அனைவருக்கும் நகைக்கடன் தள்ளுபடி? -என்ன செய்யப் போகிறார் ஸ்டாலின்!
நகைக்கடன் தள்ளுபடி என்று தேர்தல் வாக்குறுதி அளித்துவிட்டு, தற்போது அதனை நிறைவேற்றும்போது பல்வேறு நிபந்தனைகளை திமுக அரசு விதித்துள்ளதால் தள்ளுபடி பெறமுடியாத பயனாளிகள் முதல்வர் ஸ்டாலின் மீது கடும் அதிருப்தியில் உள்ளனர். இந்த அதிருப்தி விரைவில் நடைபெறவுள்ள நதர்ப்புற உள்ளாட்சித் தேர்தலில் எதிரொலிக்காமல் இருக்க வேண்டுமானால் , 5 சவரன் வரை நகைக்கடன் பெற்றுள்ள அனைவருக்கும் அதனை ரத்து செய்ய வேண்டும் என்ற கோரிக்கை வலுத்துள்ளது.
கடந்த சட்டமன்ற தேர்தலின்போது திமுக தேர்தல் அறிக்கையில் குறிப்பிடப்பட்டிருந்த பல்வேறு வாக்குறுதிகளில் மிகவும் முக்கியமானது நகைக்கடன் தள்ளுபடி. கூட்டுறவு வங்கிகளில் 5 சவரன் மற்றும் அதற்கு குறைவாக தங்க நகையை அடமானம் வைத்துள்ளவர்களின் கடன் தள்ளுபடி செய்யப்படும் என்று ஸ்டாலின் வாக்குறுதி அளித்திருந்தார். இந்த வாக்குறுதியை நிறைவேற்றுவதற்கான நிர்வாகரீதியான பணிகள் தற்போது இறுதிகட்டத்தை எட்டியுள்ளது என்றே சொல்லலாம்.
ஆனால், கூட்டுறவு வங்கிகளில் 5 சவரன் வரை பெறப்பட்டுள்ள நகைக்கடன்கள் தள்ளுபடி செய்யப்படும் என்று ஒற்றை வரியில் தேர்தல் வாக்குறுதி அளித்துவிட்டு, அதனை நிறைவேற்றும்போது ஆயிரத்து எட்டு நிபந்தனை விதித்து, இந்த தள்ளுபடியை பெற தகுதியுள்ளவர்களின் எண்ணி்க்கையை எந்த அளவுக்கு குறைக்க முடியுமோ அந்த அளவுக்கு குறைக்கப்பட்டுள்ளதுதான் தற்போது எழுந்துள்ள சிக்கல்.அதாவது, திமுக வெற்றிப் பெற்றால் நகைக்கடன் தள்ளுபடி செய்யப்படும் என்று ஒற்றை வரியில் தேர்தல் வாக்குறுதி அளித்துவிட்டு, நகையை 5 சவரனுக்கு குறைவாக இரண்டு மூன்று பகுதிகளாக பிரித்து வைத்துள்ளவர்கள், அரசு ஊழியர்கள் மற்றும் அவர்களின் குடும்ப உறுப்பினர்கள், ஓய்வூதியதாரர்கள், 40 கிராமுக்கு (5 சவரன்) மேல் ஒரு கிராம் அதிகமாக நகை அடமானம் வைத்திருப்பவர்கள் உள்ளிட்டோருக்கு நகைக் கடன் தள்ளுபடி கிடையாது என்று திமுக அரசு தற்போது கடும் நிபந்தனைகளை விதித்துள்ளது.
இதனால், ஸ்டாலின் அளித்த தேர்தல் வாக்குறுதியை நம்பி, திமுக ஆட்சிக்கு வந்தால் தங்களது நகைக்கடன் தள்ளுபடி செய்யப்பட்டுவிடும் என்று கண்மூடித்தனமாக எதிர்பார்த்து திமுக வாக்களித்தவர்கள், தற்போது நகைக்கடன் தள்ளுபடிக்கு தகுதியானவர்களின் பட்டியலில் தங்களது பெயர் இடம்பெறாததை கண்டு மிகுந்த ஏமாற்றமும், அரசின் மீது கடும் அதிருப்தியும் அடைந்துள்ளனர்.
'கூட்டுறவு சங்க உறுப்பினர்கள் பெயரில் அதுவும் சில, பல ஆண்டுகளுக்கு முன் இறந்த உறுப்பினர்களின் பெயரிலேயே நகைக்கடன் வழங்கப்பட்டிருப்பது போன்ற முறைகேடான வழியை கையாண்டுள்ளவர்களுக்கு வேண்டுமானால் கடனை தள்ளுபடி செய்யாமல் இருக்கலாம். ஆனால் ஓய்வூதியதாரர்களுக்கு நகைக்கடன் தள்ளுபடி கிடையாது, நகையை வாங்க முடியாத, அரசின் உதவித்தொகை பெறுவர்களுக்கு தள்ளுபடி வழங்க முடியாது என இப்போது வந்து அரசு நிபந்தனைகளை விதிப்பது முறையல்ல.
எல்லோருக்கு கடன் தள்ளுபடி வழங்குவது நிர்வாகரீதியாக சரியாக இருக்காது என்று அரசு கருதினால், கடன் தள்ளுபடிக்கு அரசு தற்ோது விதிக்கும் நிபநதனைகளை திமுகவின் தேர்தல் வாக்ருறுதியிலேயே தெளிவாக தெரிவித்திருக்க வேண்டும். அவ்வாறில்லாமல், கடன் தள்ளுபடிக்கு தற்போது வந்து 108 கண்டிஷன்களை போடுவது தேர்தலில் நடுநிலை வாக்காளர்களின் ஓட்டுகளை அள்ள திமுக கையாண்ட ஸ்மார்ட்டான உத்தியாகவே பார்க்க வேண்டியுள்ளது.எனவே தேர்தலின்போது அளித்த வாக்குறுதியின்படி 5 சவரன் நகைக்கடன் பெற்றுள்ள அனைவருக்கும் தள்ளுபடியை அரசு அறிவிக்க வேண்டும். இல்லையென்றால் இதன் பாதிப்பு எதிர்வரும் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் எதிரொலிக்கும். அது நிச்சயம் திமுகவுக்கு பாதகமாகவே இருக்கும்' என்று கூட்டுறவு வங்கிகளில் நகைக்க டன் பெற்றுள்ள சிலர் எச்சரிக்கின்றனர்.
நகைக்கடன் பெற்ற 48 லட்சத்து 84 ஆயிரத்து 726 பேரில் 35 லட்சத்து 37 ஆயிரத்து 693 பேருக்கு நகைக்கடன் தள்ளுபடி ஆகாது என்று கூட்டுறவுத் துறை அண்மையில் வெளியிட்டிருந்த அறிக்கையில் தெரிவித்திருந்த நிலையில், கடன் பெற்று தள்ளுபடியை எதிர்பார்த்து காத்திருப்பவர்கள் முதல்வர் ஸ்டாலினுக்கு இவ்வாறு எச்சரிக்கை விடுத்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment