10 அமைச்சர்கள், 20 எம்.எல்.ஏக்களுக்கு கொரோனா; அதிர்ச்சியில் மாநில அரசு! - TAMIL BOOKS FREE PDF

tamil books and story reading portal

Post Top Ad

Saturday, January 1, 2022

10 அமைச்சர்கள், 20 எம்.எல்.ஏக்களுக்கு கொரோனா; அதிர்ச்சியில் மாநில அரசு!

10 அமைச்சர்கள், 20 எம்.எல்.ஏக்களுக்கு கொரோனா; அதிர்ச்சியில் மாநில அரசு!


அமைச்சர்கள், எம்.எல்.ஏக்கள் பலருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டிருப்பது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
மகாராஷ்டிர மாநிலத்தில் இதுவரை 10 அமைச்சர்கள், 20 எம்.எல்.ஏக்களுக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு உறுதி செய்யப்பட்டிருப்பதாக துணை முதல்வர் அஜித் பவார் தெரிவித்துள்ளார். இம்மாநிலத்தில் கொரோனா தொற்று வேகமாக அதிகரித்து வருவதால் கட்டுப்பாடுகள் மேலும் தீவிரப்படுத்தப்படும் என்றும் குறிப்பிட்டுள்ளார். முன்னதாக கோரேகான் பீமாவில் நடந்த போரின் 204வது ஆண்டை ஒட்டி, பெர்னே கிராமத்தில் நடந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டார்.

பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், சட்டமன்ற கூட்டத்தொடரை முன்கூட்டியே முடித்துக் கொண்டோம். தற்போது பல்வேறு அமைச்சர்கள், எம்.எல்.ஏக்களுக்கு கொரோனா பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளது. மறுபுறம் பல்வேறு கொண்டாட்டங்களில் ஈடுபட ஒவ்வொருவரும் ஆர்வம் காட்டி வருகின்றனர். இந்த சூழலில் புதிய வகை ஒமைக்ரான் வைரஸ் வேகமாக பரவி வருவதை மறந்துவிடக் கூடாது.

பிரதமர் மோடியின் அறிவுறுத்தலின்பேரில் பல்வேறு மாநிலங்களும் இரவுநேர ஊரடங்கு உள்ளிட்ட கட்டுப்பாடுகளை அமல்படுத்தியுள்ளன. மகாராஷ்டிராவிலும் பாதிப்புகள் தொடர்ந்து அதிகரிக்கும் பட்சத்தில் கட்டுப்பாடுகள் தீவிரமடையும். ஒருவேளை கடும் கட்டுப்பாடுகளை தவிர்க்க வேண்டுமெனில் அனைவரும் வழிகாட்டு நெறிமுறைகளை பின்பற்ற வேண்டும் என்று வலியுறுத்தினார்.

மகாராஷ்டிராவில் முதல்வர் உத்தவ் தாக்கரே தலைமையில் சிவசேனா - தேசியவாத காங்கிரஸ் - காங்கிரஸ் கூட்டணி ஆட்சி நடைபெற்று வருகிறது. இதற்கு ’மகா விகாஸ் அகாதி’ என்று பெயரிடப்பட்டுள்ளது. பாஜகவின் திரைமறைவு வேலைகளையும் தாண்டி இரண்டு ஆண்டுகளை தாண்டி கூட்டணி ஆட்சி வெற்றிகரமாக தொடர்ந்து கொண்டிருக்கிறது.

கொரோனா இரண்டாவது அலையின் போது இந்தியாவிலேயே மிக மோசமான பாதிப்பிற்கு ஆளானது மகாராஷ்டிரா. பின்னர் கடுமையான கட்டுப்பாடுகள், தடுப்பூசி பயன்பாடு ஆகியவற்றால் நிலைமை படிப்படியாக கட்டுக்குள் கொண்டு வரப்பட்டது. தற்போது கொரோனா மற்றும் ஒமைக்ரான் வைரஸ் வேகமாக பரவி வருகிறது. இதனால் மீண்டும் படிப்படியாக கட்டுப்பாடுகள் அமல்படுத்தப்பட்டு வருகின்றன.

குறிப்பாக மகாராஷ்டிராவில் கடந்த ஆண்டு டிசம்பர் 15ஆம் தேதிக்கு பின்னர் கொரோனா பரவல் வேகமெடுத்துள்ளது. கடந்த புதன் அன்று தினசரி தொற்று 3,900ஆக பதிவானது. இந்நிலையில் நேற்று புதிதாக 8,067 பேருக்கு கோவிட் பாதிப்பு உறுதி செய்யப்பட்டு அதிர்ச்சி அளித்துள்ளது. மறுபுறம் ஒமைக்ரான் பரவலும் அதிகரித்து வருகிறது. எனவே கொரோனாவின் மூன்றாவது அலையானது ஒமைக்ரான் அலையாக உருவெடுத்துள்ளது என்று மாநில அரசு எச்சரித்தது குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment

Post Top Ad