குடியரசு தின அணிவகுப்பு ஊர்தி அரசியல்: லேட்டாக கொந்தளித்த ஸ்டாலின்! - TAMIL BOOKS FREE PDF

tamil books and story reading portal

Post Top Ad

Monday, January 17, 2022

குடியரசு தின அணிவகுப்பு ஊர்தி அரசியல்: லேட்டாக கொந்தளித்த ஸ்டாலின்!

குடியரசு தின அணிவகுப்பு ஊர்தி அரசியல்: லேட்டாக கொந்தளித்த ஸ்டாலின்!



குடியரசு தின விழாவில் தமிழ்நாட்டை பறைசாற்றும் ஊர்திகளுக்கு அனுமதி மறுக்கப்பட்டுள்ளது பேசுபொருளாகி உள்ளது
தமிழகத்தில் இன்று ஹாட் டாப்பிகாக ஓடிக்கொண்டிருக்கும் முக்கியமான விஷயம், குடியரசு தின விழாவில் தமிழ்நாட்டை பறைசாற்றும் ஊர்திகளுக்கு அனுமதி மறுக்கப்பட்டுள்ளதுதான். இதனையில் கையில் எடுத்துள்ள ஆளுங்கட்சியான திமுக மற்றும் கூட்டணி கட்சிகள் ஒன்றிய பாஜக அரசை கடுமையாக விமர்சித்து வருகின்றனர். பாஜகவினர் அனுமதி மறுக்கப்பட்டதற்கான காரணங்களையும், தமிழக சென்ட்டிமென்ட்டோடு நாங்கள் விளையாடவில்லை என்றும் விளக்கங்களை அளித்து வருகின்றனர்.

குடியரசு தின விழா கொண்டாட்டங்கள் டெல்லி ராஜபாதையில் ஒவ்வொரு ஆண்டும் ஜனவரி 26ஆம் தேதி கோலாகலமாக கொண்டாடப்படும். ஆனால், கொரோனா காரணமாக கடந்த ஆண்டு பல்வேறு கட்டுப்பாடுகளுடன் கொண்டாடப்பட்டன, வெளிநாட்டு சிறப்பி விருந்தினரும் கலந்து கொள்ளவில்லை. இந்த ஆண்டும் கொரோனா ஒமைக்ரான் பரவலால் கட்டுப்பாடுகளுடனேயே நடத்த ஒன்றிய அரசு திட்டமிட்டுள்ளது.

தமிழ்நாட்டுக்கு அனுமதி மறுப்பு

டெல்லி ராஜபாதையில் நடைபெறும் விழாவில், நாட்டின் பெருமையை பறைசாற்றும் வகையிலான முப்படைகளின் அணிவகுப்பு நிகழ்ச்சி, பல்வேறு மாநிலங்கள், யூனியன் பிரதேசங்களின் கலாச்சாரங்களை குறிக்கும் மாதிரிகள் இடம்பெற்ற ஊர்திகள் அணிவகுப்பு நடைபெறும். இது பார்க்கவே கண்கொள்ளாக் காட்சியாக இருக்கும்.

இந்த ஆண்டு தமிழ்நாட்டின் சார்பில், நாட்டின் விடுதலைக்காகப் போராடிய வ.உ.சி., மகாகவி பாரதியார், ராணி வேலுநாச்சியார், மருது சகோதரர்கள் ஆகிய விடுதலைப் போராட்ட வீரர்களின் உருவங்கள் அடங்கிய ஊர்தி இடம்பெறுவதாக இருந்தது. ஆனால், அதற்கு அனுமதி மறுக்கப்பட்டுள்ளது தற்போது பேசுபொருளாகி உள்ளது. “பிரபலமான சுதந்திர போராட்ட வீரர்கள்” இடம் பெற்றால்தான் அனுமதிப்போம், வ.உ.சி, வேலுநாச்சியார் போன்ற சுதந்திரபோராட்ட வீரர்களை சர்வதேச தலைவர்களுக்கு தெரியாது என கூறி ஒன்றிய அரசு நிராகரித்துள்ளதாக கூறப்படுகிறது.

தமிழ்நாடு மட்டுமல்லாமல், மேற்குவங்கம், கேரளா ஆகிய மாநிலங்களின் ஊர்திகளுக்கும் அனுமதி மறுக்கப்பட்டுள்ளது. தென்மாநிலங்கள் ஒட்டுமொத்தமாக புறக்கணிக்கப்பட்டுள்ள நிலையில், பாஜக ஆளும் கர்நாடக மாநிலத்துக்கு மட்டும் அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

மேலும், டெல்லியில் நடைபெறும் குடியரசு தின அணிவகுப்பில், கொரோனா பெருந்தொற்று உள்ளிட்ட பல்வேறு காரணங்களால் பங்கேற்கும் மாநிலங்களின் எண்ணிக்கை 12 ஆக குறைக்கப்பட்டுள்ளது. இதற்கும், தமிழகம், மேற்குவங்கம், கேரளா உள்ளிட்ட மாநிலங்களை ஒன்றிய அரசு நிராகரித்ததற்கும் கடும் கண்டனங்கள் எழுந்து வருகின்றன. இது தொடர்பாக முதல்வர் ஸ்டாலின் பிரதமர் மோடிக்கு கடிதம் எழுதியுள்ளார்.

ஆனால், ஸ்டாலின் ஏன் இவ்வளவு தாமதமாக கடிதம் எழுத வேண்டும் என்று கேள்வி எழுப்புகின்றனர் விவரம் அறிந்தவர்கள். இதுகுறித்து அவர்கள் கூறுகையில், “குடியரசு தின அணிவகுப்பு ஊர்திகளுக்கு ஒரே நாளில் அனுமதி வழங்கப்படுவதில்லை. இந்த நடைமுறை சுமார் 6 மாதங்களாவது நடைபெறும். அதாவது ஆகஸ்ட் மாதமே இதற்கான பேச்சுவார்த்தை தொடங்கப்பட்டு விடும். ஒவ்வொரு மாநிலத்திடமும் அவர்களது சார்பில் இடம்பெறவுள்ள வடிவமைப்பு பற்றி கேட்கப்பட்டு, ஒவ்வொரு மாநிலத்தில் இருந்து சொல்லக் கூடிய யோசனைகள் பரிசீலிக்கப்பட்டு இறுதிபடுத்தப்படும். அனைத்து மாநிலங்களும் அணிவகுப்பில் இடம் பெறச் செய்ய முடியாது. சில மாநிலங்களுக்கு மட்டுமே கிடைக்கும். சில மாநிலங்களுக்கு கிடைக்காது. எது சிறந்ததோ அந்த ஊர்திகள் மட்டுமே அணிவகுப்பில் கலந்து கொள்ளும். தமிழகத்துக்கு இதற்கு முன்பும் கிடைக்காமல் போயுள்ளது.” என்கின்றனர்.


குடியரசு தின விழா அணிவகுப்பில் இடம்பெறும் ஊர்திகள் இறுதி செய்யப்பட்டு, அதில், தமிழகத்துக்கு அனுமதி மறுக்கப்பட்டுள்ள விஷயம் கடந்த டிசம்பர் மாதமே தெரிவிக்கப்பட்டு விட்டது என கூறும் அவர்கள், பிரதமருக்கு மோடிக்கு முதல்வர் ஸ்டாலின் எழுதிய கடிதத்தில் கூட ஊர்தியை இறுதி செய்யும் வல்லுநர் குழுவுடன் மூன்று முறை தமிழக அரசின் பிரதிநிதிகள் கலந்து கொண்டதை குறிப்பிட்டுள்ளார் என சுட்டிக்காட்டுகின்றனர்.

கடந்த மாதமே தமிழக அரசுக்கு தெரியவந்த இந்த விஷயத்துக்கு அப்போதே ஸ்டாலின் குரல் கொடுத்திருக்கலாம். ஆனால், ஊடகங்களில் இந்த விஷயம் வெளி வந்தபிறகு. மேற்குவங்க முதல்வர் மம்தா பானர்ஜி கடிதம் எழுதிய பிறகே இதுகுறித்து ஸ்டாலின் பேசுகிறார். மாறாக இதற்கு முன்பே அவர் கடிதம் எழுதியிருந்தாலோ, ஒன்றிய அரசை இது தொடர்பாக வலியுறுத்தியிருந்தாலோ அதற்கு கூடுதல் பலம் கிடைத்திருக்கும் என்றும் அவர்கள் கூறுகிறார்கள்.
மேலும், வல்லுநர் குழு ஒப்புதல் அளிக்கும் வகையிலான மாதிரிகளை இடம் பெறச் செய்திருந்தால் தமிழகத்துக்கு அனுமதி கிடைக்க வாய்ப்பிருந்திருக்கும் என்று கூறும் அவர்கள், வடக்கிற்கும் தெற்கிற்குமே நிறைய வித்தியாசங்கள் உள்ளன. உதாரணமாக; குரு ரவிதாஸின் பிறந்தநாளுக்காக பஞ்சாபில் தேர்தல் தள்ளி வைக்கப்பட்டுள்ளது. ஆனால், அவரை யாரென்று தமிழகத்தில் இருப்பவர்களுக்கு பெரும்பாலும் தெரியாது. அதுபோலத்தான் வட இந்தியர்களுக்கு தமிழகத்தை சேர்ந்தவர்களை தெரிந்திருக்க வாய்ப்பில்லை என்கின்றனர்.

மோடிக்கும் இதற்கும் சம்பந்தமில்லை

இந்த விவகாரம் குறித்து மத்திய அரசு வட்டரத் தகவல்களிடம் விசாரிக்கையில், அலங்கார ஊர்தி அணிவகுப்பு மறுப்புக்கு மோடி அரசுதான் காரணம் என்று சொல்வதே முதலில் தவறு. அலங்கார ஊர்திகளை மத்திய பாதுகாப்பு அமைச்சகத்தின் கீழ் செயல்படும் நிபுணர் குழுவே தேர்வு செய்யும். பல்வேறு மாநிலங்கள், மத்திய அமைச்சகங்களிடம் இருந்து பெறப்பட்ட பரிந்துரைகள் கலை, கலாசாரம், சிற்பம், இசை, கட்டிடக்கலை, நடனம் போன்ற துறைகளை சேர்ந்த நிபுணர் குழுவின் கூட்டங்களில் மதிப்பீடு செய்யப்படுகின்றன. பரிந்துரைகள் செய்யப்படுவதற்கு முன்னர் அலங்கார ஊர்திகளின் கருப்பொருள், கருத்து, வடிவமைப்பு, காட்சி அமைப்பின் தாக்கம் ஆகியவை ஆய்வு செய்யப்படுகின்றன.” என்கின்றனர்.


“இந்த ஆண்டு அணிவகுப்புக்கு மத்திய அமைச்சகங்கள் மற்றும் மாநிலங்களிடம் இருந்து மொத்தம் 56 பரிந்துரைகள் பெறப்பட்டன. அவற்றில் 21 மட்டுமே தேர்வு செய்யப்பட்டன. பல்வேறு காரணங்களால் பெறப்பட்ட முன்மொழிவுகள், பரிந்துரைகள் நிராகரிக்கப்படுவது வழக்கமான ஒன்றுதான். இந்த ஆண்டும், சென்ற ஆண்டும் கொரோனா காரணமாகவும் பரிந்துரைகள் நிராகரிக்கப்பட்டுள்ளன. கேரளா, தமிழ்நாடு, மேற்குவங்கம் ஆகிய மாநிலங்களில் முன்மொழிவுகள் உரிய செயல்முறைகள் மற்றும் உரிய விவாதங்களுக்கு பிறகே நிபுணர் குழுவால் நிராகரிக்கப்பட்டன” என்றும் அவர்கள் தகவல் தெரிவித்துள்ளனர்.

இதுகுறித்து அரசியக் விமர்சகர்கள் சிலரிடம் கேட்டபோது, ஒன்றிய அரசு சொல்வதெல்லாம் சரிதான்; இருக்கட்டும். “பிரபலமான சுதந்திர போராட்ட வீரர்கள்” இடம் பெற்றால்தான் அனுமதிப்போம், வ.உ.சி, வேலுநாச்சியார் போன்ற சுதந்திரபோராட்ட வீரர்களை சர்வதேச தலைவர்களுக்கு தெரியாது என கூறி ஒன்றிய அரசு நிகாரித்துள்ளது. ஆனால், நடப்பாண்டு குடியரசு தின விழாவில் சர்வதேச தலைவர்கள் கலந்து கொள்ளாத நிலையில், யாருக்கு தெரிவதற்காக அனுமதி மறுக்கப்பட்டது என கேள்வி எழுப்புகிறார்கள்.

மேலும், “வீரமங்கை வேலுநாச்சியார், கப்பலோட்டிய தமிழர் வ.உ.சி., பாரதியார் போன்றோரின் தியாகங்கள் தமிழ் மக்கள் ஒவ்வொருவரின் வாழ்விலும் கலந்திருக்கிறது. சிலர் சொல்வது பொன்று வடக்கே உள்ள பெருந்தலைவர்கள் தெற்கே தெரியாமல் இருக்கலாம்; தெற்கே உள்ளவர்கள் வடக்கே தெரியாமல் இருக்கலாம். ஆனால், மாநிலங்களின் பெருமைகளை பறைசாற்றும் வகையிலும், குறிப்பிட்ட மாநிலங்களை சேர்ந்த தியாகம் செய்தவர்களை உலகறியச் செய்வதற்கும்தானே இந்த அணிவகுப்பு. அப்படி இருக்கும் பட்சத்தில் யாரென்று தெரியவில்லை என்று காரணம் கூறுவது திசை திருப்பும் செயல். வீரமங்கை வேலுநாச்சியாரின் பிறந்தநாளில் அவரை பிரதமர் மோடி நினைவு கூர்ந்ததையும் பார்க்க வேண்டும்.” என்றும் அவர்கள் சுட்டிக்காட்டுகின்றனர்.
தொடர்ந்து பேசுகையில், “இந்த விவகாரத்தில் அரசியல் செய்யவில்லை என்றாலும் கூட, பாஜகவுக்கு எதிராக அரசியல் செய்யும், மாநில உரிமைகள் பேசும் மாநிலங்களுக்கு மட்டுமே அனுமதி மறுக்கப்பட்டுள்ளது. கர்நாடகத்தை எடுத்துக்கொண்டால் பாஜக ஆளும் மாநிலம் என்பதாலேயே அம்மாநிலத்துக்கு தொடர்ந்து அனுமதி வழங்கப்பட்டு வருகிறது. கர்நாடகத்தில் ஆட்சியில் இல்லையென்றாலும் எதிர்கால நலன்கருதி மத்தியில் பாஜக ஆட்சியில் இருப்பதால், இவைகள் செய்யப்படுகின்றன.

இது ஒன்று மட்டுமல்ல, கர்நாடகத்தின் குரலை, அம்மாநில மக்களின் உணர்வுகளை மத்திய அரசிடம் எடுத்து சொல்வதற்கு வலுவான பாஜக தலைவர்கள் அங்குள்ளனர். ஆனால், தமிழகத்தை பொறுத்தவரை அப்படி யாரும் இல்லை. டெல்லி சொல்வதை கேட்டு தலையாட்டும் தலைவர்களே இங்குள்ளனர். இது தமிழகத்தில் பாஜகவுக்கு பின்னடைவைத்தான் ஏற்படுத்தும்.” என்கின்றனர்.





No comments:

Post a Comment

Post Top Ad