நியாய விலைக் கடைகள் செயல்படுமா? தமிழக அரசு சூப்பர் அறிவிப்பு!
தமிழக அரசு உள்ளூர் விடுமுறை அறிவித்துள்ள நாளில் நியாய விலைக் கடைகள் செயல்படுவது பற்றி முக்கிய அறிவிப்பு வெளியாகியுள்ளது.
தமிழகத்தில் இன்று (ஜனவரி 14) தைப் பொங்கல் திருவிழா தமிழர்களின் இல்லங்களில் வெகு சிறப்பாக கொண்டாடப்பட்டு வருகிறது. இன்றைய தினம் அரசு விடுமுறை என்பதால் பொங்கல் கொண்டாட்டங்கள் களைகட்டும். நாளை (ஜனவரி 15) மாட்டுப் பொங்கல், நாளை மறுநாள் (ஜனவரி 16) உழவர் திருநாள் என வரிசையாக அரசு விடுமுறை வருகிறது. இதையடுத்து ஜனவரி 18ஆம் தேதி அன்று தைப்பூச திருநாளை ஒட்டி அரசு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
இடையில் 17ஆம் தேதி மட்டும் வேலை நாளாக இருந்ததால் பொதுமக்கள் வசதிக்காக உள்ளூர் விடுமுறை அறிவித்து முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையிலான தமிழக அரசு உத்தரவிட்டது. இதன்மூலம் தொடர்ந்து 5 நாட்கள் விடுமுறை கிடைக்க வழி ஏற்பட்டது. இது பொங்கல் திருவிழாவை கொண்டாட சொந்த ஊர் சென்ற தமிழர்களுக்கு மிகுந்த மகிழ்ச்சியை ஏற்படுத்தியது. இந்த நாளில் நியாய விலைக் கடைகளுக்கும் விடுமுறையா என்ற கேள்வி எழுந்தது.
ஏனெனில் தமிழக அரசு அறிவித்துள்ள 21 பொருட்கள் அடங்கிய பொங்கல் பரிசுத் தொகுப்பு 2.15 கோடி அரிசி குடும்ப அட்டைதாரர்களுக்கு படிப்படியாக வழங்கப்பட்டு வருகிறது. அதில் பச்சரிசி, வெல்லம், திராட்சை, ஏலக்காய், நெய், பாசிப்பருப்பு, முந்திரி ஆகிய பொருட்களும், பண்டிகை கால சமையலுக்கு உதவும் வகையில் மஞ்சள் தூள், மல்லித்தூள், மிளகாய்த் தூள், கடுகு, சீரகம், மிளகு, புளி, கடலைப் பருப்பு, உளுத்தம் பருப்பு,
ரவை, கோதுமை மாவு, உப்பு அடங்கிய துணிப்பை மற்றும் ஒரு முழு கரும்பு ஆகியவை அடங்கும். இந்த பரிசுத் தொகுப்பை விநியோகம் செய்யும் வகையில் கடந்த 7ஆம் தேதி வெள்ளிக்கிழமை அன்று வழக்கம் போல் செயல்படும் என்று உத்தரவிடப்பட்டது. டோக்கன் மூலம் அரிசி குடும்ப அட்டைதாரர்கள் அனைவருக்கும் கிடைக்கும் வகையில் விரைவாக நடவடிக்கை எடுக்கப்பட்டது.
இன்னும் சிலருக்கு மட்டும் இந்த பொங்கல் பரிசுத் தொகுப்பு வழங்க வேண்டும் என்று கூறப்படுகிறது. அதுமட்டுமின்றி மாதந்தோறும் வழங்கப்படும் அத்தியாவசியப் பொருட்களை பெற பலரும் ஆர்வம் காட்டுவர். இவற்றைக் கருத்தில் கொண்டு வரும் 17ஆம் தேதி நியாய விலைக் கடைகள் வழக்கம் போல் செயல்படும் என்று உணவு வழங்கல் துறை ஆணையர் உத்தரவிட்டுள்ளார்.
முன்னதாக தமிழக அரசின் உள்ளூர் விடுமுறை உத்தரவை அடுத்து, 17ஆம் தேதி நியாய விலைக் கடைகளுக்கும் விடுமுறை அறிவித்து நேற்று முன்தினம் இரவு உணவு வழங்கல் துறை உத்தரவிட்டது. இந்நிலையில் விடுமுறை அறிவிப்பை ரத்து செய்யப்படுவதாக புதிய அறிவிப்பு வெளியாகியிருப்பது குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment