இந்திய - சீன ராணுவ வீரர்கள் புத்தாண்டு கொண்டாட்டம்.. எல்லையில் ஸ்வீட் சம்பவம்!
எல்லையில் இனிப்புகள், பரிசுகளை பரிமாறி புத்தாண்டை கொண்டாடிய இந்திய - சீன ராணுவ வீரர்கள்.
2020ஆம் ஆண்டு மே மாதம் முதல் இந்தியா - சீனா இடையே கிழக்கு லடாக் பகுதியில் எல்லைப் பிரச்சினை நீடித்து வருகிறது. இரு நாட்டு ராணுவங்களும் எதிர் எதிர் நிலையில் நின்றுகொண்டிருக்கின்றன. இப்பிரச்சினைக்கு சுமூக தீர்வு காண தொடர் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டு வருகிறது.
எல்லைப் பிரச்சினைக்கு இதுவரை தீர்வு காணப்படாவிட்டாலும், புத்தாண்டு ஒரு புதிய முன்னேற்றத்துடன்தான் வந்துள்ளது. இன்று புத்தாண்டு கொண்டாடப்பட்டு வருகிறது. இந்நிலையில், இந்திய - சீன ராணுவ வீரர்கள் எல்லையில் புத்தாண்டு வாழ்த்துகளையும், பரிசுகளையும் பகிர்ந்துகொண்டுள்ளனர்.
கிழக்கு லடாக்கில் உள்ள ஹாட் ஸ்ப்ரிங்ஸ், தெம்சோக் ஆகிய பகுதிகளில் இரு ராணுவ வீரர்களும் புத்தாண்டு பரிசுகளையும், இனிப்புகளையும் பரிமாறிக்கொண்டனர். இதில் ஹாட் ஸ்ப்ரிங்ஸ் பகுதி பிரச்சினைக்குரிய இடம் என்பது குறிப்பிடத்தக்கது.
இதுபோக கேகே பாஸ், டிபிஓ, பாட்டில்நெக், கொங்கலா, சுஷுல் மோல்டோ, தெம்சோக் ஹாட்ஸ்ப்ரிங், நதுலா, கொங்ராலா, பம் லா, வச்சா தமாய் ஆகிய பகுதிகளிலும் இந்திய - சீன ராணுவ வீரர்கள் சந்தித்து புத்தாண்டு வாழ்த்துகள், பரிசுகள், இனிப்புகளை பகிர்ந்துகொண்டனர்.
இந்திய - சீன ராணுவ வீரர்கள் மத்தியில் பல மாதங்களாக பதற்றமான, இறுக்கமான சூழல் நிலவி வந்தது. இந்நிலையில், புத்தாண்டு வாழ்த்துகள் மூலம் சூடு சற்றே தணியும் என எதிர்பார்க்கப்படுகிறது.
No comments:
Post a Comment