ஞாயிறு ஊரடங்கு; எதுக்கு வெளியே வந்தீங்க; ஃபைன் கட்டிட்டு போங்க!
ஞாயிறு முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளதால் தேவையில்லாமல் வெளியே சுற்றியவர்களுக்கு அபராதம் விதிக்கப்பட்டது!
திருப்பூரில் ஞாயிறு முழு ஊரடங்கு காரணமாக மாநகரில் உள்ள அனைத்து சாலைகளும் வெறிச்சோடியது. இம்மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளிலும் காவல் துறையினர் சாலை தடுப்புகளை ஏற்படுத்தி உள்ளதால் அத்தியாவசிய தேவைக்காக செல்லும் கனரக வாகனங்களை தவிர்த்து வாகனப் போக்குவரத்து இன்றி மாவட்டமே அமைதியானது.
கொரோனா மூன்றாம் அலையின் காரணமாக தமிழக அரசின் முழு ஊரடங்கினால் திருப்பூர் மாநகரின் முக்கிய சாலைகள் அனைத்தும் மக்கள் நடமாட்டம் இன்றியும், வாகனப் போக்குவரத்து இல்லாமல் சாலைகள் அனாதையாகின.திருப்பூர் புதிய - பழைய பேருந்து நிலையங்கள், மார்க்கெட் வீதி, அவிநாசி சாலை, பல்லடம் சாலை உள்ளிட்ட அனைத்து பகுதிகளிலும் கடைகள் முழுமையாக அடைக்கப்பட்டிருந்தது. மேலும் மாநகரில் 200க்கும் மேற்பட்ட காவல் துறையினரும் ரோந்துப் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். அத்தியாவசியப் பணிகள் இல்லாமல் வெளியில் சுற்றும் வாகன ஓட்டிகளின் மீது வழக்குப்பதிவு செய்வதுடன், அபராதமும் விதித்தனர்.
குறிப்பாக திருப்பூர் பேருந்து நிலையம், மாநகராட்சி சந்திப்பு பகுதிகளில் போலீசார் வாகன சோதனை மேற்கொண்டனர். தேவையில்லாமல் சுற்றித்திரிந்தவர்களுக்கு போலீசார் அவர்களுக்கு அபராதம் விதித்தனர். அதே வேளையில், பால் விநியோகம், மருந்தகங்கள், பெட்ரோல் பங்குகள்,பத்திரிகை விநியோகம் ஆகியவை வழக்கம் போல் செயல்பட்டது.
இதே போல் மாவட்டத்தில் உள்ள மற்ற பகுதிகளிலும் போலீசார் சோதனை சாவடிகள் அமைத்து இருப்பதால் அத்தியாவசிய பொருட்கள் ஏற்றி வரும் சரக்கு வாகனங்கள் மட்டும் அனுமதிக்கப்பட்டது.
No comments:
Post a Comment