புதிதாக உருவான 12 நகராட்சிகள்: தமிழக அரசு அதிரடி அறிவிப்பு!
தமிழ்நாட்டில் 12 பேரூராட்சிகளை நகராட்சிகளாக அறிவித்து தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது.
நிர்வாக வசதிக்காக புதிய மாநகராட்சிகள், நகராட்சிகள் உருவாக்கப்பட்டு வருகின்றன.
தமிழ்நாட்டில் புதிதாக 12 பேரூராட்சிகள் நகராட்சிகளாக தரம் உயர்த்தப்படும் என அறிவிக்கப்பட்டது. தற்போது அதற்கான அரசாணை வெளியிடப்பட்டுள்ளது.
இது குறித்து தமிழக அரசு நேற்று (ஜனவரி 17) வெளியிட்ட அரசாணையில், “சட்டபேரவையில் நகராட்சி நிர்வாக துறை அமைச்சர் வெளியிடப்பட்ட அறிவிப்பினைத் தொடர்ந்து திருவள்ளூர் மாவட்டம்- பொன்னேரி, திருநின்றவூர், கடலூர் மாவட்டம்- திட்டக்குடி, வடலூர், தஞ்சாவூர் மாவட்டம்- அதிராம்பட்டினம், தூத்துக்குடி மாவட்டம்- திருச்செந்தூர், கோவை மாவட்டம்- கருமத்தம்பட்டி, காரமடை, கூடலூர், மதுக்கரை, கரூர் மாவட்டம்- பள்ளப்பட்டி மற்றும் திருப்பூர் மாவட்டம்- திருமுருகன்பூண்டி ஆகிய 12 பேரூராட்சிகளை நகராட்சிகளாக அமைத்து உருவாக்கலாம் என்று அரசின் முடிவினை அறிவித்தும், இந்த உத்தேச முடிவு குறித்து தொடர்புடைய பேரூராட்சிப்பகுதியில் வசிப்போர் எவருக்கும் ஆட்சேபணைகள் ஏதுமிருப்பின் அவற்றை அறிவிக்கை அரசிதழில் வெளியிடப்பட்ட ஆறு வார காலத்திற்குள் அரசுக்கு அனுப்பி வைக்கலாம் எனவும் ஆணைகள் வெளியிடப்பட்டன.
இவ்வறிக்கைகள் கடந்த 2021ஆம் ஆண்டு அக்டோபர் 14ம் தேதி அரசின் சிறப்பிதழில் வெளியிடப்பட்டுள்ளன.
மேலும் 12 பேரூராட்சிகளை நகராட்சிகளாக தரம் உயர்த்தலாம் என்று உத்தேச முடிவு குறித்து ஆறு வார காலத்தில் ஆட்சேபணைகள் ஏதும் அரசால் பெறப்படவில்லை. பொதுமக்களிடம் இருந்து ஆட்சேபணைகள் ஏதும் இல்லை என தொடர்புடைய பேரூராட்சிகளால் தீர்மானிக்கப்பட்டுள்ளதாக தொடர்புடைய மாவட்ட ஆட்சியர்கள் தெரிவித்துள்ளனர்.
மேலும் தொடர்புடைய பேரூராட்சிகளின் தீர்மானங்கள் மற்றும் தொடர்புடைய மாவட்ட ஆட்சியர்களின் பரிந்துரைக்கேற்ப மேற்கண்ட 12 பேரூராட்சிகளை நகராட்சிகளாக தரம் உயர்த்தலாம் என்ற உத்தேச முடிவினை உறுதி செய்து அரசாணை பிறப்பிக்க அரசுக்கு பரிந்துரை செய்வதாகவும் நகராட்சி நிர்வாக இயக்குநர் தெரிவித்துள்ளார்.
இந்நிலையில் அரசின் கவனமான பரிசீலனைக்கு பின்னர் தொடர்புடைய மாவட்ட ஆட்சித் தலைவர்கள் மற்றும் நகராட்சி நிர்வாக இயக்குநரின் பரிந்துரையை ஏற்று 12 பேரூராட்சிகளை நகராட்சிகளாக அறிவித்து ஆணையிடுகிறது" என்று தமிழக அரசு வெளியிட்ட அரசாணையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
No comments:
Post a Comment