சாய் பல்லவியை போல எனக்கும் 'அது' நடந்துருக்கு: தமிழிசை சௌந்தரராஜன் உருக்கம்!
பெண்களின் முன்னேற்றத்தை தடுக்கும் உருவ கேலி போன்ற செயல்களை தன்னம்பிக்கையுடன் எதிர்கொள்ள வேண்டும் என தெரிவித்துள்ளார் ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜன்.
மலையாளத்தில் வெளியான பிரேமம் படத்தின் மூலம் தென்னிந்திய ரசிகர்களின் கவனத்தை ஈர்த்து தனக்கென ரசிகர்கள் பட்டாளத்தை உருவாக்கி வைத்துள்ளவர் சாய் பல்லவி. தமிழில் மாரி 2, என் ஜி கே, பாவ கதைகள் போன்ற படங்களில் நடித்துள்ளார். இவர் நடிப்பில் வெளியாகியுள்ள 'ஷியாம் சிங்கா ராய்' படம் வசூல் ரீதியாகவும் விமர்சன ரீதியாகவும் பாராடுக்களைக் குவித்து வருகிறது.
இந்நிலையில் அண்மையில் ஒரு நபர் தன்னுடைய பேஸ்புக் பதிவில், “பெரிதாக சொல்லும் அளவிற்கு சாய் பல்லவி ஒன்றும் அழகில்லை. அவருடைய தாடை கரடுமுரடானது. சாய்பல்லவிக்கு யானைக் காதுகள். அவருடைய சாமர்த்தியமான கூந்தலால் அவர் பல படங்களில் காதுகளை மறைக்கிறார். இப்படி பல அவலட்சணங்கள் அவரிடம் இருக்கிறது, அவற்றை கேமரா ஆங்கில் மூலமாக சரிசெய்து கொள்கிறார் என உருவக்கேலி செய்து பதிவிட்டிருந்தார்.
இதனை தொடர்ந்து பலரும் சாய் பல்லவிக்கு ஆதரவாகவும், எதிராகவும் சமூக வலைத்தளங்களில் பதிவுகள் பகிர்ந்து வந்தனர். இந்நிலையில் இந்த விவகாரம் தொடர்பாக பேசியுள்ள புதுச்சேரி ஆளுநர் தமிழிசை சவுந்தர்ராஜன், ‘நானும் உருவ கேலிக்கும் கிண்டலுக்கும் ஆளாகி இருக்கிறேன். நான் இந்த காயங்களை புறந்தள்ளிவிட்டு போயிருக்கிறேன். குள்ளச்சி, நெட்டச்சி, கருப்பி என சொல்பவர்கள் நம்மை காயப்படுத்தும் நோக்கில் சொல்லும்போது, அதை நம் திறமையாலும், செய்யும் பணியாலும், உழைப்பாலும் தான் எதிர்கொள வேண்டும்.
இந்த பிரச்சனை ஆண்களை விட பெண்களையே அதிகம் பாதிக்கிறது. இந்த பாடி ஷேமிங் கண்டு பெண்கள் மன ரீதியாக தேங்கிவிட கூடாது, பெண்களின் முன்னேற்றத்தை தடுக்கும் இதுபோன்ற செயல்களை தன்னம்பிக்கையுடன் எதிர்கொள்ள வேண்டும்” என்று உருக்கமாக பேசியுள்ளார்.
விஜய், தனுஷ் என தமிழ் சினிமாவில் பலரும் உருவக்கேலி, கிண்டல்களுக்கு ஆளானவர்களே. பெண்கள் மிகவும் அச்சப்படும் முகப்பருக்களையே தன்னுடைய இயல்பான அழகினால் ரசிக்க வைத்தவர் சாய் பல்லவி. இயற்கை அழகையே விரும்பும் இவர், செயற்கையான முகப்பூச்சு விளம்பரங்களில் நடிக்காமல் இருக்கிறார். பெண்கள் இப்படித்தான் இருக்க வேண்டும் என்ற பிற்போக்குதனமான கற்பிதங்களின் விளைவே உருவக்கேலிகள் என்கின்றனர் சமூக ஆர்வலர்கள்.
No comments:
Post a Comment