ஜெயலலிதா பாணியில் ஓபிஎஸ்..! பாஜகவுக்கு இவ்வளவுதான் மரியாதையா?
நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல் இட பங்கீடு பேச்சுவார்த்தை நடைபெற்று கொண்டிருக்கும்போதே அதிமுக வேட்பாளரை பட்டியலை வெளியிட்டிருப்பது கூட்டணியில் பாஜகவுக்கு இவ்வளவுதான் மரியாதையா என்ற கேள்வியை எழுப்பியுள்ளது.
2011 சட்டமன்ற தேர்தல்.. அதிமுக தலைமையிலான கூட்டணியில் கம்யூனிஸ்ட் கட்சிகள் போட்டியிடுவதாக இருந்தது. கூட்டணியில் இடதுசாரிகளுக்கு எவ்வளவு இடங்கள் என்பதுகூட முடிவு செய்யப்பட்டுவிட்டது. ஆனால் அதன் பிறகு போயஸ் கார்டன் கொடுத்த அதிர்ச்சியில் கூட்டணி காட்சிகள் ஒரே நாளில் மொத்தமாக மாறின.
கம்யூனிஸ்ட்டுகள் போட்டியிட விருப்பம் தெரிவித்த இடங்களில், அதிமுக வேட்பாளர்கள் போட்டியிட உள்ளதாக வெளியான அதிரடி அறிவிப்புதான் கூட்டணி காட்சிகள் மாறியதற்கு காரணம். அதிமுக செய்த அவமரியாதையால் அதிர்ந்துபோன கம்யூனிஸ்ட்கள் தேமுதிக தலைமையில் மூன்றாம் அணி அமைக்க முயற்சித்ததும், அப்போது விஜயகாந்த் கம்யூனிஸ்ட் தலைவர்களை கையெடுத்து கும்பிட்டு வழியனுப்பி வைத்துவிட்டு, அதிமுகவுடன் கூட்டணி அமைத்து எதிர்க்கட்சியாக ஆனதெல்லாம் வேறு கதை.
அந்த தேர்தலில் கம்யூனிஸ்ட்களுக்கு அதிமுகவால் நேர்ந்த அவமானத்தை போலவே, தற்போது பாஜகவுக்கு நேர்ந்துள்ளது என எண்ணும்படி உள்ளது இவ்விரு கட்சிகளுக்கு இடையே உள்ளாட்சித் தேர்தலையொட்டி நடைபெற்றுவரும் பேச்சுவார்த்தைகள்.
பாஜக சற்று வலிமையாக உள்ள கொங்கு மண்டலம் உள்ளிட்ட இடங்களில் இரண்டு மேயர் சீட்டுகள், பேரூராட்சி, நகராட்சி பதவிகளில் குறைந்தபட்சம் 20 சதவீதம் இடங்கள் தங்களுக்கு ஒதுக்க வேண்டும் என்பதே பாஜகவின் விருப்பமாக உள்ளது.கூட்டணியில் இருந்த பாமக உள்ளாட்சித் தேர்தலில் தனித்துப் போட்டியிட உள்ள நிலையில், தங்களுக்கு முடிந்தவரை அதிக இடங்களை கேட்டு பெற பாஜக முயற்சிப்பதில் அரசியல் ரீதியாக எந்த தவறும் கிடையாதுதான்.
ஆனால், பாஜக கேட்கும் இடங்களை அப்படியே கண்ணை மூடிக்கொண்டு தருவதற்கு அதிமுக கொஞ்சமும் தயாராக இல்லை. என்னதான் பாஜக மத்தியிலும், பல மாநிலங்களிலும் ஆட்சி செய்யும் பெரிய கட்சியாக இருந்தாலும் தமிழ்நாட்டை பொறுத்தவரை நாங்கதான் லோக்கல் வெயிட் எனும் சொல்லும்படி கூட்டணி பேச்சுவார்த்தையில் பாஜகவிடம் அதிமுக கெத்து காட்டி வருகிறது.
இடபங்கீடு குறித்த பேச்சுவார்த்தையில் கறாராக இருப்பதை தாண்டி, கூட்டணி பேச்சுவார்த்தை நடைபெற்று கொண்டிருக்கும்போதே அதிமுக வேட்பாளர் பட்டியலை ரிலீஸ் செய்துள்ளது. அதாவது, 2011 சட்டமன்ற தேர்தலின்போது கம்யூனிஸ்ட்டுகள் உடனான தொகுதி பங்கீடு இறுதி செய்யப்படாத நிலையில், எப்படி வேட்பாளர் பட்டியலை அதிமுக வெளியிட்டதோ, அதே பாணியில் தற்போது பாஜகவுடன் கூட்டணி பேச்சுவார்த்தை நடைபெற்று கொண்டிருக்கும்போதே, ஜெயலலிதா ஸ்டைலில் வேட்பாளர் பட்டயலை ஓபிஎஸ -இபிஎஸ் வெளியிட்டுள்ளனர்.
அதிமுக கட்சித் தலைமையில் இந்த அதிரடி நடவடிக்கையால், கூட்டணி பாஜகவுக்கு இருக்கும் மரியாதை என்ன? என்ற கேள்வி தமிழக அரசியல் அரங்கில் எழுந்துள்ளது. இதற்கு, அரசியலில் இதெல்லாம் சகஜம் என்பது பாஜகவின் பதிலாக இருக்குமா அல்லது கேட்ட இடங்கள் கிடைக்காவிட்டால், கூட்டணியில் இருந்து வெளியேறி பாஜக தனித்துப் போட்டியிடுமா? என்று ஒரிரு நாளில் தெரிந்துவிடும் என்கின்றனர் அரசியல் விமர்சகர்கள்.
No comments:
Post a Comment