சாதிகள் தீர்மாணிக்கும் உத்தரப்பிரதேச தேர்தல்: யாருக்கு பலம்? - TAMIL BOOKS FREE PDF

tamil books and story reading portal

Post Top Ad

Sunday, January 16, 2022

சாதிகள் தீர்மாணிக்கும் உத்தரப்பிரதேச தேர்தல்: யாருக்கு பலம்?

சாதிகள் தீர்மாணிக்கும் உத்தரப்பிரதேச தேர்தல்: யாருக்கு பலம்?



உத்தரப்பிரதேச தேர்தல் வெற்றியை தீர்மாணிக்கும் சக்தியாக அங்குள்ள சாதிகளே கடந்த காலங்களில் இருந்துள்ளன
அரசியல் கட்சிகள் வெற்றி பெற்று நாற்காலியில் அமர்ந்ததும், சாதி வேறுபாடுகளற்ற அரசாக எங்கள் அரசு இருக்கும். சாதிகளுக்கு எதிரான எங்கள் அரசு செயல்படும் என்று வாய்ச்சவடால்கள் விட்டாலும், அந்த நாற்காலியின் ஒரு கால் சாதிகளாலேயே இயங்கி வருகிறது என்பது வேதனையான மறுக்க முடியாத உண்மையாகவே இருக்கிறது. அந்த கால் உடைந்து விட்டால் ஆட்சி அதிகாரமே உடைந்து விடும் அளவுக்கு உத்தரப்பிரதேசம் சாதிகளினால் ஊறிப்போனது என்பது அனைவருக்கும் தெரிந்த விஷயமே.

இந்த நிலையில், உத்தரப்பிரதேசம் சட்டமன்ற தேர்தலை எதிர்நோக்கி காத்திருக்கிறது. கடந்த கால அனுபவங்களை எடுத்துக் கொண்டால், உத்தரப்பிரதேச தேர்தல் வெற்றியை தீர்மாணிக்கும் சக்தியாக அங்குள்ள சாதிகளே இருந்துள்ளன. எனவே, அம்மாநிலத்தை எடுத்துக் கொண்டால், மதச்சார்பின்மை, சாதியின்மை, சமூக நல்லிணக்கம் என்றெல்லாம் அனைத்து அரசியல் கட்சிகளும் பேசினாலும் கூட, அவைகள் சாதி சார்ந்தே இயங்கும் என்பது எழுதப்படாத விதியாகவே உள்ளது.

உத்தரபிரதேச மாநிலத்த்தை இரண்டு பிரிவுகளாக பிரிக்கலாம். ஒன்று கிழக்கு உத்தரப் பிரதேசம் மற்றொன்று மேற்கு உத்தரப் பிரதேசம். கிழக்கு உத்தரப் பிரதேசத்தை பொறுத்தவரை பீகார் மற்றும் ஜார்க்கண்ட் மாநில மக்களின் வாழ்வியலோடு ஒத்துப் போகக்கூடிய வாழ்க்கைமுறை அங்கு இருப்பதாக கூறப்படுகிறது. மேற்கு உத்தரப் பிரதேசத்தை எடுத்துக்கொண்டால் பஞ்சாப், ஹரியானா, ராஜஸ்தான் ஆகிய மாநில மக்களின் வாழ்வியல் கலாச்சாரத்தோடும், பொருளாதாரத்தோடும் ஒத்துப் போகக் கூடிய வாழ்க்கை முறை இருப்பதாக கூறப்படுகிறது.

கிழக்கு உத்தரப் பிரதேசத்தில் இந்துத்துவம் மூலம் வாக்குவங்கியானது வரக்கூடிய சூழல் இருக்கிறது. குறிப்பாக தற்போதைய முதல்வர் யோகி ஆதித்யநாத் ஐந்து முறை கோரக்பூர் தொகுதியிலிருந்து மக்களவைக்குத் தேர்வு செய்யப்பட்டவர். கோரக்பூர், வாரணாசி, அயோத்தி அகியவை பாஜகவுக்கு செல்வாக்குமிக்க பகுதியாக பார்க்கப்படுகிறது. வாரணாசியில் இருந்து பிரதமர் மோடி மக்களவைக்கு தேர்வு செய்யப்பட்டுள்ளார். அயோத்தியில் ராமர் கோயில் கட்டப்பட்டு வருவதும், இது தொடர்பான அரசியலை பாஜக பல ஆண்டுகளாக செய்து வருவதாலும் அப்பகுதி வாக்குகள் பாஜகவுக்கு செல்ல வாய்ப்புள்ளது.

மேற்கு உத்தரப் பிரதேசத்தில் விவசாயத்தை நம்பி இருப்பவர்கள் ஏராளமானோர் உள்ளனர். இங்கு காசியாபாத், ஆக்ரா ஆகியவை இரண்டு முக்கிய நகரங்களாக இருக்கிறது. அங்கே இஸ்லாமியர்களின் வாக்குகள் அதிக அளவில் இருக்கிறது.

உத்தரப்பிரதேசத்தில் மொத்தம் 20 கோடிக்கும் அதிகமான மக்கள் வாழ்கின்றனர். இதில், 79.7 சதவீதம் பேர் இந்துக்களாக உள்ளனர். 19.2 சதவீதம் பேர் இஸ்லாமியர்களாக இருக்கின்றனர். ஒரு சதவீதம் பேர் கிறிஸ்தவ, சீக்கிய, புத்த மதத்தைப் பின்பற்றக் கூடியவர்களாக இருக்கிறார்கள் என்று 2011ஆம் ஆண்டு மத வாரியான கணக்கெடுப்பு சொல்கிறது.

சாதிவாரியாக எடுத்துக்கொண்டால் ஆதிக்க சாதியினர் 25 சதவீதம் பேரும், ஓபிசி பிரிவில் 39 சதவீதம் பேரும், எஸ்சி., எஸ்டி பிரிவில் 20 சதவீதம் பேரும், இஸ்லாமியர்கள் 16 சதவீதம் பேரும் உள்ளனர். ஆதிக்க சமூகத்தை நான்கு பிரிவுகளாக பிரிக்கலாம். அதன்படி, பிராமணர்கள் 10 சதவீதம் பேர், தாகூர் சமூகத்தை சேர்ந்தவர்கள் 7 சதவீதம் பேர், வைசியர்கள் 5 சதவீதம் பேர், மற்றவர்கள் மூன்று சதவீதம் பேர் இருக்கிறார்கள்.
ஓபிசி பிரிவை எடுத்துக் கொண்டால் அதனை ஏழு பிரிவுகளாக வகைப்படுத்தலாம். அதில், யாதவர்கள் 7 சதவீதம் பேர், மௌரிய சமூகத்தை சேர்ந்தவர்கள் 5 சதவீதம் பேர், குர்மி 2 சதவீதம், நிஷாட் 2 சதவீதம், லோதி 3 சதவீதம், ஜாட் 2 சதவீதம் பேர் மற்றவர்கள் 13 சதவீதம் பேரும் உள்ளனர். எஸ்.சி., எஸ்.டி., பிரிவில் ஜாதவ் 10 சதவீதம், பாசி 4 சதவீதம், மற்றவர்கள் 6 சதவீதம் பேர் உள்ளனர்.

மேற்கு உத்தரப்பிரதேசத்தில் இஸ்லாமியர்கள் 29 சதவீதம் பேரும், ஜாதவ் சமூகத்தை சேர்ந்தவர்கள் 12% பேரும் இருக்கிறார்கள். கிழக்கு பிரதேசத்தில் யாதவ சமூகத்தினர் 10 சதவீதம் பேரும், குர்மி சமூகத்தினர் 8 சதவீதம் பேரும் உள்ளனர். மத்திய உத்தரப்பிரதேசத்தில் பிராமணர்கள் 13 சதவீதம் பேர் இருக்கிறார்கள்

உத்திரப்பிரதேச மாநிலத்தில் பிராமணர்களின் வாக்கு மிகவும் முக்கியமான வாக்கு வங்கியாக இருக்கிறது. அவர்கள் எந்த கட்சியை ஆதரிக்கிறார்களா அந்தக் கட்சி ஆட்சி அதிகாரத்தில் அமரும் சூழல் நிலவுவதாக அரசியல் நோக்கர்கள் கூறுகிறார்கள். கடந்த கால தேர்தல்கள் இதனை உறுதியும் படுத்தியுள்ளன. கடந்த 2007 ஆம் ஆண்டு பகுஜன் சமாஜ் கட்சித் தலைவர் மாயாவதி, பிராமன அமைப்புகளுடன் இணைந்து தேர்தலை எதிர் கொண்டார். அந்த தேர்தல் அவருக்கு மிகப்பெரிய வெற்றியை தேடித்தந்தது.

ஆனால் தற்போது களநிலவரம் மாறி இருப்பதாக கூறுகிறார்கள். பிராமணர்களை பொறுத்தவரை அவர்கள் பாஜகவை ஆதரிக்கும் முடிவை எடுத்திருப்பதாக கூறுகிறார்கள். அதற்கு இரண்டு காரணங்கள் கூறப்படுகின்றன. ஒன்று இந்துத்துவா கொள்கை மற்றொன்று தேசப் பாதுகாப்பில் சமரசம் இல்லாமல் பிரதமர் மோடி செயல்படுகிறார் ஆகிய இரண்டு காரணிகள் சொல்லப்படுகிறது.

இருந்தாலும் கூட, முதல்வர் யோகி ஆதித்யநாத் தாகூர் சமூகத்திற்கு பெரும்பாலான விஷயங்களை செய்வதால் அவை பிராமணர்கள் மத்தியில் அதிருப்தியை ஏற்படுத்தியிருப்பதாக கூறப்படுகிறது. ஆனால், காங்கிரஸ் கட்சியில் இருந்து வந்த ஜிதின் பிரசாதாவின் வருகை அந்த அதிருப்தியை சரி கட்டி விடும் என்கிறார்கள். அதேசமயம், ஆதிக்க சமூகத்தினரின் வாக்குகளை விட ஓபிசி சமூகத்தின் வாக்கு வங்கி அதிகமாக உள்ளதால் அச்சமூகத்தை சேர்ந்தவர்களே வெற்றியை தீர்மாணிக்கும் சக்தியாக இருப்பார்கள் என்கிறார்கள் கள நிலவரம் அறிந்தவர்கள். இந்த ஓபிசி வாக்குகள் சிதறாமல் ஏதேனும் ஒரு கட்சிக்கு குறிப்பிட்டு விழுந்தால், அக்கட்சி வெற்றி பெறக் கூடிய நிலை இருப்பதாகவும் அவர்கள் சுட்டிக்காட்டுகின்றனர்.

இதனிடையே, பாஜகவில் இருந்து அமைச்சர்கள், எம்.எல்.ஏ.க்கள் என பலரும் விலகி வருவது அக்கட்சிக்கு பின்னடைவை ஏற்படுத்தியுள்ளது. இந்த பின்னடைவை சாதி வாக்குகள் மூலம் பாஜக அறுவடை செய்யுமா? அல்லது சாதி வாக்குகளை மற்ற கட்சிகள் அறுவடை செய்யுமா என்பது தேர்தல் முடிவுகளில் தெரிந்து விடும்.



No comments:

Post a Comment

Post Top Ad