பொய் வழக்கு போட்ட காவல் துறை - இழப்பீடு வழங்க தமிழக அரசுக்கு உத்தரவு! - TAMIL BOOKS FREE PDF

tamil books and story reading portal

Post Top Ad

Saturday, January 8, 2022

பொய் வழக்கு போட்ட காவல் துறை - இழப்பீடு வழங்க தமிழக அரசுக்கு உத்தரவு!

பொய் வழக்கு போட்ட காவல் துறை - இழப்பீடு வழங்க தமிழக அரசுக்கு உத்தரவு!


தமிழக அரசுக்கு மாநில மனித உரிமைகள் ஆணையம் உத்தரவிட்டு உள்ளது.
பழிவாங்கும் நோக்கில் சென்னை கொடுங்கையூர் காவல் துறை பொய் வழக்கு பதிவு செய்த விவகாரத்தில் புகார்தாரருக்கு 3 லட்சம் ரூபாய் இழப்பீடு வழங்க தமிழக அரசுக்கு மாநில மனித உரிமைகள் ஆணையம் உத்தரவிட்டு உள்ளது.

சென்னை எருக்கஞ்சேரியைச் சேர்ந்த வழக்கறிஞர் பார்த்தசாரதி என்பவரின் மனைவி மகேஸ்வரி, தாங்கள் வசிக்கும் அடுக்குமாடி குடியிருப்பில் வாடகைக்கு இருக்கும் ஆட்டோ டிரைவர், தன்னிடம் தவறாக நடக்க முயன்றதாக கொடுங்கையூர் போலீசில் 2017 ஆம் ஆண்டு டிசம்பர் மாதத்தில் புகார் அளித்துள்ளார். இந்த புகார் மீது வழக்குப் பதிவு செய்யாததால், கூடுதல் மகளிர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார். பின்னர் மகேஸ்வரியின் புகார் மீது வழக்கு பதிய கொடுங்கையூர் காவல் துறைக்கு உத்தரவிட்டது.

அதன் பின்னரும் வழக்கு பதியவில்லை என்பதால் எழும்பூர் பெருநகர குற்றவியல் நடுவர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். வழக்கை விசாரித்த எழும்பூர் நீதிமன்றம், கொடுங்கையூர் காவல் ஆய்வாளருக்கு கண்டனம் தெரிவித்ததை அடுத்து, மகேஸ்வரியின் புகார் மீது போலீசார் வழக்குப் பதிவு செய்தனர்.

இதற்கு பழிவாங்கும் வகையில், தனக்கு எதிராக அதே பகுதியில் வசிக்கும் சித்ரா என்பவரிடம் புகார் பெற்றும் பொய் வழக்கு பதிவு செய்ததாகக் கூறி, கொடுங்கையூர் ஆய்வாளர் புகழேந்தி, உதவி ஆய்வாளர்கள் வர்கீஸ் இக்னேஷ்யஸ் ராஜா மற்றும் ரவீந்திரன் ஆகியோருக்கு எதிராக வழக்கறிஞர் பார்த்தசாரதி, மாநில மனித உரிமை ஆணையத்தில் புகார் மனு தாக்கல் செய்தார்.

இந்த மனுவை விசாரித்த மனித உரிமை ஆணைய உறுப்பினர் துரை.ஜெயச்சந்திரன், மூன்று காவல் துறை அதிகாரிகளும் உள்நோக்கத்துடன் பொய் வழக்கு பதிவு செய்து மனித உரிமை மீறப்பட்டுள்ளது நிரூபணமாகி உள்ளதாகவும், குற்ற வழக்கில் தொடர்பு உடையவர்களை கைது செய்யும் முன்னர் உச்ச நீதிமன்றம் விதித்த உத்தரவுகளையும், மனித உரிமை ஆணையத்தின் வழிமுறைகளை இந்த வழக்கில் காவல் துறையினர் மீறியுள்ளது நிரூபணமாகி உள்ளது. எனவே, பாதிக்கப்பட்ட பார்த்தசாரதிக்கு 3 லட்சம் ரூபாயை இழப்பீடாக நான்கு வாரத்தில் வழங்க தமிழக அரசுக்கு உத்தரவிட்டார்.

இந்த இழப்பீட்டு தொகையை மூன்று காவல் துறை அதிகாரிகளிடம் இருந்தும் தலா ஒரு லட்சம் ரூபாய் வீதம் தமிழக அரசு வசூலிக்க வேண்டும் என உத்தரவிட்ட ஆணையம், மூவர் மீதும் ஒழுங்கு நடவடிக்கை எடுக்கவும் அரசுக்கு உத்தரவிட்டு உள்ளது.

No comments:

Post a Comment

Post Top Ad