பரிகாரம் பெயரில் கெட்டுப்போன உணவு… திருநள்ளாறு சென்று சனியை தேடிக்கொள்ளும் பக்தர்கள்!
திருநள்ளாறு சனீஸ்வரன் கோயிலில் பரிகார பூஜை என்ற பெயரில் வியாபாரிகள் கெட்டுப்போன உணவுகளை விற்பனை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
புதுச்சேரி மாநிலம் காரைக்கால் அடுத்த திருநள்ளாறில் உலக புகழ்பெற்ற சனீஸ்வரன் கோயில் உள்ளது. இந்த கோயிலுக்கு நாடு முழுவதும் இருந்து நாள்தோறும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் வந்து செல்வது வழக்கம்.
ஜோதிடத்தின் படி, ஸ்ரீ சனீஸ்வர பகவன் ஒவ்வொரு ராசியிலும் 2½ ஆண்டுகள் சஞ்சரிப்பார், மேலும், 2 1/2 வருடங்களுக்கு ஒரு முறை ஒரு ராசியிலிருந்து மற்றொரு ராசிக்கு பெயர்ச்சி ஆவார். சனி பகவானுக்கு உரிய ஸ்தலமாக திருநள்ளாறுவில் உள்ள ஸ்ரீ தர்ப்பனேஸ்வரர் கோயிலில் சனி பெயர்ச்சி நிகழ்வு, விழா போன்று மிக விமர்சையாக கொண்டாடப்படுகிறது.
மேலும், ஜோதிடத்தை நம்புவர்கள் தங்களது ராசி தோஷங்கள் மற்றும் பரிகாரங்களுக்காக திருநள்ளாறு சனீஸ்வரன் கோயிலுக்கு சென்று வழிபடுவார்கள். அப்போது, நளன் குளம் அருகில் விற்கப்படும் பரிகார பொருட்கள் அருகில் இருக்கும் பிச்சை எடுப்பவர்களுக்கு வழங்கப்படுவது வழக்கம்.
பக்தர்கள் அவ்வாறு வழங்கப்படும் இந்த பரிகார உணவுப் பொருட்களை மீண்டும் பரிகார உணவு பொருட்கள் கடைக்கு விற்பனை செய்ய மீண்டும் கொண்டு செல்லப்பட்டு விற்கப்படுவதாக உணவு பாதுகாப்புத்துறை புகார்கள் சென்றது.
அதன் அடிப்படையில், உணவு பாதுகாப்புத்துறை அதிகாரிகள் நேற்று திடீர் சோதனை நடத்தினர். அப்போது, நளன் குளத்தை சுற்றி உள்ள தெரு ஓரத்தில் விற்கப்படும் பரிகார உணவு பொருட்கள் கெட்டுப் போனது தெரியவந்தது. அதனைத் தொடர்ந்து கெட்டுப்போன பரிகாரம் உணவு பொருட்களை உணவு பாதுகாப்புத்துறை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.
மேலும், பிச்சை எடுப்பவர்களின் இருந்து கெட்டுப்போன உணவு பொருட்களையும் பறிமுதல் செய்துள்ளனர். கெட்டுப்போன உணவு பொருட்களை விற்பனை செய்தவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்றும், இனி வாரத்தில் ஒருநாள் உணவு பாதுகாப்புத்துறை சார்பில் அதிகாரிகள் சோதனை நடத்துவார்கள் எனவும் தெரிவித்துள்ளனர்.
லட்சக்கணக்கான பக்தர்கள் வந்து சாமி தரிசனம் செய்யும் சனி பகவான் கோவில் குளத்தில் கெட்டுப்போன பரிகார உணவு விற்பனை செய்த சம்பவம் உள்ளூர் மற்றும் வெளியூர் பக்தர்கள் மத்தியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது
No comments:
Post a Comment