பூனைகளுக்கு வளைகாப்பு… கோவை மக்களின் 'கொங்கு காதல்'
கோவையில் பூனைகளுக்கு வளைகாப்பு நடத்தப்பட்ட சம்பவம் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
கோயம்புத்தூர் மாவட்டம் வேலாண்டிபாளையம் பகுதியை சேர்ந்த உமா மகேஷ் - சுபா தம்பதியினர் ப்ரிஸியன் வகை பூனைகளை வளர்த்து வருகின்றனர். செல்லமாக வளர்த்து வரும் இந்த பூனைகளுக்கு ஜீரா, ஐரிஸ் என பெயர் வைத்து செல்லமாக வளர்த்து வருகின்றனர்.
இந்த இரு பூனைகளுக்கு அண்மையில் வயிறு பெரிதாக இருந்ததால் அதிர்ச்சியடைந்த தம்பதி கால்நடை மருத்துவமனைக்கு பரிசோதனைக்கு அழைத்துச்சென்றனர். அப்போது பூனைகளை பரிசோதித்த மருத்துவர்கள் கர்ப்பமாக இருப்பதாக தெரிவித்துள்ளனர்.
இதனால் மகிழ்ச்சியடைந்த தம்பதி இரு பூனைகளுக்கும் வளைகாப்பு நடத்த திட்டமிட்டனர். மனிதர்களுக்கு நடந்தும் வளைகாப்பு நிகழ்ச்சி போன்று உற்றார் உறவினர்களை அழைத்து மிகவும் பிரமாண்டமாக செய்ய திட்டமிட்டனர். ஆனால் கொரோனா பரவல் காரணமாக ஆர்.எஸ்.புரம் பகுதியில் உள்ள ஒரு தனியார் செல்லப்பிராணி நிலையத்தில் எளிமையான முறையில் நடத்தப்பட்டது.
பூனைகளுக்கு பிரேத்யேக ஆடை அணிவிக்கப்பட்டு கறுப்பு மற்றும் வெள்ளை நிற வளையல்கள் அணிவிக்கப்பட்டது. மேலும், தேன்மிட்டாய், கடலை மிட்டாய், பழங்கள், பிஸ்கேட்டுகள் உள்ளிட்ட பொருட்கள் வைத்து நிகழ்ச்சி நடத்தப்பட்டது. இதனை கண்ட கால்நடை மருத்துவர்கள் பூனைகளுக்கு வளைக்காப்பு நடத்துவதை முதல்முறையாக பார்ப்பதாக நெகிழ்ச்சியடைந்தனர்.
கடந்த சில மாதங்களுக்கு முன்பு தேனி மாவட்டம் உப்புக்கோட்டை மற்றும் மதுரையில் நாய்களுக்கு வளைகாப்பு நடத்திய சம்பவம் நெகிழ்ச்சியை ஏற்படுத்திய நிலையில் தற்போது கொங்கு மக்களின் பாசத்தை வெளிப்படுத்தும் வகையில் இந்த பூனை வளைகாப்பு நடத்தப்பட்டுள்ளதாக நெட்டிசன்கள் டிவிட் செய்து தங்களது மகிழ்ச்சியை வெளிப்படுத்தி வருகின்றனர்.
No comments:
Post a Comment