193 பணியிடங்களுக்கு டிஎன்பிஎஸ்சி தேர்வு… இளைஞர்கள் குஷி!
தமிழகம் முழுவதும் புள்ளியியல் சார்நிலை பணிகளுக்கான தேர்வு இன்று நடைபெற்று வருகிறது.
தமிழ்நாட்டில் பொது சுகாதாரம் மற்றும் தடுப்பு மருத்துவத் துறையில் கணினி -தடுப்பூசி ஸ்டோர் கீப்பர், குடும்ப நலத்துறையில் பிளாக் ஹெல்த் புள்ளியியலாளர், உணவுப் பாதுகாப்பு மற்றும் மருந்து நிர்வாகத் துறையில் புள்ளியியல் உதவியாளர் ஆகிய பதவிகளுக்கு ஆட்சேர்ப்பு செய்வதற்கு டிஎன்பிஎஸ்சி 20 அக்டோபர் 2021 அன்று அறிவிப்பு வெளியிட்டது.
193 காலி பணியிடங்களுக்கு (TNPSC Combined Statistical Subordinate Service Exam 2021) ஒருங்கிணைந்த புள்ளியியல் துணை சேவைகள் ஆட்சேர்ப்புக்கு தேவையான தகுதி வரம்பு உள்ளவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் பெறப்பட்ட நிலையில் கடந்த 9-ம் தேதி எழுத்துத்தேர்வு நடைபெறும் என அறிவிக்கப்பட்டிருந்தது.
இதற்காக தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் (TNPSC) மூலம் ஒருங்கிணைந்த புள்ளியியல் துணை சேவை துறைக்கான தேர்வு நுழைவுச்சீட்டு வெளியிடப்பட்டது. ஆனால், கொரோனா பரவல் காரணமாக கடந்த ஞாயிற்றுக்கிழமை முழு ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டதால், புள்ளியியல் சார்நிலை பணிகளுக்கான தேர்வு ஒத்திவைக்கப்படுவதாக டி.என்.பி.எஸ்.சி அறிவித்தது.
இந்நிலையில், ஞாயிறு அன்று நடைபெறுவதாக இருந்த புள்ளியியல் சார்நிலைப் பணிகளுக்கான தேர்வு, வரும் 11-ம் தேதிக்கு ஒத்திவைக்கப் படுவதாகவும், தேர்வர்கள் ஏற்கனவே வெளியிட்ட ஹால் டிக்கெட்டுகளை பயன்படுத்தி தேர்வை எழுதலாம் என தேர்வு கட்டுப்பாட்டு அதிகாரி கிரண் குராலா அறிவித்திருந்தார்.
அதன்படி சென்னை, மதுரை, திருச்சி உள்ளிட்ட 9 முக்கிய நகரங்களில் உள்ள 73 மையங்களில் சுமார் ஒன்றரை லட்சம் தேர்வர்கள் தேர்வு எழுதி வருகின்றனர். காலை 10 மணி முதல் 1 மணி வரை ஒரு தேர்வும், பிற்பகல் 3 மணி முதல் 5 மணிவரை ஒரு தேர்வு என இரண்டு தேர்வுகள் நடைபெறவுள்ளது.
No comments:
Post a Comment