முரண்டு பிடிக்கும் மத்திய அரசு; விடாமல் துரத்தும் தமிழக அரசு!
தேசிய நெடுஞ்சாலைகளாக தரம் உயர்த்தும் திட்டம் குறித்து தமிழக அரசு தரப்பில் முக்கிய விளக்கம் அறிவிக்கப்பட்டுள்ளது.
தமிழகத்தில் 50 கிலோமீட்டர் தொலைவிலான எட்டு மாநில நெடுஞ்சாலைகளை தேசிய நெடுஞ்சாலைகளாக மாற்ற மத்திய அரசுக்கு தேசிய நெடுஞ்சாலை அலகு முன்மொழிந்தது. இதற்கு மத்திய சாலைப் போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலை அமைச்சகம் கொள்கை ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது. ஆனால் இந்த அறிக்கை இந்திய அரசிதழில் இன்னும் வெளியிடப்படவில்லை. இந்நிலையில் 8 மாநில நெடுஞ்சாலைகளை தேசிய நெடுஞ்சாலைகளாக தரம் உயர்த்தும் திட்டம் பணிகள் முடக்கம் என்று தமிழ் நாளிதழில் செய்தி வெளியாகியுள்ளது. இதற்கு விளக்க அறிக்கையை முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையிலான தமிழக அரசு வெளியிட்டுள்ளது. அதில்,
* முதன்மை செயலர், நெடுஞ்சாலை மற்றும் சிறு துறைமுகங்கள் துறை அவர்கள், ஒன்றிய சாலைப் போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலை அமைச்சகத்திற்கு மேற்கண்ட 8 சாலைகளை தேசிய நெடுஞ்சாலைகளாக அறிவிக்க கோரி 23.5.2021 அன்று கடிதம் எழுதியுள்ளார்.
* இச்சாலைகளை தேசிய நெடுஞ்சாலைகளாக அறிவிக்க, மாண்புமிகு பொதுப்பணிகள், நெடுஞ்சாலைகள் மற்றும் சிறுதுறைமுகங்கள் துறை அமைச்சர் எ.வ.வேலு அவர்களும், ஒன்றிய சாலைப் போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைகள் அமைச்சர் நிதின் கட்கரி அவர்களுக்கு 24.5.2021 அன்று கடிதம் அனுப்பியுள்ளார்கள்.
* மீண்டும், மாண்புமிகு பொதுப்பணிகள், நெடுஞ்சாலைகள் மற்றும் சிறுதுறைமுகங்கள் துறை அமைச்சர் அவர்களால், மாண்புமிகு ஒன்றிய சாலைப்போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைத்துறை அமைச்சர் அவர்களுக்கு 11.10.2021 அன்று கடிதம் அனுப்பப்பட்டுள்ளது.
* மேலும், மாண்புமிகு பொதுப்பணிகள், நெடுஞ்சாலைகள் மற்றும் சிறு துறைமுகங்கள் துறை அமைச்சர் எ.வ.வேலு அவர்கள், புதுடெல்லியில் 12.10.2021 அன்று, மாண்புமிகு ஒன்றிய சாலைப் போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைகள் அமைச்சர் திரு நிதின்கட்கரி அவர்களை நேரில் சந்தித்து, இக்கோரிக்கையை ஒன்றிய சாலைப்போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலை அமைச்சகப் பரிசீலிக்க வேண்டும் என வேண்டுகோள் விடுத்துள்ளார்.
* தமிழ்நாட்டில் 8 மாநில நெடுஞ்சாலைகளை, தேசிய நெடுஞ்சாலைகளாக அறிவிக்க வலியுறுத்தி, மாண்புமிகு தமிழக முதலமைச்சர் அவர்கள், 18.11.2021 அன்று மாண்புமிகு இந்திய பிரதமர் அவர்களுக்கு கடிதம் எழுதியுள்ளார்கள்.
* தற்போது 24.01.2022 அன்று, முதன்மை செயலர், நெடுஞ்சாலை மற்றும் சிறுதுறைமுகங்கள் துறை மற்றும் தலைமைப் பொறியாளர் தேசிய நெடுஞ்சாலை அவர்களும், மாண்புமிகு ஒன்றிய சாலைப்போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலை அமைச்சர் அவர்களை நேரில் புதுடெல்லியில் சந்தித்து, இந்த 8 மாநில சாலைகளை தேசிய நெடுஞ்சாலைகளாக விரைவில் அறிவிக்க கோரி மீண்டும் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.
* ஒவ்வொரு கலந்தாய்வு கூட்டத்தின்போதும், ஒன்றிய சாலைப் போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலை அமைச்சகத்திடம் கொள்கை அளவில் ஒப்புதல் அளிக்கப்பட்ட மேற்கண்ட 8 சாலைகளை தேசிய நெடுஞ்சாலைகளாக விரைந்து அறிவிக்கக்கோரி தொடர்ந்து வலியுறுத்தப்பட்டு வருகிறது.
* முன்னுரிமை அடிப்படையில் இந்த மாநில சாலைகளை, தேசிய நெடுஞ்சாலையாக தரம் உயர்த்தும் அறிவிப்பு ஒன்றிய அமைச்சகத்திடம் இருந்து எதிர்நோக்கப்படுகிறது என்று கூறப்பட்டுள்ளது.
No comments:
Post a Comment