பொங்கல் பரிசுத் தொகுப்பை நடுரோட்டில் கொட்டிய பயனாளிகள்... மயிலாடுதுறையில் பரபரப்பு!
பொங்கல் பண்டிகை முடிவடைந்த நிலையில், பரிசுத் தொகுப்பு காலதாமதமாக தரமற்ற முறையில் வழங்கப்பட்டதை கண்டித்து அவற்றை சாலையில் கொட்டி பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
பொங்கல் பண்டிகை முடிவடைந்த நிலையில், மயிலாடுதுறை மாவட்டம் குத்தாலம் தாலுக்கா திருவாவடுதுறை ஊராட்சி மேலக்கடைதெரு ரேசன் கடையில் காலதாமதமாக பொங்கல் சிறப்பு பரிசுத்தொகுப்பு வழங்கப்பட்டதை கண்டித்து பொதுமக்கள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
ரேசன் கடையை முற்றுகையிட்ட பொதுமக்கள் இந்திரா நகர் அருகே மயிலாடுதுறை-கும்பகோணம் சாலையில் தமிழக அரசின் பொங்கல் பரிசுதொகுப்பை சாலையில் கொட்டி போராட்டத்தில் ஈடுபட்டனர்.
பொங்கல் பண்டிகையை கொண்டாடுவதற்காக திருவாவடுதுறை ரேசன் கடையில் பொங்கல் பரிசு தொகுப்பு வழங்காமலேயே பெரும்பாலானவர்களுக்கு பொங்கல் பரிசுத் தொகுப்பு பெற்றுள்ளதாக குறுஞ்செய்தி வந்ததை கண்டித்தும், பொங்கல் பண்டிகை முடிவடைந்தும் காலதாமதமாக பொங்கல் பரிசு தொகுப்பு வழங்கப்படுவதை கண்டித்தும் அவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். மேலும் பொங்கல் பரிசு தொகுப்பு தரமற்ற முறையில் இருப்பதாகவும் அவர்கள் குற்றம்சாட்டினர்.
மயிலாடுதுறை -கும்பகோணம் பிரதான சாலையில் சுமார் இரண்டு மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. சம்பவம் தொடர்பாக குத்தாலம் போலீசார், குத்தாலம் வட்டவழங்கல்துறை அதிகாரிகள் பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர்.
தரமான பொருட்கள் வழங்குவது தொடர்பான குற்றச்சாட்டு குறித்தும், குறுஞ்செய்தி வந்தது தொடர்பாகவும் உரிய விசாரணை செய்து நடவடிக்கை எடுப்பதாக அதிகாரிகள் கூறியதன் பேரில் போராட்டத்தை கைவிட்டு பொதுமக்கள் கலைந்து சென்றனர்.
பொங்கல் பண்டிகை முடிவடைந்தும் இதுவரை பொங்கல் பரிசுத் தொகுப்பு வழங்காமல் அதனை வழங்கியதாக ப.யனாளிகளுக்கு குறுஞ்செய்தி அனுப்பப்பட்ட சம்பவம் மயிலாடுதுறை மாவட்டத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
No comments:
Post a Comment