும் போது, 4 கார்கள் மற்றும் ஒரு ஹெலிகாப்டரில் கட்டுக்கட்டாக பணத்தை எடுத்துக் கொண்டு சென்றதாக தகவல் வெளியானது.

மேலும், தஜிகிஸ்தானில் தஞ்சமடைய முயற்சி மேற்கொண்டதாகவும், ஆனால், அவரது ஹெலிகாப்டர் அங்கு இறங்க அனுமதி மறுக்கப்பட்டதால், அவர் வேறு ஒரு நாட்டுக்கு சென்றதாகவும் தகவல்கள் வெளியாகின. நீண்ட நாட்களாக அவர் எந்த நாட்டில் இருக்கிறார் என்பது தெரியாமல் இருந்த நிலையில், தற்போது அவர் ஐக்கிய அரபு அமீரகத்தில் தஞ்சமடைந்துள்ளதாக கூறப்படுகிறது.

இதனிடையே, தலிபான்களை எதிர்த்து போரிடாமல் ஆப்கன் நாட்டை விட்டு அஷ்ரப் கானி தப்பியோடியது கடும் விமர்சனங்களுக்கு உள்ளானது. இந்த நிலையில், ஆப்கானிஸ்தானில் இருந்து தப்பி சென்றது ஏன் என்பது பற்றி அந்நாட்டின் முன்னாள் அதிபர் அஷ்ரப் கானி முதன் முறையாக விளக்கம் அளித்துள்ளார்.

இதுகுறித்து பிபிசி ரேடியோ 4 டுடே நிகழ்ச்சிக்கு பேட்டியளித்த அவர், “நான் நாட்டை விட்டு வெளியேறுவேன் என எண்ணவில்லை. எனது தாய் மண்ணில் அதுதான் எனது கடைசி நாள் எனவும் எண்ணவில்லை. காபூல் நகரின் இரு திசைகளிலும் தலிபான்கள் சூழ்ந்திருந்தனர். எங்களது படைக்கு அவர்களை எதிர்த்து போரிட்டு வெல்லும் வல்லமை இல்லை. அப்படியே போரிட்டாலும் சுமார் 50 லட்சம் அப்பாவி மக்கள் பாதிக்கப்பட வாய்ப்பு உள்ளது. அதனால் நகரத்தின் நலன் கருதி வெளியேற முடிவு செய்தேன்.” என்றார்.

காபூலிலிருந்து வெளியேறுவது என்பது 2 நிமிடத்தில் எடுக்கப்பட்ட முடிவு என்று தெரிவித்துள்ள அவர், நாட்டை விட்டு வெளியேறும்போது எங்கு செல்வது என்பது தனக்கு தெரியாது எனவும், காபூலை விட்டு வெளியேறுவது மட்டுமே அப்போதைய நோக்கமாக இருந்ததாகவும் தெரிவித்துள்ளார்.

மேலும் பேசிய அவர், எனது பாதுகாப்பு அதிகாரி வெறும் 2 நிமிடங்கள்தான் கொடுத்தார். முதலில் ஹோஸ்ட் நகருக்கு செல்வதாக திட்டமிட்டோம். ஆனால், அந்த நகரத்தை தலிபான்கள் ஏற்கனவே கைப்பற்றி விட்டதாக பாதுகாப்பு அதிகாரிகள் சொல்லித்தான் தெரிந்து கொண்டேன். எனவே, எங்கு செல்கிறோம் என்று தெரியாமல் தான் ஆப்கனை விட்டு சென்றேன்.” என்றும் தெரிவித்துள்ளார். அத்துடன், கட்டுக்கட்டாக பணத்தை எடுத்துச் செல்லவில்லை எனவும் அஷ்ரப் கானி விளக்கமளித்துள்ளார்.

No comments:

Post a Comment

Post Top Ad