வரும் 31ஆம் தேதி கடைசி; தமிழக பள்ளிகளுக்கு முக்கிய உத்தரவு!
பொதுத்தேர்வு எழுதும் மாணவர்கள் தொடர்பாக தேர்வுத்துறை முக்கிய அறிவுறுத்தலை வெளியிட்டுள்ளது.
தமிழகத்தில் கொரோனா மற்றும் ஒமைக்ரான் வைரஸ் பரவல் காரணமாக வரும் 31ஆம் தேதி வரை அனைத்து பள்ளிகளுக்கும் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. இதனால் 12ஆம் வகுப்பு திருப்புதல் தேர்வு ஒத்திவைக்கப்பட்டுள்ளது. அதேசமயம் ஆசிரியர்கள் அனைவரும் கட்டாயம் பள்ளிக்கு வர அறிவுறுத்தப்பட்டுள்ளது. இந்த சூழலில் 10, 11, 12 ஆகிய வகுப்பு மாணவர்களுக்கு பொதுத்தேர்வு நடத்துவது பற்றி பள்ளிக் கல்வித்துறை ஆலோசனை செய்து வருகிறது.
இதற்கிடையில் பொதுத்தேர்வு எழுதும் மாணவர்களின் விவரங்களை சேகரிக்க வேண்டிய பொறுப்பு பள்ளிகளிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது. அதன்படி, மாணவ, மாணவிகளின் பெயர்கள், பிறந்த தேதி, தந்தை பெயர் உள்ளிட்ட முழுமையான விவரங்கள் திரட்டப்பட வேண்டும். இவற்றை அரசுத் தேர்வுத்துறைக்கு அனுப்பி வைக்க வேண்டும் என்று ஏற்கனவே உத்தரவிடப்பட்டுள்ளது.
அதற்கான வேலைகளில் அனைத்து பள்ளி தலைமை ஆசிரியர்களும் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர். நாமினல் ரோல்களுக்கு இறுதி வடிவம் கொடுக்கும் வகையில் இம்மாத இறுதிக்குள் அனைத்து விவரங்களையும் அரசு தேர்வுத்துறை அனுப்பி வைக்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது. இதுதொடர்பாக அனைத்து மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்களுக்கும் தேர்வுத்துறை கடிதம் ஒன்று அனுப்பியுள்ளது.
அதில், நடப்பு 2021-22 கல்வி ஆண்டிற்கான பொதுத்தேர்வு எழுதவுள்ள பள்ளி மாணவர்களின் பெயர்ப் பட்டியல்களை தயாரித்து ஜனவரி 4 முதல் 19ஆம் தேதி வரை இணையதளம் மூலம் பதிவேற்றம் செய்ய உயர்நிலை, மேல்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியர்களுக்கு அறிவுறுத்தப்பட்டது. மேலும் தேர்வுக் கட்டணம் மற்றும் மதிப்பெண் பதிவேற்றுக் கட்டணத்தையும் இணையதளம் வாயிலாக செலுத்த உத்தரவிடப்பட்டது.ஆனால் சில பள்ளிகளில் மாணவர்களின் விவரங்களை பதிவேற்றம் செய்வதில் பல்வேறு சிரமங்கள் ஏற்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது. இதன் காரணமாக மாணவர்கள் விவரங்களை பதிவேற்றவும், கட்டணம் செலுத்தவும் ஜனவரி 20 முதல் 31ஆம் தேதி வரை கால அவகாசம் நீட்டிக்கப்படுகிறது. இதுவே இறுதி வாய்ப்பு. எந்தக் காரணம் கொண்டும் கூடுதல் கால அவகாசம் வழங்கப்படாது.
எனவே தங்கள் கட்டுப்பாட்டின் கீழ் உள்ள உயர்நிலை, மேல்நிலைப் பள்ளிகளின் தலைமை ஆசிரியர்களை கொண்டு விரைவாக பணிகளை முடிக்க முதன்மை கல்வி அலுவலர்கள் ஏற்பாடு செய்ய வேண்டும் என்று கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது.
No comments:
Post a Comment