ராகுல் காந்தியின் மதம் என்ன? பாஜக எம்.எல்.ஏ. சர்ச்சை பதிவு!
ராகுல் காந்தியின் மதம் பற்றி ஆராய்ச்சி நடத்த வேண்டும் என பாஜக எம்.எல்.ஏ. ஒருவர் சர்ச்சைகுரிய வகையில் பதிவிட்டுள்ளார்
காங்கிரஸ் மூத்த தலைவர் ராகுல் காந்தி அண்மைக்காலமாக இந்துத்துவா மீது கடுமையான விமர்சனங்களை முன்வைத்து வருகிறார். உத்தரப்பிரதேச மாநில சட்டமன்றத் தேர்தலையொட்டி, சமீபத்தில் அமேதியில் பேசிய அவர், இந்துத்துவாவாதி கங்கையில் மட்டும் தான் குளிப்பார். ஆனால், இந்து கோடிக்கான மக்களுடன் சங்கமிப்பார் என்று பிரதமர் மோடியை சாடினார்.
நாட்டில் மதம் பற்றிய அதுவும் இந்து மதம் பற்றிய பேச்சுகள் அதிகமாக இருக்கிறது. இந்தியாவில் இப்போது நடைபெறும் போட்டி இந்துக்கும், இந்துத்துவாவாதிக்கும் எதிரானது என்றும் ராகுல் காந்தி பேசியிருந்தார்.
அதன் தொடர்ச்சியாக, இந்துக்கள் உண்மையின் வழியில் செல்வர்; ஆனால் இந்துத்துவா மதத்தின் போர்வையில் கொள்ளையடிக்கும் என்றும் ராகுல் காந்தி தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டிருந்தார். ஆனால், ராகுல் காந்தி இந்து, இந்துத்துவா பற்றி பேசி வருவது மதச்சார்பின்மை பற்றி பேசி வருபவர்கள் மத்தியில் விமர்சனங்களை ஏற்படுத்தியுள்ளது.
இந்த நிலையில், ராகுல் காந்தியின் மதம் பற்றி ஆராய்ச்சி நடத்த வேண்டும் என ஹரியாணா மாநில பாஜக எம்.எல்.ஏ. அசீம் கோயல் சர்ச்சைகுரிய வகையில் பதிவிட்டுள்ளார். இதுகுறித்து தனது ட்விட்டர் பக்கத்தில், “ராகுல் காந்தி இந்துவா இஸ்லாமியரா அல்லது கிறிஸ்துவ மதத்தவரா என்பது அவருக்கே தெரியவில்லை. இதுகுறித்து ஆராய்ச்சி நடத்த வேண்டும். அவர் நாட்டை பற்றி கவலை கொள்ள தேவையில்லை. ஆனால், அவருடைய குடும்பத்தின் வரலாற்றை குறித்து தான் கவலை அடைய வேண்டும்.” என்று பதிவிட்டுள்ளார்.
No comments:
Post a Comment