வன்னியர் சங்க அறக்கட்டளையில் திடீர் ஆய்வு செய்த அமைச்சர்… காரணம் என்ன?
கள்ளக்குறிச்சியில் உள்ள வன்னியர் சங்க அறக்கட்டளை கட்டிடத்தை பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் சிவசங்கர் திடீர் ஆய்வு செய்தார்.
கள்ளக்குறிச்சி காந்தி ரோட்டில் உள்ள வன்னியர் அகடமி கட்டிடத்தை பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் சிவசங்கர் இன்று பார்வையிட்டு ஆய்வு செய்தார். அப்போது வன்னியர் சங்க நிர்வாகிகள் எம்.எல்.ஏக்கள் வசந்தம்கார்த்திகேயன், உதயசூரியன், மணிகண்ணன் உள்ளிட்ட ஏராளமானோர் உணர்ந்திருந்தார்.
ஆய்வுக்கு பிறகு செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் சிவசங்கர் பேசியதாவது:
"தமிழ்நாடு முழுவதும் உள்ள வன்னியர் பொதுச்சொத்து நல வாரியத்தின் பார்வையில் இருக்கின்ற சொத்துக்களை ஆய்வு செய்து அதனை பயன்பாட்டிற்கு கொண்டுவர நடவடிக்கை எடுக்கப்படும் என தமிழக முதலமைச்சர் மு க ஸ்டாலின் தெரிவித்தார். அதன் அடிப்படையில் கள்ளக்குறிச்சி காந்தி ரோட்டில் உள்ள நகர வன்னிய சங்கத்தின் மூலம் கட்டப்பட்டுள்ள கட்டிடம் ஆய்வு செய்யப்பட்டது.
ஆய்வில் கடந்த 2010ஆம் ஆண்டு கட்டிடம் கட்டும் பணி தொடங்கப்பட்டது. சுமார் 5 ஆண்டுகள் நடைபெற்ற கட்டிட பணி தற்போது நிறுத்தப்பட்டுள்ளது. எனவே இந்த கட்டிடப் பணியை மீண்டும் தொடங்கி மக்கள் பயன்பாட்டிற்கு கொண்டு வருவதற்கான விஷயங்கள் குறித்து விவாதிக்கப்பட்டுள்ளது.
எனவே, கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் பொறுப்பு அமைச்சராக உள்ள பொதுப்பணித்துறை அமைச்சர் எ.வ.வேலு, வன்னியர் பொதுச்சொத்து நல வாரியத்தின் தலைவராக உள்ள சந்தானம் உள்ளிட்டோரிடம் தொடர்ந்து விவாதித்து இந்த கட்டிடத்தை பயன்பாட்டிற்கு கொண்டு வர நடவடிக்கை எடுக்கப்படும்.
மேலும், தமிழ்நாடு முழுவதும் பல்வேறு வன்னியர் அமைப்புகள் செயல்படுத்தி வரும் அறக்கட்டளைகள் மற்றும் அதற்குச் சொந்தமான இடங்கள் குறித்து வன்னிய பொதுச்சொத்து நலவாரியம் ஆய்வு செய்யப்பட்டு வருகிறது. ஆய்வுக்குப் பின் அதனை மேம்படுத்தி மக்கள் பயன்பாட்டிற்கு கொண்டு வருவதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்படும்" என அமைச்சர் சிவசங்கர் தெரிவித்தார்.
No comments:
Post a Comment