மெகா தடுப்பூசி முகாம் எப்போது? - அமைச்சர் மா.சு சொன்ன தகவல்!
வரும் சனிக்கிழமை மெகா தடுப்பூசி முகாம் நடக்கும் என அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்து உள்ளார்.
தமிழகத்தில், கொரோனா வைரஸ் தொற்றின் அடுத்த அவதாரமான ஒமைக்ரான் வைரஸ் தொற்று, புதிய தலைவலியை ஏற்படுத்தி உள்ளது. இதன் காரணமாக தலைநகர் சென்னை உள்ளிட்ட மாவட்டங்களில், கொரோனா தொற்றால் பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது.
கொரோனா பரவலைக் கட்டுப்படுத்த, வார இறுதி நாட்களில் இரவு நேர ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டு உள்ள நிலையில், ஞாயிற்றுக் கிழமையான இன்று மட்டும் முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு உள்ளது. இதற்கிடையே கொரோனா தடுப்பூசி போடும் பணிகளை தமிழக அரசு தீவிரப்படுத்தி வருகிறது. வாரத்தில் இரண்டு நாட்கள் மெகா கொரோனா தடுப்பூசி முகாம் நடத்தப்பட்டு வருகிறது.
இந்நிலையில் இன்று, சென்னையில் நிருபர்களை சந்தித்த தமிழக மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் கூறியதாவது:
தமிழகத்தில் வரும் 22 ஆம் தேதி மெகா தடுப்பூசி முகாம் நடக்கும். மாநிலம் முழுவதும் 50 ஆயிரம் மையங்களில் தடுப்பூசியை பொது மக்கள் செலுத்தி கொள்ளலாம். நந்தம்பாக்கம் கோவிட் சிகிச்சை மையத்தில் மொத்தம் 900 படுக்கைகள் உள்ளன. தற்போது 90 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். மொத்த படுக்கைகளில், போலீசார், அரசு ஊழியர்கள், அதிகாரிகளுக்கு என 350 படுக்கைகள் ஒதுக்கப்பட்டு உள்ளன. இவ்வாறு அமைச்சர் தெரிவித்தார்.
No comments:
Post a Comment