அந்தரத்தில் பறந்த இளைஞர்: பட்டம் விடப் போன இடத்தில் பரிதாபம்!
இலங்கையில் இளைஞர் ஒருவர் சுமார் 5 நிமிடங்கள் அந்தரத்தில் பறந்தது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது
தமிழர் திருநாளான பொங்கல் பண்டிகை உலகம் முழுவதும் உள்ள தமிழர்களால் கோலாகலமாக கொண்டாடப்பட்டு வருகிறது. உழைக்கும் தமிழ் மக்கள் தமது உழைப்பிற்கு உதவிய இயற்கைக்கும், தம்மோடு சேர்ந்து உழைத்த கால்நடைகளுக்கும் நன்றி தெரிவிக்கும் விழாவாக பொங்கல் விழா நான்கு நாட்களுக்கு கொண்டாடப்படுகிறது.
அந்த வகையில், 2022ஆம் ஆண்டுக்கான பொங்கல் பண்டிகை ஜனவரி இரண்டாம் வாரத்தில் கொண்டாடப்படவுள்ளது. பொங்கல் பண்டிகையையொட்டி, பட்டம் விடும் விளையாட்டு இலங்கையில் மிகவும் பிரபலமாக நடக்கும். அதன்படி, இலங்கையில் ராட்ச பட்டங்களை ஒன்றாக கட்டி பறக்க விட்ட இளைஞர் ஒருவரை பட்டம் தூக்கி சென்றது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இலங்கை யாழ்ப்பாணம் பகுதியில் இளைஞர்கள் சிலர் ஒன்று சேர்ந்து ராட்சத பட்டங்களை தயாரித்து உள்ளனர். அதிக காற்றும் வீசும் பகுதிக்கு வந்த அவர்கள் அந்த பட்டத்தை பறக்க விட்டுள்ளனர். அப்போது, முன் வரிசையில் இருந்த இளைஞர்கள் பட்டத்தின் கயிறை விடுவதற்குள், பின் வரிசையில் இருந்த இளைஞர்கள் பட்டத்தின் கயிறை விட்டு விட்டதாக தெரிகிறது.
இதனால், காற்றின் வேகத்தோடு முன் பக்கத்தில் கயிறைப் பிடித்துக் கொண்டு இருந்த இளைஞர் ஒருவரும் பட்டத்துடன் தூக்கிச் செல்லப்பட்டார். இதனை பார்த்த அவரது நண்பர்கள் அதிர்ச்சியடைந்தனர். சுமார் 30 அடி உயரத்தில் அந்தரத்தில் பறந்த அவரை கீழே இறக்க முடியாமல் அவரது நண்பர்கள் திணறினர்.
தொடர்ந்து, காற்றின் வேகம் சற்று தணிந்து பட்டம் கீழே இறங்கியதும் கயிற்றின் பிடியை அவர் விட்டுள்ளார். இதனால் கீழே விழுந்த அவர் காயங்களுடன் உயிர் தப்பினார். பட்டம் விடச் சென்ற இடத்தில் இளைஞர் பட்டத்துடன் காற்றில் தூக்கிச் செல்லப்பட்ட சம்பவ அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.
No comments:
Post a Comment