கொரோனா பாதிப்பை சிறப்பாக கையாள்கிறது திமுக அரசு… சட்டப்பேரவைத் தலைவர் பெருமிதம்!
கொரோனா 3-வது அலை வேகமாக பரவி வந்தாலும் அரசு எடுத்துவரும் நடவடிக்கையால் தமிழகத்தில் நோய் கட்டுக்குள் உள்ளதாக சட்டப் பேரவைத் தலைவர் அப்பாவு தெரிவித்துள்ளார்.
நெல்லை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் சமூகநலன் மற்றும் மகளில் உரிமைத்துறை சார்பில் படித்த ஏழை எளிய பெண்களுக்கு திருமண உதவித் தொகையுடன் தாலிக்கு தங்கம் வழங்கும் விழா, மாவட்ட ஆட்சியர் விஷ்ணு தலைமையில் நடைபெற்றது.
இதில் தமிழக சட்டப்பேரவைத் தலைவர் அப்பாவு கலந்து கொண்டு பட்டம் மற்றும் 10 ம் வகுப்பு படித்த 2200 பெண்களுக்கு 16 கோடியே 56 லட்சம் மதிப்பில் திருமண உதவித் தொகை மற்றும் தாலிக்கு தங்கமும் வழங்கினார். இதனைத் தொடர்ந்து மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் செயல்பட்டு வரும் கொரோனா கட்டுப்பாட்டு மையத்தை பார்வையிட்டு ஆய்வு செய்தார். பின்னர் அங்கு சபாநாயகர் அப்பாவு செய்தியாளர்களை சந்தித்தார்.
அதில் அவர் கூறியதாவது: "தமிழகத்தில் கடந்த ஆண்டு கொரோனா 2-வது அலை அதிதீவிரமாக பரவியது, நாள் ஒன்றுக்கு 40 ஆயிரம் பேர் வீதம் பாதிக்கப்பட்டனர். அந்த நிலையில் தமிழக முதல்வராக பதவி ஏற்ற மு.க.ஸ்டாலின் தலைமையில் இந்த அரசு சிறப்பாக கையாண்டு 2-வது அலையை எளிதாக கடந்தோம்.
தற்போது 3-வது அலை வேகமாக பரவி வருகிறது. தமிழகத்தைப் பொறுத்தவரை இதுவரை 85 சதவீதம் பேர் தடுப்பூசி செலுத்திவிட்டனர். அதுபோன்று 15 வயது முதல் 18 வயதுக்குட்பட்டவர்களுக்கும் வேகமாக தடுப்பூசி போடப்பட்டு வருகிறது.
நெல்லை மாவட்டத்தைப் பொறுத்தவரை நோய் கட்டுப்பாட்டு பணிகளில் மாவட்ட நிர்வாகம் சிறப்பாக செயல்பட்டு வருகிறது. 3000 ஆயிரம் படுக்கைகள் தயாராக வைக்கப்பட்டுள்ளது. அதுபோன்று பகுப்பாய்வு மையமும் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனை முன்பு தொடங்கப்பட்டு, அங்கு நோய் தொற்றுடன் வருபவர்கள் பரிசோதனை செய்யப்பட்டு நோயின் தீவிரத்திற்கு ஏற்ப சிகிச்சைக்கு அனுப்பி வைக்கப்படுகின்றனர்.
ஆக்சிஜனும் தேவையான அளவு உள்ளது. 3-வது அலை வேகமாக பரவி வந்தாலும் தமிழக அரசு எடுத்துவரும் நடவடிக்கையால் நோய் கட்டுக்குள் உள்ளது", இவ்வாறு தெரிவித்தார். இந்நிகழ்ச்சியில் பாளையங்கோட்டை சட்டமன்ற உறுப்பினர் அப்துல்வகாப் உள்ளிட்ட அரசுத்துறை அதிகாரிகள் கலந்து கொண்டனர்.
No comments:
Post a Comment