ஒன்னு கூடிட்டாங்கய்யா.. டெல்லியில் தமிழக எம்பிக்கள் "மாஸ்".. டி.ஆர்.பாலு வீட்டில் அதிமுக எம்பி!
நீட் விலக்கு மசோதா தொடர்பான டெல்லி ஆலோசனைக் கூட்டத்தில், அதிமுக, திமுக எம்பிக்கள் கலந்து கொண்டனர்.
நீட் விலக்கு மசோதா விவகாரம் தொடர்பாக டெல்லியில் நடந்த ஆலோசனைக் கூட்டத்தில் தமிழக எம்பிக்கள் கட்சி பாகுபாடின்றி ஒற்றுமையாக கலந்து கொண்டது டெல்லி அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியது.
தமிழகம் என்றாலே எதற்காகவும் ஒன்று சேர மாட்டார்கள், மக்கள் பிரச்சினைகளாக இருந்தாலும் தனித் தனியாகத்தான் செயல்படுவார்கள் என்ற தோற்றம் வெளியில் உள்ளது. இதை உடைக்கும் வகையில் நேற்று ஒரு காட்சி டெல்லியில் அரங்கேறியது.
நீட் விலக்கு மசோதாவை ஆளுநரின் ஒப்புதலுக்கு தமிழக அரசு அனுப்பி வைத்துள்ளது. சட்டசபையில் நிறைவேற்றப்பட்ட இந்த மசோதாவை குடியரசுத் தலைவருக்கு ஆளுநர் அனுப்பி வைக்க வேண்டும். இதுதான் மரபு. ஆனால் இதுவரை ஆளுநர் குடியரசுத் தலைவருக்கு மசோதாவை அனுப்பவில்லை. சமீபத்தில் இதுதொடர்பாக கேட்கப்பட்ட ஆர்டிஐ கேள்விக்கு, பரிசீலனையில் உள்ளது என்று மட்டும் ஆளுநர் மாளிகை விளக்கம் அளித்துள்ளது. இதன் மூலம் இந்த மசோதா கிடப்பில் இருப்பது உறுதியாகியுள்ளது.
இந்த நிலையில் மசோதாவை உடனடியாக குடியரசுத் தலைவருக்கு அனுப்பி வைக்க ஆளுநருக்கு உத்தரவிடக் கோரி தமிழக எம்பிக்கள் நேற்று உள்துறை அமைச்சர் அமித்ஷாவைச் சந்திக்கத் திட்டமிட்டு டெல்லியில் கூடினர். இதில்தான் ஒரு ஆச்சரியம் நடந்தது. திமுகவைச் சேர்ந்த டி.ஆர்.பாலு வீட்டில் கூடி முதலில் எம்பிக்கள் ஆலோசனை நடத்தினர். அதில் யாரும் எதிர்பாராத வகையில் அதிமுகவைச் சேர்ந்த ராஜ்யசபா உறுப்பினர் நவநீதகிருஷ்ணன் வருகை தந்து ஆலோசனையில் கலந்து கொண்டார்.
திமுக தலைவரின் வீட்டில் அதிமுக எம்பியைப் பார்த்ததும் பலருக்கும் வியப்பு. அனைவரும் நீட் விலக்கு மசோதா தொடர்பாக ஆலோசனை நடத்தினர். பின்னர் ஒன்று சேர்ந்து அமித் ஷா வீட்டுக்கும் சென்றனர். ஆனால் அமித் ஷாவுக்கு, பிரதமருடன் சந்திப்பு இருந்ததால் அவர்களால் அமித் ஷாவைச் சந்திக்க முடியவில்லை. இதனால் மீண்டும் டி.ஆர் பாலு வீட்டுக்கே திரும்பிச் சென்றனர். டிஆர். பாலு வீட்டுக்கு அதிமுக எம்பி நவநீதகிருஷ்ணன் வந்ததுதான் டெல்லியில் நேற்று ஹாட்டான டாப்பிக்காக இருந்தது. பலரும் இதை எதிர்பார்க்கவில்லை. நவநீதகிருஷ்ணன் மட்டுமல்லாமல் பிற அதிமுக எம்பிக்களும் இணைந்து செயல்பட வேண்டும் என்றும் தமிழக மக்கள் ஆவலுடன் எதிர்பார்க்கின்றனர்.
வழக்கமாக எதிர் முனையில் செயல்படும் திமுக, அதிமுக நீட் விலக்கு மசோதா விவகாரத்தில் தோளோடு தோள் நிற்பது பலரையும் ஆச்சரியப்படுத்தியுள்ளது. ஆனால் இந்த ஒற்றுமை தமிழ்நாடு தொடர்பான எல்லாப் பிரச்சினைகளிலும் இருந்தால் நன்றாக இருக்கும் என்பது மக்கள் எண்ணமாகும். நீட் விலக்கு மசோதாவுக்கு பாஜகவைத் தவிர மற்ற அனைத்துக் கட்சிகளும் ஆதரவு கொடுத்துள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment