திருப்பதியில் பெரிய ஷாக்; திடீரென நின்ற பக்தர்களின் நீண்ட வரிசை!
விஐபி தரிசனம் தொடர்பாக ஏழுமலையான் பக்தர்கள் குற்றம்சாட்டி எடுத்த நடவடிக்கையால் திருப்பதி கோயிலில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
ஆந்திர மாநிலம் திருப்பதி திருமலையில் விஐபி தரிசனம், 300 ரூபாய் நுழைவு தரிசனம், இலவச தரிசனம் ஆகியவற்றின் மூலம் ஏழுமலையான் பக்தர்கள் சாமி தரிசனம் செய்து வருகின்றனர். தற்போது வைகுண்ட ஏகாதசி நிகழ்வை ஒட்டி சொர்க்க வாசல் திறக்கப்பட்டுள்ளது. இதற்காக 10 நாட்கள் சிறப்பு தரிசனத்திற்கு பக்தர்களுக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. கொரோனா மற்றும் ஒமைக்ரான் பரவல் காரணமாக உரிய தடுப்பு வழிகாட்டு நெறிமுறைகளை பின்பற்றி தரிசனம் செய்ய அனுமதிக்கப்பட்டு வருகின்றனர்.
இந்நிலையில் கடந்த 13ஆம் தேதி திருமலையில் நடந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அன்றைய தினம் உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி என்.வி.ரமணா, ஆந்திரப் பிரதேச உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி பிரசாந்த் குமார் மிஷ்ரா, தெலங்கானா அமைச்சர்கள் டி.ஹரிஷ் ராவ், கங்குலா கமலாகர், தலசானி ஸ்ரீனிவாஸ் யாதவ், ஆந்திர மாநில அமைச்சர் ஆடிமுலப்பு சுரேஷ் உள்ளிட்டோர் விஐபி தரிசனம் மூலம் சாமி தரிசனம் செய்துள்ளனர்.
இவர்கள் வருகையை ஒட்டி பக்தர்கள் மிகுந்த அவதிக்கு ஆளாகினர். வரிசையில் வரும் போது குடோன்களில் பல மணி நேரம் அடைத்து வைக்கப்பட்டனர். அப்போது உணவு, தண்ணீரின்றி தவித்ததாக பக்தர்கள் அதிர்ச்சியூட்டும் குற்றச்சாட்டை முன்வைத்தனர். குழந்தைகளுடன் வருகை புரிந்தோர் பால் கிடைக்காததால் மிகுந்த அவதிப்பட்டதாக கூறப்படுகிறது. இந்த பக்தர்களுக்கு காலையில் தரிசனம் செய்ய நேரம் ஒதுக்கப்பட்டிருந்தது.
ஆனால் இரவு 8.30 மணி வரை காக்க வைக்கப்பட்டதாக கூறப்படுகிறது. இதுபற்றி கேள்வி கேட்டால் போலீசாரை கொண்டு இழுத்து வெளியே தள்ளப்பட்டதாக பக்தர்கள் புகார் தெரிவித்துள்ளனர். அன்று இரவு பக்தர்கள் வரிசை நகரத் தொடங்கிய சூழலில், கோயில் நுழைவு வாயில் வந்தவுடன் பக்தர்கள் பலரும் அப்படியே உட்கார்ந்து கொண்டனர்.
அப்போது, எங்களை ஏன் இவ்வளவு நேரம் காக்க வைத்தீர்கள் என்று கேட்டு தேவஸ்தான ஊழியர்களுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். விஐபிக்கள் தங்களிடம் பணம் இருக்கிறது என்பதற்காக ஒரு பெரிய கூட்டத்துடன் தரிசிக்க வருகின்றனர். எங்கள் கண் முன்னாலேயே பலரும் சென்றதை பார்த்தோம். அதற்காக எங்களை பல மணி நேரம் காக்க வைப்பது சரியா?
இந்த விஷயத்தில் தேவஸ்தான செயல் அதிகாரி முறையான ஏற்பாடுகளை செய்யவில்லை என்று குறிப்பிட்டனர். மேலும் ’செயல் அதிகாரி டவுன், டவுன்’ என்று கோஷங்கள் எழுப்பினர். அவர்களை சமாதானப்படுத்த ஊழியர்கள் முயற்சித்தும் பலனளிக்கவில்லை. உடனே போலீசாருக்கு தகவல் தெரிவித்து, ஆர்ப்பாட்டம் செய்த பக்தர்கள் அங்கிருந்து அகற்றப்பட்டனர். இதனால் திருமலையில் பெரும் பரபரப்பான சூழல் காணப்பட்டது.
No comments:
Post a Comment