டெஸ்மான்ட் டூடுவை நான் மிஸ் செய்வேன்.. மிச்சல் ஒபாமா நெகிழ்ச்சி
நிறவெறிக்கு எதிராக போராடிய டெஸ்மான்ட் டூடுவுக்கு நான் நன்றிக்கடன் பட்டுள்ளேன் என்று மிச்சல் ஒபாமா பேச்சு.
தென் ஆப்பிரிக்காவில் இனவெறி வெள்ளையர் அரசுக்கு எதிராக நெல்சன் மண்டேலாவுடன் இணைந்து போராடிய சமூகப் போராளி ஆர்ச்பிஷப் டெஸ்மான்ட் டூடு மறைவுக்கு முன்னாள் அமெரிக்க அதிபர் ஒபாமா, அவரது மனைவி மிச்சல் ஒபாமா உள்ளிட்ட உலகத் தலைவர்கள் இரங்கல் தெரிவித்துள்ளனர்.
90 வயதில் டெஸ்மான்ட் டூடு மரணமடைந்துள்ளார். அமைதிக்கான நோபல் பரிசு பெற்றவர் டூடு. ஆர்ச்பிஷப்பாக இருந்த அவர் இனவெறிக்கு எதிராக போராடியவர். நெல்சன் மண்டேலாவும் இவரும் சம காலத்தவர்கள். இனவெறிக்கு எதிராக தனது இறுதி மூச்சு வரை குரல் கொடுத்து வந்த டூடு மரணம் சமூகப் போராளிகளிடையே சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
சமூக நீதிக்காகவும், சமத்துவத்துக்காகவும், இனவெறி, நிறவெறிக்கு எதிராகவும் அயராமல் குரல் கொடுத்து வந்த டூடுவின் மறைவுக்கு உலகத் தலைவர்கள் இரங்கல் தெரிவித்துள்ளனர்.
முன்னாள் அமெரிக்க அதிபர் பராக் ஒபாமா, அவரது மனைவி மிச்சல் ஒபாமா உள்ளிட்டோரும் இரங்கல் தெரிவித்துள்ளனர். மிச்சல் ஒபாமா இதுகுறித்த தனது பழைய நினைவுகளை புகைப்படங்களாக வெளியிட்டுள்ளார். டூடுவுடன் தனது பிள்ளைகள் நடத்திய கலந்துரையாடல், தான் கலந்து கொண்ட தருணங்களை நினைவு கூர்ந்துள்ள அவர், உலகம் முழுவதும் இனவெறிக்கு எதிரான போராட்டங்களில் மிக முக்கியமானவர் டூடு. உலகத் தலைவர்கள் பலருக்கும், சமூகப் போராளிகள் பலருக்கும் முன்னுதாரணமாக திகழ்ந்தவர், எனக்கும்தான். மிகவும் இரக்க மனம் படைத்தவர். நிறைய வேடிக்கையாக பேசுபவரும் கூட. அவருடன் இணைந்து செலவிட்ட தருணங்களை நினைத்துப் பார்க்கிறேன். அந்தத் தருணங்களுக்காக அவருக்கு நன்றி கூறுகிறேன் என்று கூறியுள்ளார் மிச்சல்.
பராக் ஒபாமா, டூடு மரணம் குறித்துக் கூறுகையில், எனக்கு நல்ல நண்பர், முன்னோடி, உதாரண புருஷர்,
தார்மீக நெறிகளுக்கு நல்லுதாரணமாக திகழ்ந்தவர் டூடு. தென் ஆப்பிரிக்காவில் நடந்த விடுதலைப் போராட்டத்தில் முக்கியப் பங்காற்றிய களப் போராளி டூடு. தனது நாடு மட்டுமல்லாமல் உலகம் முழுவதும் சமத்துவம் தழைத்தோங்க வேண்டும் என்று விரும்பியவர், குரல் கொடுத்தவர். சிறந்த நகைச்சுவையாளரும் கூட, சிறந்த மனிதாபிமானி. நானும், மிச்சலும் அவரை தனிப்பட்ட முறையில் மிஸ் செய்கிறோம் என்று கூறியுள்ளார் பராக் ஒபாமா.
ஆர்ச்பிஷப் டெஸ்மான்ட் டூடுவுக்கு 1984ம் ஆண்டு அமைதிக்கான நோபல் பரிசு அளிக்கப்பட்டது. 1948ம் ஆண்டு முதல் 1991ம் ஆண்டு வரை தென் ஆப்பிரிக்காவில் வெள்ளையர் அரசு நடத்தி வந்த நிறவெறி ராஜ்ஜியத்திற்கு எதிராக தீரமுடன் போராடியவர் டெஸ்மான்ட் டூடு. எத்தனையோ அடக்குமுறைகளை வெள்ளையர் அரசு கொண்டு வந்தபோதும் அஞ்சாமல் தனது மக்களுக்காக தொடர்ந்து குரல் கொடுத்து வந்தவர் டூடு.
தென் ஆப்பிரிக்காவை ஆட்சி புரிந்து வந்த நிறவெறி அரசின் அதிபராக விளங்கிய எப்டபிள்யூ டி கிளர்க் சமீபத்தில்தான் தனது 85வது வயதில் மரணமடைந்தார். அவர் மரணமடைந்த சில வாரங்களில் டெஸ்மான்ட் டூடுவின் மரணச் செய்தி வந்துள்ளது குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment