ஈரோடு சேவல் சண்டை: பரிலீசிக்க உத்தரவு!
ஈரோடு மாவட்டத்தில் சேவை சண்டை நடத்துவதற்கு நிபந்தனைகளுடன் பரிசீலிக்குமாறு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது
பொங்கல் பண்டிகையை முன்னிட்டு ஈரோடு மாவட்டத்தில் உள்ள பெரிய வடமலைபாளையம் கிராமத்தில் சேவல் சண்டை நடத்த அனுமதி கோரிய விண்ணப்பத்தை நிபந்தனைகளுடன் பரிசீலிக்க மாவட்ட காவல் துறைக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
பொங்கல் பண்டிகையையொட்டி, ஜனவரி 14ஆம் தேதி முதல் 17ஆம் தேதி வரை ஈரோடு மாவட்டம், பெரியவடமலைபாளையம், ஜம்பை கிராமத்தில் சேவல் சண்டை நடத்த அனுமதி வழங்கும்படி, பவானி டி.எஸ்.பி.க்கும், காவல் ஆய்வாளருக்கும் உத்தரவிடக் கோரி அப்பகுதியைச் சேர்ந்த கணபதி என்பவர் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார்.
இந்த வழக்கு நீதிபதிகள் கே.கல்யாணசுந்தரம், வி.சிவஞானம் அடங்கிய அமர்வில் விசாரணைக்கு வந்த போது, தமிழக அரசுத் தரப்பில், கொரோனா பரவலை தடுக்க தமிழக அரசு ஊரடங்கு உத்தரவை பிறப்பித்துள்ளதாகவும், அந்த உத்தரவின் அடிப்படையில் மனுதாரரின் விண்ணப்பம் பரிசீலிக்கப்படும் என்றும் தெரிவித்தார்.
இதற்கு பதிலளித்து மனுதாரர் தரப்பு வழக்கறிஞர், ஜல்லிக்கட்டு போட்டிகளை நடத்த நிபந்தனைகளுடன் அனுமதியளித்து தமிழக அரசு ஜனவரி 10ஆம் தேதி உத்தரவிட்டுள்ளதாகவும், சேவலுக்கு காயம் ஏற்படாத வகையில் போட்டி நடத்தலாம், சேவல்களின் கால்களில் கத்தி கட்டக் கூடாது, சேவல்களுக்கு மதுபானம் கொடுக்க கூடாது, கால்நடை மருத்துவர் மேற்பார்வையில் நிகழ்ச்சியை நடத்த வேண்டும் என்பன உள்ளிட்ட நிபந்தனைகளுடன் சேவல் சண்டை நடத்த அனுமதியளித்து உயர் நீதிமன்றம் கடந்த 2019 மற்றும் 2020ம் ஆண்டுகளில் உத்தரவிட்டுள்ளதாகவும் வாதிட்டார்.
இரு தரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதிகள், இந்த நிபந்தனைகளின் அடிப்படையில் தற்போது சேவல் சண்டை நடத்த அனுமதியளிப்பது குறித்து பரிசீலிக்க வேண்டும் என பவானி காவல் ஆய்வாளருக்கு உத்தரவிட்டு, வழக்கை முடித்து வைத்தனர்.
No comments:
Post a Comment