சிந்தாமல் சிதறாமல்.. பிராமண வாக்குகளை.. மொத்தமாக அள்ள.. பாஜக பலே திட்டம்!
உத்தரப் பிரதேசத்தில் பிராமணர் சமுதாய வாக்குகளை கவர புதிய திட்டம் வகுத்துள்ளது பாஜக.
உத்தரப் பிரதேசத்தில் பிராமண சமுதாயத்தினரின் வாக்குகளை சிந்தாமல் சிதறாமல் அப்படியே அள்ளுவதற்காக தனி திட்டம் தீட்டி செயல்படுகிறது பாஜக.
பிராமண வாக்குகளைக் கவரும் உத்திகளைக் கவனிப்பதற்காகவே தனியாக 4 பேர் கொண்ட கமிட்டியையும் உ.பி. பாஜக அமைத்துள்ளது. டிசம்பர் 26ம் தேதி அமைக்கப்பட்ட இந்தக் கமிட்டி மாநிலம் முழுவதும் 25 நாள் பயணம் செய்து பிராமண சமுதாயத்தினரின் வாக்குகள், பாஜகவுக்கு வந்து சேருவதை உறுதி செய்யவுள்ளன. இதுவரை 80 பிராமணர் சங்கங்களின் நிர்வாகிகளுடன் இக்குழு பேச்சுவார்த்தை நடத்தியுள்ளது.
முன்னாள் மத்திய அமைச்சர் சிவ பிரதாப் சுக்லா தலைமையிலான இக்குழுவில் மகேஷ் சர்மா, அபிஜித் மிஸ்ரா மற்றும் ராம் பாய் மொராக்கியா ஆகியோர் இடம் பெற்றுள்ளனர். இக்கமிட்டியின் முதல் கூட்டம் லக்னோவில் நடந்தது. அடுத்து 2வது கூட்டம் ஜனவரி 4ம் தேதி நடைபெறவுள்ளது.
பிராமணர் சமுதாயத்திற்கு பாஜக செய்துள்ளது என்ன, செய்யப் போவது என்ன,அரசின் திட்டங்கள் உள்ளிட்டவை குறித்து பிராமணர் சங்கங்களுக்கு புரிய வைத்து அவர்கள் மூலம் பிராமண சமுதாயத்தினரிடம் அவற்றைக் கொண்டு செல்ல பாஜக திட்டமிட்டுள்ளது. இதன் மூலம் பிராமணர்களின் வாக்குகள் திசை திரும்பி விடாமல் வளைக்க முடியும் என்பது பாஜகவின் எண்ணம் ஆகும்.
பாஜகவின் உத்தி குறித்து அபிஜித் மிஸ்ரா கூறுகையில் பெரும்பாலான பிராமணர்களுக்கு அரசின் நடவடிக்கைகள் குறித்து திருப்தி உள்ளது. அதேசமயம், அதிருப்தியுடன் உள்ளவர்களையும் பாஜகவுக்கு ஆதரவாக திருப்பவே நாங்கள் உத்திகள் வகுத்து செயல்பட்டு வருகிறோம். எங்களது சாதனைகளை அனைவரிடமும் சொல்லி வருகிறோம். மக்கள் மிகவும் சந்தோஷமாக உள்ளனர் என்றார் அவர்.
முன்பு மாயாவதியின் மீது நம்பிக்கை கொண்டு பிராமணர் சமுதாய வாக்குகள் அவர் பக்கம் பெருமளவில் திரும்பின. இது பாஜகவுக்கு பெரும் பாதிப்பை ஏற்படுத்தியது. தற்போது பகுஜன் சமாஜ் கட்சி பலவீனமாக கிடப்பதால், பிராமணர் சமுதாய வாக்குகள் சிதறும் நிலை ஏற்பட்டுள்ளது. அப்படி சிதறி விடாமல் முழுமையாக தம் பக்கம் இழுக்க தற்போது பாஜக தீவிரம் காட்டி வருகிறது. ஏற்கனவே விவசாயிகள், முஸ்லீம்கள் உள்ளிட்டோரின் கடும் அதிருப்தியை பாஜக சம்பாதித்துள்ளது. இந்தநிலையில் அங்கு ஒவ்வொரு சமுதாயத்தினரின் வாக்குகளும் தற்போது பாஜகவுக்கு முக்கியமாகியுள்ளது. எனவேதான் பிராமணர் சமுதாய வாக்குகள் குறித்து பாஜக தீவிர அக்கறை காட் டஆரம்பித்துள்ளது.
No comments:
Post a Comment