2 முதல்வர்கள்... 3 துணை முதல்வர்கள்... ஓவைசி அதிரடி அறிவிப்பு!
உத்தரப் பிரதேசத்தில் ஏஐஎம்ஐஎம் கட்சி ஆட்சி அமைத்தால் இரண்டு முதல்வர்கள், மூன்று துணை முதல்வர்கள் நியமிக்கப்படுவார்கள் என்று அக்கட்சியின் தலைவர் அசாதுதீன் ஓவைசி அதிரடியாக தெரிவித்துள்ளார்.
உத்தரப்பிரதேச மாநில சட்டப்பேரவைக்கு வரும் பிப்ரவரி 10 ஆம் தேதி முதல் மார்ச் 7 ஆம் தேதி வரை ஏழு கட்டங்களாக தேர்தல் நடைபெற உள்ளது. தேர்தல் முடிவுகள் மார்ச் 10 ஆம் தேதி அறிவிக்கப்படும் என்று தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.
மாநிலத்தை ஆளும் பாஜக, காங்கிரஸ், பகுஜன் சமாஜ், சமாஜ்வாதி, அனைத்திந்திய மஜ்லீஸ் (ஏஐஎம்ஐஎம்) ஆகிய கட்சிகள் களத்தில் உள்ளதால் அங்கு பலமுனைப் போட்டி நிலவுகிறது. உ.பி.யில் ஆளும் பாஜகவே மீண்டும் ஆட்சியை பிடிக்கும் என்று தேர்தலுக்கு முந்தைய கருத்துக் கணிப்புகள் தெரிவித்துள்ள நிலையில், அங்கு தேர்தல் பிரசாரம் சூடு பிடித்துள்ளது.
முதல்வர் யோகி ஆதித்யநாத், பிரியங்கா காந்தி. மாயாவதி, அகிலேஷ் யாதவ், அசாதுதீன் ஓவைதி என பல்வேறு கட்சிகளை சேர்ந்த தலைவர்கள் சூறாவளி சுற்றுப்பயணம் மேற்கொண்டு தேர்தல் பிரசாரம் செய்து வருகின்றனர்.
தேர்தல் பிரசாரத்துக்காக தலைநதர் லக்னௌ வந்த அசாதுதீன் ஓவைசி செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறும்போது, "உத்தர பிரதேசத்தில் எங்கள் கட்சி பாபு சிங் குஷ்வாஹா, பாரத் முக்தி மோர்ச்சா ஆகிய கட்சிகளுடன் கூட்டணி அமைத்துள்ளது.
ஏஐஎம்ஐஎம் தலைமையிலான கூட்டணி ஆட்சி அமைத்தால் ஓபிசி சமூகத்தில் இருந்து ஒருவரும், தலித் சமூகத்தில் இருந்து மற்றொருவரும் என 2 முதலமைச்சர்கள் நியமிக்கப்படுவார்கள். இதேபோன்று முஸ்லிம் சமூகத்தினர் உள்பட மூன்று துணை முதல்வர்களும் பொறுப்பேற்பார்கள்" என்று ஓவைசி தெரிவித்தார்.
No comments:
Post a Comment