3 தேர்தல்கள், 10 முதல்வர்கள்; உத்தரகாண்ட் விதி மாற்றி எழுதப்படுமா? - TAMIL BOOKS FREE PDF

tamil books and story reading portal

Post Top Ad

Saturday, January 8, 2022

3 தேர்தல்கள், 10 முதல்வர்கள்; உத்தரகாண்ட் விதி மாற்றி எழுதப்படுமா?

3 தேர்தல்கள், 10 முதல்வர்கள்; உத்தரகாண்ட் விதி மாற்றி எழுதப்படுமா?


சட்டமன்ற தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், 5 ஆண்டுகளை முழுமையாக ஆளப் போகும் அடுத்த என்.டி.திவாரி யார் என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.
2022ஆம் ஆண்டு பிறந்ததில் இருந்தே ஐந்து மாநில சட்டமன்ற தேர்தல் தேதி எப்போது அறிவிக்கப்படும் என்ற எதிர்பார்ப்பு அதிகரிக்கத் தொடங்கியது. அதற்கான பதில் இன்று கிடைத்துவிட்டது. பிப்ரவரி 10ஆம் தேதி தொடங்கி மார்ச் 7ஆம் தேதி வரை 7 கட்டங்களாக ஐந்து மாநில சட்டமன்ற தேர்தல் நடைபெறவுள்ளது. அதில் உத்தரகாண்ட் மாநிலத்திற்கு ஒரே கட்டமாக பிப்ரவரி 14ஆம் தேதி தேர்தல் நடக்கிறது. தற்போது முதல்வர் புஷ்கர் சிங் தாமி தலைமையிலான பாஜக ஆட்சி நடைபெற்று வருகிறது. இவர் கடந்த ஆண்டு ஜூலை 4ஆம் தேதி முதல்வராக பொறுப்பேற்றுக் கொண்டார்.

ஆறு மாதங்களே ஆன நிலையில் சட்டமன்ற தேர்தல் அறிவிப்பு வெளியாகியுள்ளது. முன்னதாக திராத் சிங் ராவத் முதல்வராக பதவியேற்று 116 நாட்கள் முதல்வராக பதவி வகித்தார். இடைத்தேர்தல் நடத்துவதற்கான சூழல் இல்லை என்று தேர்தல் ஆணையம் கைவிரித்துவிட்டதால், அவர் பதவி விலக வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது. இப்படி முழு பதவிக் காலத்தையும் நிறைவு செய்யாத சூழல், சுமார் 15 ஆண்டுகளாகவே தொடர்கிறது

கடந்த 2007ஆம் ஆண்டு நடந்த சட்டமன்ற தேர்தலில் பாஜகவின் பி.சி.கந்துரி முதல்வராக பதவியேற்று 2 ஆண்டுகள் 111 நாட்கள் நீடித்தார். இதையடுத்து ரமேஷ் பொக்ரியால் 2 ஆண்டுகள் 75 நாட்களும், மீண்டும் பி.சி.கந்துரி 184 நாட்களும் முதல்வராக பதவி வகித்தனர். 2012 சட்டமன்ற தேர்தலில் ஆட்சி மாறியது. காங்கிரஸ் அரியணையில் அமர்ந்தாலும் காட்சிகள் மாறவில்லை. விஜய் பகுகுனா ஓராண்டு 324 நாட்கள் மட்டுமே முதல்வராக பதவி வகித்தார். இதையடுத்து ஹரிஷ் ராவத் 2 ஆண்டுகள் 55 நாட்கள் பதவியில் நீடித்தார்.

பின்னர் இரண்டு முறை குடியரசுத் தலைவர் ஆட்சி நடந்தது. இதற்கிடையில் ஒருநாளும், ஆட்சியின் இறுதியில் 311 நாட்களும் ஹரிஷ் ராவத் முதல்வராக பதவியில் இருந்தார். 2017ல் ஆட்சி மாறி பாஜக வசம் வந்தது. திரிவேந்தர சிங் ராவத் முதல்வராக பதவியேற்றார். ஆனால் உட்கட்சி பூசல் காரணமாக 3 ஆண்டுகள் 357 நாட்களில் ராஜினாமா செய்தார். அதன்பிறகு திராத் சிங் ராவத் பதவிக்கு வந்தது குறிப்பிடத்தக்கது.

கடைசியாக 2002 -2007 காலகட்டத்தில் 5 ஆண்டுகள் முழுமையாக ஆட்சியை நிறைவு செய்தவர் காங்கிரஸ் கட்சியை சேர்ந்த என்.டி.திவாரி. அதன்பிறகு ஒருவர் கூட முழுமையாக ஆட்சியை நிறைவு செய்யவில்லை. அந்த வகையில் அடுத்த என்.டி.திவாரி யார் என்ற கேள்வி எழுந்துள்ளது. அதுமட்டுமின்றி உத்தரகாண்ட் மாநிலத்தில் 2002ல் முதல் சட்டமன்ற தேர்தல் நடைபெற்றதில் இருந்து தற்போது வரை பாஜக, காங்கிரஸ் ஆகிய கட்சிகள் மாறி, மாறி ஆட்சி அமைத்துள்ளன.

அப்படி பார்த்தால் 2022 சட்டமன்ற தேர்தலில் காங்கிரஸ் கட்சி ஆட்சியை பிடிக்க வேண்டும். ஆனால் கள நிலவரம் அவ்வாறு இல்லை என்று சொல்லப்படுகிறது. தேர்தலுக்கு முந்தைய கருத்துக்கணிப்பில் கூட பாஜகவிற்கே வெற்றி வாய்ப்பு அதிகமிருப்பதாக கூறப்பட்டுள்ளது. எனவே வரலாறு திருத்தி எழுதப்படுமா? மக்கள் என்ன முடிவு எடுக்கப் போகிறார்கள்? என்பது மார்ச் 10ஆம் தேதி நடக்கும் வாக்கு எண்ணிக்கையில் தெரிந்துவிடும்.

No comments:

Post a Comment

Post Top Ad