பட்ஜெட்டில் இதெல்லாம் வேணும்.. முக்கியமான எதிர்பார்ப்புகள்!
இன்று தாக்கலாகும் மத்திய பட்ஜெட்டில் வருமான வரி உள்ளிட்ட நான்கு மிக முக்கியமான விஷயங்கள் எதிர்பார்க்கப்படுகின்றன.
மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் 2022-23 நிதியாண்டுக்கான மத்திய பட்ஜெட்டை இன்று (பிப்ரவரி 1) தாக்கல் செய்கிறார். இந்த பட்ஜெட்டில் பொருளாதார வளர்ச்சியில் கூடுதல் கவனம் செலுத்தப்பட்டிருக்கும் என்று கூறப்படுகிறது. ஆனால் கிராமப்புற பொருளாதாரம் உள்ளிட்ட வேறு சில விஷயங்களிலும் கூடுதல் கவனம் இருந்திருக்க வேண்டும் என்று வல்லுநர்கள் தரப்பில் கருதப்படுகிறது.
வருமான வரி தொடர்பான அறிவிப்புதான் இந்த பட்ஜெட்டில் பெரும்பாலான மக்களின் எதிர்பார்ப்பாக உள்ளது. வருமான வரி அடிப்படை விலக்கு வரம்பு கடந்த சில ஆண்டுகளாக மாற்றப்படாமல் உள்ளது. தற்போது அந்த வரம்பு ரூ.2.5 லட்சமாக இருக்கிறது. இதை உயர்த்த வேண்டுமென்பது இந்த பட்ஜெட்டில் மிடில் கிளாஸ் மக்களின் முக்கிய எதிர்பார்ப்பாக உள்ளது.
நிலையான வருமான வரி விலக்கு வரம்பை (standard deduction limit) உயர்த்த வேண்டும் என்பது இந்த பட்ஜெட்டில் மிகப் பெரிய கோரிக்கையாக உள்ளது. சம்பளம் பெறும் வரி செலுத்துவோருக்கு (salaried taxpayers) வருமான வரி விலக்கு வரம்பை 50,000 ரூபாயாக உயர்த்தவும், பென்சனர்களுக்கு 30 முதல் 35 சதவீதம் உயர்த்தவும் அரசு தரப்பில் பரிசீலிக்கப்பட்டுள்ளதாகத் தெரிகிறது.
கொரோனா பிரச்சினை வந்த பிறகு பொதுமக்களின் மருத்துவச் செலவுகள் அதிகரித்ததால் தனிநபர் வருமான வரி விலக்கு வரம்பை 30 முதல் 35 சதவீதம் உயர்த்த வேண்டும் என்ற கோரிக்கைகள் வலுத்துள்ளன.
மூலதன சந்தைகள்!
மத்திய பட்ஜெட்டில் மூலதன சந்தைகளின் எதிர்பார்ப்புகள் சில உள்ளன. பங்கு விற்பனை, வரி இணக்கம், எளிதாகத் தொழில் தொடங்கும் அம்சங்கள், சிறு குறு நடுத்தர தொழில் நிறுவனங்களுக்கான ஆதரவு, கிராமப்புற பொருளாதாரம் போன்றவற்றுக்கான சிறப்பு அறிவிப்புகளை மூலதன சந்தைகள் எதிர்பார்க்கின்றன. கடந்த 10 ஆண்டுகளில் பட்ஜெட் தாக்கல் செய்யும் நாளில் தேசிய பங்குச் சந்தை குறியீட்டு எண் நிஃப்டி சராசரியாக 2.4 சதவீதம் உயர்ந்துள்ளது. 2021ஆம் ஆண்டில் மட்டும் 4.9 சதவீதம் அதிகரித்திருந்தது.
விவசாயிகள்!
கிராமப்புறங்களில் வாழும் மக்கள், குறிப்பாக விவசாயிகள் இந்த பட்ஜெட் மீது அதிக நம்பிக்கை வைத்துள்ளனர். கிராமப்புற வேலைவாய்ப்பு திட்டங்கள் மற்றும் நேரடிப் பணப் பரிமாற்றத் திட்டங்களின் கீழ் ஏதேனும் சிறப்பு அறிவிப்புகள் வெளியாகுமா என்று எதிர்பார்க்கப்படுகிறது. கடந்த பட்ஜெட்டைப் போலவே இந்த முறையும் 100 நாள் வேலைத் திட்டம் மற்றும் பிஎம் கிசான் திட்டத்தில் அதிக நிதி ஒதுக்கப்படும் என்று தெரிகிறது. கிராமப்புற உள்கட்டுமான வசதிகளை மேம்படுத்த மத்திய அரசு கூடுதல் கவனம் செலுத்தும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
No comments:
Post a Comment