வரலாற்று ஆய்வாளர் ஆர்.நாகசாமி உடல் நலக்குறைவால் காலமானார்!
முதுபெரும் தொல்லியல் அறிஞரும், கல்வெட்டு ஆய்வாளருமான நாகசாமி(91) உடல் நலக்குறைவால் சென்னையில் உயிரிழந்தார்.
தமிழ்நாடு அரசின் தொல்லியல் துறையின் முதல் இயக்குனராக பணிபுரிந்து ஓய்வு பெற்றவர் இரா.நாகசாமி சென்னை பல்கலைக்கழகத்தில் சமஸ்கிருத துறையில் பட்டம் பெற்றவர். தொல்லியல் ஆய்வு மற்றும் கல்வெட்டு ஆய்வுகள் மீது பற்றுக்கொண்ட இவர், செந்தமிழ் நாடும் பண்பும், மகாபலிபுரம், திருக்குறள் குறித்த ஆய்வு உள்ளிட்ட பல்வேறு வரலாற்று நூல்களை எழுதியுள்ளார்.
குறிப்பாக, சேக்கிழாரின் பெரியபுராண வரலாற்று பாதை குறித்த ஆய்வுப்பணிக்காக தமிழக அரசின் கலைமாமணி விருதினை பெற்றுள்ளார். அதோடு, லண்டன் நடராஜா வழக்கில் லண்டன் உயர்நீதிமன்றத்தில் நிபுணத்துவ சாட்சியாக நாகசாமி ஆஜரானார். இவரது ஆய்வுகளை பாராட்டும் விதமாக மத்திய அரசு 2018ம் ஆண்டு பத்ம பூஷன் விருது வழங்கி கவுரவித்தது.
இந்திய தொல்லியல் ஆய்வகத்தில் தொல்லியல் துறையில் பயிற்சி செய்த நாகசாமி, 1959 - 1963 ஆண்டு வரை சென்னை அரசு அருங்காட்சியகத்தின் பாதுகாவலராக பணியில் சேர்ந்தார். பின்னர், 1963 - 1966-ஆம் ஆண்டு வரை தமிழ்நாடு அரசு தொல்லியல் துறையின் உதவி சிறப்பு அதிகாரியாககவும், 1966 - 1988-ஆம் ஆண்டு வரை தமிழ்நாடு அரசு தொல்லியல் துறையின் முதலாவது இயக்குனராகவும் இருந்தார்.
வயதுமூப்பு மற்றும் உடல் நலக்குறைவால் அவதியடைந்து வந்த நாகசாமி சென்னை பெசன்ட்நகரில் உள்ள இல்லத்தில் இன்று காலை உயிரிழந்தார். அவருக்கு வயது 91. நாகசாமியின் மறைவுக்கு வரலாற்று ஆய்வாளர்கள் மற்றும் பொதுமக்கள் அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.
No comments:
Post a Comment