ஆட்சி மாறினாலும் காட்சி மாறவில்லை… விழுப்புரம் விவசாயிகள் வேதனை!
விழுப்புரம் மாவட்டம் திருவெண்ணெய்நல்லூர் ஒழுங்கு முறை விற்பனை கூடத்தில் போதிய இட வசதி இல்லாததால் விற்பனைக்காக கொண்டுவரப்படும் நெல்மணிகள் சாலை ஓரத்தில் கொட்டப்பட்டுள்ளதால் விவசாயிகள் கவலையடைந்துள்ளனர்.
விழுப்புரம் மாவட்டம் திருவெண்ணெய்நல்லூர் பகுதியான ஏமப்பூர், கன்னாரம்பட்டு,பெரிய செவலை, சரவணபாக்கம், எடையார் உள்ளிட்ட 50-க்கும் மேற்பட்ட கிராமங்களில் 30 ஆயிரம் ஏக்கர் பரப்பளவில் நெல் சாகுபடி செய்யப்பட்டுள்ளது. அவ்வாறு பயிரிடக்கூடிய நெல் அறுவடை செய்யும் 50 கிராமங்களை சேர்ந்தவர்கள் விற்பனைக்காக திருவெண்ணெய்நல்லூர் ஒழுங்கு முறை விற்பனை கூடத்திற்கு கொண்டு வருகின்றனர்.
விற்பனைக்காக கொண்டு வரப்படும் நெல் மூட்டைகள் ஒழுங்கு முறை விற்பனை கூடத்தில் 1,500 மூட்டைகள் தேக்கும் அளவிற்கு மட்டுமே இடவசதி உள்ளது. போதிய இடவசதி இல்லாததால் விற்பனைக்காக கொண்டு வரும் நெல்மணிகளை சாலையின் ஓரத்தில் குவியல் குவியலாக வைத்துவிட்டு விவசாயிகள் காத்திருக்கும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர்.
மழை, பனி போன்ற காலங்களில் விற்பனைக்காக கொண்டுவரப்படும் நெல்மணிகள் சாலை ஓரத்திலேயே கொட்டி 5 நாட்களுக்கு மேலாக காத்துகிடப்பதாகவும், ஒழுங்கு முறை விற்பனை கூடத்தினை பாதுகாப்பான விலாசமான இடத்திற்கு மாற்றக்கோரி பலமுறை கோரிக்கை வைத்தும் நடவடிக்கை எடுக்கவில்லை என விவசாயிகள் வேதனை தெரிவிக்கின்றனர்.
நெல்மணிகள் சாலையின் ஓரத்தில் கிடப்பதால் போக்குவரத்திற்கு இடையூறு ஏற்படுவதோடு மட்டுமல்லாமல் மூட்டையை கொள்முதல் செய்ய 20 ரூபாய் வரை அதிகாரிகள் லஞ்சம் பெறுவதாக விவசாயிகள் குற்றஞ்சாட்டியுள்ளனர். அப்பகுதியில் முறையான நெல் கொள்முதல் நிலையம் அமைக்க வேண்டும் என்பது விவசாயிகளின் முக்கிய கோரிக்கையாக உள்ளது.
No comments:
Post a Comment