மத்திய பட்ஜெட் 2022: வருமான வரி உச்ச வரம்பு ரூ.5 லட்சம் - ராமதாஸ் கோரிக்கை!
விரைவில் தாக்கல் செய்யப்படவுள்ள மத்திய பட்ஜெட்டில் பொதுமக்களுக்கு பயன்தரும் பல்வேறு அறிவிப்புகளை ராமதாஸ் முன்வைத்துள்ளார்.
2022-23ஆம் நிதியாண்டிற்கான பட்ஜெட் கூட்டத்தொடர் வரும் ஜனவரி 31ஆம் தேதி தொடங்கவுள்ளதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது. இதையடுத்து பிப்ரவரி 1 அன்று மத்திய பட்ஜெட் தாக்கல் செய்யப்படுகிறது. முதல்கட்டமாக பிப்ரவரி 11 வரையிலும், இரண்டாம் கட்டமாக மார்ச் 14 முதல் ஏப்ரல் 8 வரையிலும் கூட்டத்தொடர் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. கொரோனா நெருக்கடிக்கு மத்தியில் மத்திய பட்ஜெட் மீது பெரிய அளவில் எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது.
இந்நிலையில் பாமக நிறுவனர் ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில், தனிநபர் வருமான வரி விலக்கிற்கான வருவாய் வரம்பு உயர்த்தப்பட வேண்டும் என்ற நீண்ட நாள் கோரிக்கை நடப்பாண்டிலாவது நிறைவேற்றப்பட வேண்டும். அதேபோல், 2017-ஆம் ஆண்டு முதல் மீண்டும் அறிமுகம் செய்யப்பட்ட மருத்துவம் - போக்குவரத்துச் செலவுகளுக்கான நிரந்தரக் கழிவு இப்போது ரூ.50 ஆயிரமாக உள்ளது.
இன்றைய சூழலுக்கு இது போதுமானதல்ல. கொரோனா வைரஸ் பரவல் காரணமாகவும், அதற்காக மேற்கொள்ளப்பட வேண்டிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் காரணமாகவும் மருத்துவம் மற்றும் போக்குவரத்து செலவுகள் அதிகரித்து விட்டன. அதனால், வருமானவரி செலுத்தும் தனிநபர்களுக்கான நிரந்தரக் கழிவை ரூ.1 லட்சமாக அதிகரிக்க மத்திய அரசு முன்வர வேண்டும்.
கொரோனா வைரஸ் பரவல் மற்றும் அதன் தாக்கங்களால் கிராமப்புற பொருளாதாரம் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. ஊரக மக்களுக்கு வேலைவாய்ப்பு கிடைக்காத நிலையில், மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்புத் திட்டம் தான் அவர்களுக்கு கை கொடுத்தது. அத்திட்டத்திற்காக 2020-21 ஆண்டில் ரூ.1.11 லட்சம் கோடி ஒதுக்கப்பட்டது; நடப்பாண்டிலும் இதுவரை 1.08 லட்சம் கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
ஆனாலும் கூட ஒவ்வொரு குடும்பத்திற்கும் சராசரியாக கடந்த ஆண்டில் 51.52 நாட்களும், நடப்பாண்டில் இதுவரை 43.20 நாட்களும் மட்டுமே வேலை வழங்க முடிந்திருக்கிறது. ஊரக மக்களின் வாழ்வாதாரத் தேவைகளை நிறைவேற்றுவதற்கு இது போதுமானதல்ல. மக்களுக்கு போதிய அளவில் வேலைவாய்ப்பு கிடைப்பதை உறுதி செய்வதற்காக இத்திட்டத்தின்படி ஒவ்வொரு குடும்பத்திற்கும்
அதிகபட்சமாக வேலை வழங்கப்படும் நாட்களின் எண்ணிக்கையை 150 ஆக உயர்த்துவதுடன், அதற்கு ஏற்ற வகையில் அத்திட்டத்திற்கான நிதி ஒதுக்கீட்டையும் அதிகரிக்க வேண்டும். இவை அனைத்திற்கும் மேலாக இத்திட்டத்தை வேளாண்மை பணிகளுக்கும் நீட்டித்து மத்திய அரசு ஆணையிட வேண்டும். வருமானவரி விலக்கிற்கான உச்சவரம்பை ரூ. 5 லட்சமாகவும்,
நிரந்தரக் கழிவை ரூ.1 லட்சமாகவும் உயர்த்த வேண்டும், ஊரக வேலைவாய்ப்பு உறுதித் திட்ட வேலை நாட்களை 150 ஆக உயர்த்துதல் ஆகியவற்றுடன் பெட்ரோல், டீசல் மீதான வரிகளைக் குறைத்தல், தேசிய நெடுஞ்சாலைகளின் சுங்கக் கட்டணத்தைக் குறைத்தல் ஆகியவை குறித்த அறிவிப்புகளையும் வெளியிட வலியுறுத்தியுள்ளார்.
No comments:
Post a Comment