பள்ளி மாணவர்களுக்கு பொதுத்தேர்வு நடக்குமா? அமைச்சர் அன்பில் கொடுத்த ஹின்ட்! - TAMIL BOOKS FREE PDF

tamil books and story reading portal

Post Top Ad

Monday, January 17, 2022

பள்ளி மாணவர்களுக்கு பொதுத்தேர்வு நடக்குமா? அமைச்சர் அன்பில் கொடுத்த ஹின்ட்!

பள்ளி மாணவர்களுக்கு பொதுத்தேர்வு நடக்குமா? அமைச்சர் அன்பில் கொடுத்த ஹின்ட்!



பள்ளி மாணவர்களுக்கு பொதுத்தேர்வு பற்றி பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி விளக்கம் அளித்துள்ளார்
கொரோனா காரணமாக தமிழகத்தில் மூடப்பட்டிருந்த பள்ளிகள் கடந்த ஆண்டு இறுதியில் மீண்டும் திறக்கப்பட்டன. இதனிடையே, கடந்த சில நாட்களாக மீண்டும் கொரோனா, ஒமைக்ரான் பாதிப்பு தமிழகத்தில் அதிகரிக்கத் தொடங்கியுள்ளது. இதனால் தமிழகத்தில் பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன.

பள்ளிகளை பொறுத்தவரை பொதுத் தேர்வை கருத்தில் கொண்டு, 10 ஆம் வகுப்பு முதல் 12 ஆம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு மட்டும் நேரடி வகுப்புகள் நடத்தப்பட்டு வந்தன. மற்ற வகுப்புகளை சேர்ந்த மாணவர்களுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. இருப்பினும், தொற்று பரவல் அதிகமாக உள்ளதால், மாணவர்களின் நலன் கருதி அனைத்து வகுப்பு மாணவர்களுக்கும் வருகிற 31ஆம் தேதி வரை விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.

முன்னதாக, கடந்த ஆண்டு பள்ளி மாணவர்களுக்கான பொதுத்தேர்வு ரத்து செய்யப்பட்டு அனைவரும் தேர்ச்சி பெற்றதாக அறிவிக்கப்பட்டது. ஆனால், இந்த ஆண்டு கண்டிப்பான பொதுத்தேர்வு நடத்தப்படும் என தமிழக அரசு தெரிவித்துள்ளது. ஆனால், தற்போது கொரோனா, ஒமைக்ரான் பரவல் அதிகரித்து வரும் காரணத்தால் பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளாதால் பொதுத்தேர்வுகள் நடத்தப்படுமா அல்லது கடந்த ஆண்டை போன்றே தேர்ச்சி பெற்றதாக அறிவிக்கப்படுமா என்ற எதிர்பார்ப்பு மாணவர்கள் மத்தியில் எழுந்துள்ளது.

இந்த நிலையில், பள்ளி மாணவர்களுக்கு பொதுத்தேர்வு பற்றி பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி விளக்கம் அளித்துள்ளார். புதுக்கோட்டை மாவட்டம் கீரனூரில் அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளி கூடுதல் வகுப்பறைகள் கட்டிட திறப்பு விழா இன்று நடைபெற்றது. இதில் பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி, சட்டத்துறை அமைச்சர் ரகுபதி, சுற்றுச்சூழல் துறை அமைச்சர் மெய்யநாதன் ஆகியோர் கலந்து கொண்டனர்.

அதன்பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி, “கொரோனா அச்சுறுத்தல் காரணமாக வருகிற 31ஆம் தேதி வரை பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது பொதுத்தேர்வு எழுதும் மாணவர்கள் தயவு செய்து இதை விடுமுறை என்று கருதாமல், கல்வி தொலைக்காட்சி மூலமாகவும், ஆசிரியர்கள் மூலமாக தமிழக அரசு யூடியூபில் 8,000 வீடியோக்களை அப்லோடு செய்து உள்ளது. அதனை பார்த்தும் தொடர்ந்து பாடங்களை படிக்க செய்ய வேண்டும்.” என்றார். அமைச்சரின் இந்த பேட்டி மூலம் பொதுத்தேர்வு கண்டிப்பாக நடைபெறும் என்று தெரிய வருகிறது.
மேலும் பேசிய அவர், “கொரோனா தொற்று அதிகரிக்கும் என்று அரசு தகவல் தெரிவித்ததை தொடர்ந்து, அதனடிப்படையில் தற்போது பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது மாணவர்களுக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டிருந்தாலும் ஆசிரியர்கள் மூலமாக மாணவர்களுக்கு பரவும் அபாயம் உள்ளதால் இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. அரசு என்ன சொல்கிறதோ அதன்படி அடுத்த கட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

கல்வி தொலைக்காட்சி கடந்த ஆட்சிக் காலத்தில் தொடங்கப்பட்டது என்றாலும், இந்த அரசு கல்வி தொலைக்காட்சியை எவ்வாறு மேம்படுத்துவது என்பது குறித்து தகவல் தொழில் நுட்பத்துறையுடன் ஆலோசனை செய்து வருகிறது. வரும் காலங்களில் கல்வி தொலைக்காட்சி மேம்படுத்தப்படும்.
நீட் தேர்வு வேண்டாம் என்பதுதான் தமிழக முதல்வர் மற்றும் தமிழக அரசின் நிலைப்பாடு. இதற்காக விலக்கு வேண்டும் என்று சட்டப் போராட்டம் ஒரு பக்கம் நடந்து கொண்டிருந்தாலும், மாணவர்களை தயார்படுத்துவதற்காக தமிழக அரசின் ஹைடெக் ஆய்வகம் மூலமாக பல பகுதிகளில் பயிற்சிகள் அளிக்கப்பட்டு வருகிறது. அதை விரிவுபடுத்துவதற்கு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.” இவ்வாறு அவர் பேசினார்.



No comments:

Post a Comment

Post Top Ad