இந்தியாவின் பழமையான கிளப்பில் பயங்கர தீ விபத்து!
செகந்திராபாத்தில் உள்ள பழமையான கிளப்பில் பயங்கர தீ விபத்து ஏற்பட்டது
இந்தியாவின் பழமையான கிளப் ஒன்று, தெலங்கானா மாநிலத்தில் உள்ள செகந்திராபாத்தில் அமைந்துள்ளது. 1878 ஆம் ஆண்டு ஆங்கிலேயர்களால் நிறுவப்பட்ட இந்த கிளப், செகந்திராபாத் நகரின் மையப் பகுதியில் சுமார் 22 ஏக்கரில் அமைந்துள்ளது.
இந்நிலையில் இன்று அதிகாலை, சுமார் 3 மணியளவில் இந்த கிளப்பில் திடீரென பயங்கர தீ விபத்து ஏற்பட்டது. கிளப்பில் இருந்த பாதுகாப்பு குழுவினர் தீ விபத்து குறித்து தீயணைப்புத் துறைக்கு தகவல் தெரிவித்தனர். இதையடுத்து ராணுவ தீயணைப்பு வாகனம் உட்பட, 8 தீயணைப்பு வாகனங்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டன.
சுமார் 4 மணி நேர போராட்டத்திற்கு பிறகு தீயணைப்பு வீரர்கள் தீயை அணைத்தனர். இந்த தீ விபத்துக்கான காரணம் இதுவரை கண்டறியப்படவில்லை. ஆனால் முதல் தளத்தில் தான் தீ விபத்து ஏற்பட்டிருப்பது காவல் துறையினரின் முதல் கட்ட விசாரணையில் தெரிய வந்துள்ளது.
3 தளங்களை கொண்ட இந்த கட்டடம் சுமார் 60 ஆயிரம் அடி உயரம் கொண்டது. இந்த தீ விபத்தில் கட்டடம் முழுவதுமாக சேதம் அடைந்ததாகவும், சுமார் 25 கோடி ரூபாய் மதிப்பிலான பொருட்கள் சேதமடைந்து உள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்த சம்பவம் குறித்து போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
No comments:
Post a Comment