சி.வி.சண்முகம் புதிய வியூகம்; அதிமுகவில் திடீர் உற்சாகம்!
முன்னாள் அமைச்சர் சி.வி.சண்முகம் கையில் எடுக்கும் புதிய வியூகம் அதிமுகவில் திடீர் உற்சாகத்தை ஏற்படுத்தி உள்ளது. இதனை தொண்டர்கள் பெரிதும் மகிழ்ந்து வரவேற்றுள்ளனர்.
தமிழகத்தில் நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளில் 21 மாநகராட்சிகள், 138 நகராட்சிகள், 490 பேரூராட்சிகள் உள்ளன. இந்த நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளுக்கான தேர்தல் நடத்த மாநில தேர்தல் ஆணையம் ஏற்பாடுகள் செய்து வருகிறது. உச்சநீதிமன்றம் உத்தரவுப்படி வருகிற 27ம் தேதிக்குள் தேர்தல் தொடர்பான அறிவிப்புகள் வெளியிட ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
இதற்கிடையே அரசியல் கட்சி பிரதிநிதிகளுடனும் ஆலோசனை நடத்த மாநில தேர்தல் ஆணையம் முடிவு செய்தது. அதன்பேரில் சென்னை கோயம்பேட்டில் உள்ள மாநில தேர்தல் ஆணையர் அலுவலகத்தில், மாநில தேர்தல் ஆணையர் பழனிகுமார் தலைமையில், அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகளுடனான ஆலோசனைக் கூட்டம் கடந்த 19ம் தேதி நடைபெற்றது.
இந்த ஆலோசனை கூட்டத்தில் அரசியல் கட்சி பிரதிநிதிகளின் கருத்துக்களை கேட்டதன் அடிப்படையில் கையேடுகள் தயாரிக்கப்பட்டுள்ளன. இந்த வேட்பாளர் கையேட்டை மாநில தேர்தல் ஆணையம் அனைத்து மாவட்டங்களுக்கும் அனுப்பி உள்ளது.
இதனை தொடர்ந்து தமிழகத்தில் உள்ள அனைத்து கட்சிகளும் தங்கள் வேட்பாளர்களை தேர்வு செய்யும் வகையில் விருப்ப மனுக்கள் பெறும் பணியில் மும்முரமாக ஈடுபட்டு வருகின்றன.
அந்தவகையில் விழுப்புரம் மாவட்டம் செஞ்சியில் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் செஞ்சி மற்றும் அனந்தபுரம் பேரூராட்சியில் அதிமுக சார்பில் போட்டியிட விருப்ப மனு அளித்தவர்களிடம் விழுப்புரம் மாவட்ட கழக செயலாளரும், முன்னாள் சட்டத்துறை அமைச்சருமான சி.வி.சண்முகம் நேர்காணல் நடத்தினார்.
இந்த நேர்காணலில் செஞ்சி பேரூராட்சிக்கு உட்பட்ட 18 வார்டுகளுக்கும், அனந்தபுரம் பேரூராட்சிக்குட்பட்ட 15 வார்டுகளுக்கும் அதிமுக சார்பில் போட்டியிட விருப்ப மனு அளித்தவர்களிடம் நேர்காணல் நடைபெற்றது.
அப்போது, பேசிய முன்னாள் அமைச்சர் சி.வி.சண்முகம், ‘அதிமுக ஆட்சியில் செயல்படுத்தப்பட்ட மக்கள் நலத்திட்டங்களை பொதுமக்களிடம் எடுத்து கூறி வாக்கு சேகரிக்க வேண்டும். பொங்கல் பரிசு வழங்குவதில் திமுக அரசு மக்களை ஏமாற்றிவிட்டது என்பதை எடுத்து கூறி வாக்கு சேகரிக்க வேண்டும்’ என ஆலோசனை வழங்கினார். இது, அதிமுகவினருக்கு புதிய உற்சாகத்தை கொடுத்து உள்ளது.
No comments:
Post a Comment